பாடல் 699 - கோசைநகர் - திருப்புகழ்

ராகம் -....; தாளம்
-
தானதன தானதன தானதன தானதன தானதன தானதன ...... தனதான |
ஆதவித பாரமுலை மாதரிடை நூல்வயிற தாலிலையெ னாமதன ...... கலைலீலை யாவும்விளை வானகுழி யானதிரி கோணமதி லாசைமிக வாயடிய ...... னலையாமல் நாதசத கோடிமறை யோலமிடு நூபுரமு னானபத மாமலரை ...... நலமாக நானநுதி னாதினமு மேநினைய வேகிருபை நாடியரு ளேயருள ...... வருவாயே சீதமதி யாடரவு வேரறுகு மாஇறகு சீதசல மாசடில ...... பரமேசர் சீர்மைபெற வேயுதவு கூர்மைதரு வேலசிவ சீறிவரு மாவசுரர் ...... குலகாலா கோதைகுற மாதுகுண தேவமட மாதுமிரு பாலுமுற வீறிவரு ...... குமரேசா கோசைநகர் வாழவரு மீசடியர் நேசசரு வேசமுரு காவமரர் ...... பெருமாளே. |
அன்பும் இன்பமும் தருவதான கனத்த மார்பகங்கள், விலைமாதர்களுடைய இடுப்பு நூலைப் போன்றது, வயிறு ஆலின் இலையைப் போன்றது, என்று உவமை கூறி, மன்மதனுடைய காம சாஸ்திர விளையாடல்கள் எல்லாம் உண்டாகும் குழியான முக்கோணமான பெண்குறியில் மிக்க ஆசை கொண்டு அடியேன் அலைச்சல் உறாமல், நாதனே, நூறு கோடி ஆகம மந்திர உபதேசப் பொருள்களை சத்தத்தால் தெரிவிக்கும் சிலம்புகள் முன்னதாகவே விளங்கும் பாதத் தாமரைத் திருவடிகளை நன்மை பெறுமாறு, நான் நாள்தோறும் நினைக்கும்படி, உனது கருணையை நாடிவரும்படி, உனது திருவருளை அருள் புரிய வருவாயாக. குளிர்ச்சியான நிலா, ஆடும் பாம்பு, அழகிய அறுகம் புல், கொக்கின் இறகு, குளிர்ந்த கங்கை நீர் (இவைகளைக் கொண்ட) அழகிய சடையை உடைய சிவபெருமான் உலகங்கள் செம்மை பெறவே தந்த கூரிய வேலனே, சிவனே, கோபித்து வரும் பெரிய அசுரர்கள் குலத்துக்கு யமனே, நல்லவளான குறப் பெண் வள்ளி, நற்குணம் உள்ள தேவநாட்டு அழகிய மாது (தேவயானை) இரண்டு பக்கமும் பொருந்த விளக்கத்துடன் வரும் குமரேசனே, கோசை நகர்* எனப்படும் கோயம்பேட்டில் வீற்றிருக்கும் ஈசனே, அடியார்களுக்கு அன்பனே, சர்வேசனே, முருகனே, தேவர்களின் பெருமாளே.
* கோயம்பேடு சென்னை நகரின் ஒரு பகுதி.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 699 - கோசைநகர் - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - தானதன, அழகிய, வரும், போன்றது, பெருமாளே, உனது