பாடல் 629 - குன்றக்குடி - திருப்புகழ்

ராகம் - ...;
தாளம் -
தானான தனதான தானான தனதான தானான தனதான ...... தனதான |
நாமேவு குயிலாலு மாமார னயிலாலு நாடோறு மதிகாயும் ...... வெயிலாலும் நார்மாதர் வசையாலும் வேயூது மிசையாலு நாடாசை தருமோக ...... வலையூடே ஏமாறி முழுநாளு மாலாகி விருதாவி லேவாரும் விழிமாதர் ...... துயரூடே ஏகாம லழியாத மேலான பதமீதி லேகீயு னுடன்மேவ ...... அருள்தாராய் தாமோக முடனூறு பால்தேடி யுரலூடு தானேறி விளையாடு ...... மொருபோதில் தாயாக வருசோதை காணாது களவாடு தாமோத ரன்முராரி ...... மருகோனே மாமாது வனமாது கார்மேவு சிலைமாது மாலாகி விளையாடு ...... புயவீரா வானாடு புகழ்நாடு தேனாறு புடைசூழ மாயூர கிரிமேவு ...... பெருமாளே. |
நாவால் கூவி இசைக்கும் குயிலின் பாட்டாலும், சிறந்த மன்மதனுடைய கூரிய பாணங்களாலும், நாள் தோறும் வெய்யில் போல் காய்கின்ற நிலவின் ஒளியாலும், அன்பும் அக்கரையும் உள்ள மாதர்கள் பேசும் வசை மொழியாலும், புல்லாங்குழல் ஊதும் இசையாலும், விரும்புகிற ஆசையால் வரும் மோகம் என்கின்ற வலைக்குள், ஏமாற்றம் அடைந்து நாள் முழுதும் காம இச்சையால் வீணாகவே நீண்ட கண்களை உடைய மாதர்களால் ஏற்படும் ஏச்சுத் துயரத்துக்குள் வீழாமல், அழிவில்லாததும், மேலானதுமான நிலையை அடைந்து உன்னுடன் நான் பொருந்தி இருக்க அருள் புரிவாயாக. தாம் ஆசையுடன் கறந்த பாலைத் தேடி உரலுடன் ஏறி விளையாடும் ஒரு பொழுதில், தாயாக (அங்கு) வந்த யசோதை (அந்தப்) பாலைக் காண முடியாதபடி திருடிய தாமோதரன்* (ஆகிய) திருமாலின் மருகனே, சிறந்த லக்ஷ்மி போன்ற மாது, காட்டில் வளர்ந்த மாது, மேகம் தவழும் (வள்ளி) மலையில் வாழ்ந்த மாது ஆகிய வள்ளி ஆசை பூண்டு விளையாடுகின்ற புயங்களை உடைய வீரனே, விண்ணோர்களும் புகழும் நாட்டில் தேனாறு பக்கத்தில் சூழ்ந்து வரும் மாயூர கிரி எனப்படும் குன்றக் குடியில்** வீற்றிருக்கும் பெருமாளே.
* தாமம் = கயிறு, உதரம் = வயிறு, கயிற்றினால் வயிற்றில் கட்டப்பட்டதால் தாமோதரன் ஆயினான்.
** குன்றக்குடி ராமநாதபுரம் மாவட்டத்தில் காரைக்குடிக்கு மேற்கே 7 மைலில் உள்ளது.இப்பாடல் அகத்துறையில் 'நாயக நாயகி' பாவத்தில் புலவர் தம்மையே நாயகியாக எண்ணிப் பாடியது.குயிலின் இசை, நிலவு, மன்மதன், அவனது அம்புகள், வசை பேசும் மாதர், புல்லாங்குழலின் இசை முதலியவை தலைவனின் பிரிவை மிகவும் அதிகமாக்கும் பொருட்கள்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 629 - குன்றக்குடி - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - தனதான, தானான, மாது, வரும், பேசும், அடைந்து, ஆகிய, வள்ளி, நாள், உடைய, குயிலின், விளையாடு, மாலாகி, தாயாக, தேனாறு, பெருமாளே, மாயூர, சிறந்த