பாடல் 716 - உத்தரமேரூர் - திருப்புகழ்

ராகம் - ...;:
தாளம் -
தானனத் தனதான தானனத் தனதான தானனத் தனதான ...... தனதான |
நீள்புயற் குழல்மாதர் பேரினிற் க்ருபையாகி நேசமுற் றடியேனு ...... நெறிகெடாய் நேமியிற் பொருள்தேடி யோடியெய்த் துளம்வாடி நீதியிற் சிவவாழ்வை ...... நினையாதே பாழினுக் கிரையாய நாமம்வைத் தொருகோடி பாடலுற் றிடவேசெய் ...... திடுமோச பாவியெப் படிவாழ்வ னேயர்கட் குளதான பார்வைசற் றருளோடு ...... பணியாயோ ஆழியிற் றுயில்வோனு மாமலர்ப் பிரமாவு மாகமப் பொருளோரு ...... மனைவோரும் ஆனைமத் தகவோனும் ஞானமுற் றியல்வோரு மாயிரத் திருநூறு ...... மறையோரும் வாழுமுத் தரமேருர் மேவியற் புதமாக வாகுசித் திரதோகை ...... மயிலேறி மாறெனப் பொருசூர னீறெழப் பொரும்வேல மான்மகட் குளனான ...... பெருமாளே. |
நீண்ட மேகம் போல் இருண்ட கூந்தல் உடைய விலைமாதர்களின் மேல் அன்பு வைத்து, மிகவும் நேசம் அடைந்து அடியேனும் நன்னெறியை இழந்தவனாய், பூமியில் பொருள் தேடுவதற்காக ஓடி இளைத்து, மனம் சோர்ந்து, நீதியான மங்களகரமான வாழ்க்கையை வாழ நினையாமல், பாழுக்கே உணவாயிற்று என்னும்படியாக, மற்றவர்களுடைய பெயர்களை (தலைவர்களாக) கவிதையில் வைத்து, கோடிக் கணக்கான பாடல்கள் அமையும்படி இயற்றுகின்ற மோசக்காரப் பாவியாகிய நான் எங்ஙனம் வாழ்வேன்? (உனது) அன்பர்களுக்கு நீ வைத்துள்ள பார்வையை கொஞ்சம் திருவருள் வைத்து எனக்கும் பாலிக்க மாட்டாயா? திருப்பாற்கடலில் பள்ளி கொள்ளும் திருமாலும், தாமரையில் வீற்றிருக்கும் பிரமனும், சிவாகமத்துக்கு உரிய மூல முதல்வராகிய சிவபெருமானும், பிறர் யாவரும், ஆனைமுகமும் மத்தகமும் கொண்ட கணபதியும், ஞானம் அடைந்து உலவும் ஞானிகளும், ஆயிரத்து இரு நூறு* மறையவர்களும் வாழ்கின்ற உத்தரமேரூரில்** வீற்றிருந்து, அற்புதமாக, அழகிய விசித்திரமான கலாபத்தைக் கொண்ட மயிலின் மேல் ஏறி, பகைவன் எனச் சண்டை செய்யும் சூரன் தூளாக போர் செய்த வேலனே, மான் பெற்ற மகளான வள்ளிக்கு உரியவனாக விளங்கி நிற்கும் பெருமாளே.
* இவ்வாறே மற்ற ஊர்களிலும் வாழும் மறையவர் எண்ணிக்கை வருமாறு: திருப்பெருந்துறை = 300, தில்லை = 3,000, திரு ஆக்கூர் = 1,000, திருவீழிமிழலை = 500, சீகாழி = 400, மதுரை = 48,000.
** உத்தர மேரூர் செங்கற்பட்டுக்கு தென்மேற்கே 18 மைலில் உள்ளது.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 716 - உத்தரமேரூர் - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - தனதான, வைத்து, தானனத், கொண்ட, அடைந்து, மேல், பெருமாளே