பாடல் 659 - வெள்ளிகரம் - திருப்புகழ்

ராகம் - ...;
தாளம் -
தனதன தய்ய தனதன தய்ய தனதன தய்ய ...... தனதான |
பொருவன கள்ள இருகயல் வள்ளை புரிகுழை தள்ளி ...... விளையாடும் புளகித வல்லி யிளகித வல்லி புரியிள முல்லை ...... நகைமீதே உருகிட வுள்ள விரகுடை யுள்ள முலகுயி ருள்ள ...... பொழுதேநின் றுமைதரு செல்வ னெனமிகு கல்வி யுணர்வொடு சொல்ல ...... வுணராதோ மருவலர் வள்ளி புரமுள வள்ளி மலைமற வள்ளி ...... மணவாளா வளர்புவி யெல்லை யளவிடு தொல்லை மரகத நல்ல ...... மயில்வீரா அருவரை விள்ள அயில்விடு மள்ள அணிவயல் வெள்ளி ...... நகர்வாழ்வே அடையலர் செல்வ மளறிடை செல்ல அமர்செய வல்ல ...... பெருமாளே. |
போர் செய்யவல்ல கள்ளத்தனம் உள்ள கயல் மீன் போல் இரண்டு கண்கள் வள்ளிக் கொடி போன்ற காதுகளைத் தாக்கி விளையாடுகின்ற புளகாங்கிதம் கொண்ட, கொடி போல் இடை வாய்ந்த, இளம் பெண்கள் புன்னகை புரியும் போது தெரியும் முல்லை அரும்பு போன்ற பற்களைக் கண்டு, உருகத் தக்க உற்சாகத்தை அடையும் என் மனம், இவ்வுலகில் உயிர் இருக்கும் பொழுதே நிலைத்து நின்று உமாதேவியார் பெற்றெடுத்த செல்வனே என்று உன்னை மிகுந்த கல்வி உணர்ச்சியோடு சொல்லுவதற்குத் தெரிந்து கொள்ளாதோ? வாசனை மலர்கள் உள்ள வள்ளிபுரத்தில் உள்ள வள்ளி மலையில் இருக்கும் குறப்பெண் வள்ளியின் கணவனே, பெரிதாக உள்ள பூமியின் முழு எல்லையையும் (பறந்தே) அளவிட்ட, பழைய மரகதப் பச்சை நிறமுள்ள அழகிய மயில் மீதேறும் வீரனே, அரிய கிரவுஞ்ச மலை உடைபடுமாறு வேலாயுதத்தைச் செலுத்திய போர் வீரனே, அழகிய வயல்கள் சூழ்ந்த வெள்ளி நகரில் வாழும் செல்வமே, பகைவர்களின் செல்வம் எல்லாம் சேற்றிடையே படிந்து அழியுமாறு போர் செய்ய வல்ல பெருமாளே.
* வெள்ளிகரம் அரக்கோணத்துக்கு வடக்கே 22 மைலில் உள்ள வேப்பகுண்டா ரயில் நிலையத்துக்கு மேற்கே 12 மைலில் உள்ளது.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 659 - வெள்ளிகரம் - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - உள்ள, வள்ளி, தனதன, போர், தய்ய, போல், கொடி, இருக்கும், மைலில், வீரனே, அழகிய, வல்ல, முல்லை, வல்லி, செல்வ, கல்வி, வெள்ளி, பெருமாளே