பாடல் 618 - கநகமலை - திருப்புகழ்

ராகம் - ஸாவேரி ;
தாளம் - அங்கதாளம் - 6
தகதகிட-2 1/2, தகிட-1 1/2, தகதிமி-2
தகதகிட-2 1/2, தகிட-1 1/2, தகதிமி-2
தனதனன தனன தந்தத் தனதனன தனன தந்தத் தனதனன தனன தந்தத் ...... தனதான |
அரிவையர்கள் தொடரு மின்பத் துலகுநெறி மிகம ருண்டிட் டசடனென மனது நொந்திட் ...... டயராமல் அநுதினமு முவகை மிஞ்சிச் சுகநெறியை விழைவு கொண்டிட் டவநெறியின் விழையு மொன்றைத் ...... தவிர்வேனோ பரிதிமதி நிறைய நின்ற· தெனவொளிரு முனது துங்கப் படிவமுக மவைகள் கண்டுற் ...... றகமேவும் படர்கள்முழு வதும கன்றுட் பரிவினொடு துதிபு கன்றெற் பதயுகள மிசைவ ணங்கற் ...... கருள்வாயே செருவிலகு மசுரர் மங்கக் குலகிரிகள் நடுந டுங்கச் சிலுசிலென வலைகு லுங்கத் ...... திடமான செயமுதவு மலர்பொ ருங்கைத் தலமிலகு மயில்கொ ளுஞ்சத் தியைவிடுதல் புரியு முன்பிற் ...... குழகோனே கருணைபொழி கிருபை முந்தப் பரிவினொடு கவுரி கொஞ்சக் கலகலென வருக டம்பத் ...... திருமார்பா கரிமுகவர் தமைய னென்றுற் றிடுமிளைய குமர பண்பிற் கநககிரி யிலகு கந்தப் ...... பெருமாளே. |
மாதர்களைப் பின் தொடர்ந்து செல்லும் சிற்றின்பம் சார்ந்த உலகநெறியில் மிகுந்த மோகம் கொண்டு, அசடன் எனக் கருதப்பட்டு, மனம் வேதனைப்பட்டுச் சோர்வுறாமல், நாள் தோறும் களிப்பு மிகுந்து, அற்ப சுகவழியிலேயே விருப்பம் கொண்டு நடந்து, பாவ வழியிலே செல்ல விரும்பும் புத்தியை நான் நீக்க மாட்டேனோ? சூரியனும் சந்திரனும் சேர்ந்து நிற்கும் தன்மையை ஒத்து ஒளிருகின்ற உன் பரிசுத்தமான வடிவுள்ள திருமுகங்களைக் கண்டு, என் மனத்திலுள்ள துயரம் யாவும் நீங்கப் பெற்று, உள்ளத்தில் அன்போடு உன்னைத் துதித்து, ஒளி பொருந்திய உன் திருவடிகள் மீது வணங்குதற்கு அருள் புரிவாயாக. போர்க்களத்தில் பின்னடையும் அசுரர்களின் பெருமை மங்க, பெருமை தங்கிய (கிரெளஞ்சம் முதலிய) மலைகளெல்லாம் நடுநடுங்க, சிலுசிலுவென்று கடல் அலைகள் கலங்க, உறுதி வாய்ந்ததும், வெற்றி தருவதும், மலர் போன்றதுமான திருக்கரத்தில் விளங்கும் கூர்மையான சக்திவேலாயுதத்தை செலுத்தும் பெருமை வாய்ந்த இளையோனே, கருணை பொழியும் அருளே முந்துவதால் அன்போடு கெளரி (பார்வதி) கொஞ்சி நிற்க, கலகல என்று தண்டை ஒலிக்க வரும் கடப்ப மாலை அணி மார்பனே, யானைமுகக் கணபதியைத் தமையனாகப் பெற்று விளங்கும் இளைய சகோதரக் குமரனே, அழகோடு கனககிரி* (பொன்மலை) யில் வாழும் கந்தப் பெருமாளே.
* கனகமலை வட ஆற்காடு மாவட்டத்தில் போரூர் ரயில் நிலையத்துக்கு கிழக்கே 9 மைலில் தேவிகாபுரத்தின் அருகே உள்ளது.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 618 - கநகமலை - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - பெருமை, தந்தத், தனதனன, அன்போடு, விளங்கும், பெற்று, பெருமாளே, பரிவினொடு, கந்தப், கொண்டு