பாடல் 604 - திருச்செங்கோடு - திருப்புகழ்

ராகம் - ...;
தாளம் -
தத்தத்தத் தத்தத் தத்தத் தத்தத்தத் தத்தத் தத்தத் தத்தத்தத் தத்தத் தத்தத் ...... தனதான |
பொற்சித்ரப் பச்சைப் பட்டுக் கச்சிட்டுக் கட்டிப் பத்மப் புட்பத்துக் கொப்பக் கற்பித் ...... திளைஞோர்கள் புட்பட்டுச் செப்பத் துப்பற் கொத்தப்பொற் றித்தத் திட்பப் பொற்பிற்பெற் றுக்ரச் சக்ரத் ...... தனமானார் கற்சித்தச் சுத்தப் பொய்ப்பித் தத்திற்புக் கிட்டப் பட்டுக் கைக்குத்திட் டிட்டுச் சுற்றித் ...... திரியாமல் கற்றுற்றுச் சித்திக் கைக்குச் சித்திப்பப் பக்ஷத் திற்சொற் கற்பித்தொப் பித்துக் கொற்றக் ...... கழல்தாராய் குற்சித்துக் கொட்டுக் கொட்டுத் துக்கச்சத் துக்குக் குக்குக் குக்குக்குக் குக்குக் குக்குக் ...... கெனமாறா குட்சிக்குப் பக்ஷிக் கைக்குக் கக்ஷத்திற் பட்சத் தத்தக் கொட்டிச்சுட் டிக்கொக் ரிக்குக் ...... குடதாரி சற்சித்துத் தொற்புத் திப்பட் சத்தர்க்கொப் பித்தட் சத்துச் சத்தத்தைச் சத்திக் கொச்சைப் ...... பதிவாழ்வே தக்ஷப்பற் றுக்கெர்ப் பத்திற் செற்பற்றைச் செற்றிட் டுச்சச் சற்பப்பொற் றைக்குட் சொக்கப் ...... பெருமாளே. |
அழகிய விசித்திரமான பச்சைப் பட்டாலாகிய ரவிக்கையை அணிவித்து இறுக்கிக் கட்டி, தாமரைப் பூவுக்கு (மார்பகம்) ஒப்பாகும் என்று கற்பனை செய்து, வலையில் சிக்கிய பறவை போல் விலைமாதர் வலையில் வாலிபர்கள் நன்றாகச் சிக்கி, (அந்த வேசியர்களின்) வரிசையான பற்களால் கடிபட்டு, பொன்னை வலுவில் அடைவதற்காக, அதனைத் தெளிவான வகையில் பக்குவமாகப் பேசிப் பெறுகின்ற, கொடிய சக்கரம் போன்று வட்ட வடிவமாக உள்ள மார்பகங்களை உடைய மாதர்களின் கல்லைப் போன்ற கடினமான மனம் என்ற சுத்தப் பொய்யான பித்துச் சூழலுக்குள் புகுந்து, அதில் அதிக விருப்பம் வைத்து, (தன்னைப் போல் அங்கே வரும் பிற காமுகர்களுடன்) கைக்குத்துச் சண்டையும் போட்டு சுற்றித் திரியாமல், உன்னை ஓதுதலைக் கொண்டு, நல்ல சித்தி கைகூடுதற்கு, கருணையோடு, (உன்னைத் துதிக்கும் சொற்கள்) தோன்றுமாறும், அந்தச் சொற்களை நான் ஒப்பிக்குமாறும் உனது வீரத் திருவடிகளைத் தருவாயாக. இரை கிடைக்காத வெறுப்பில் கொட்டுக் கொட்டென்னும் பசியால் வருத்தமும் திகிலும் கொண்டு, குக்குக் குக்குக்குக் குக்குக் குக்குக் என்று ஓயாமல் வயிற்றின் இரைக்காக தனது விலாப்புறத்து பக்கங்களில் சிறகை அடித்துக் கொட்டி, குறிப்புடன் கொக்கரிக்கின்ற சேவலைக் கொடியாகக் கொண்டவனே, என்றும் உள்ளவராய், அறிவே உருவானவராய், பழையவராய், ஞானியாய், அன்பு வாய்ந்த தந்தையாக நின்ற சிவபெருமானுக்கு ஓதி, எழுத்துகளின் இறை ஒலியை (தேவாரப் பாடல்களைப்) பாடிய வல்லமை வாய்ந்த சீகாழித் தலத்துத் திருஞான சம்பந்தப் பெருமானே, உடனே பற்றிக் கொள்வதும், கருவிலேயே ஊடுருவிச் செல்வதுமான பற்றை (பெண், மண், பொன் என்ற மூவாசைகளை) தடுத்து ஒழித்த மேலானதான நாக மலை என்னும் திருச்செங்கோட்டில்* உறையும் அழகிய பெருமாளே.
* திருச்செங்கோடு சேலம் மாவட்டம் சங்கரிதுர்க்கம் ரயில் நிலையத்திலிருந்து 6 மைல் தொலைவில் மலைமீது உள்ளது.மலை பாம்பின் உருவில் இருப்பதால் நாகமலை என்றும், சிவந்து இருப்பதால் திருச்செங்கோடு என்றும் பெயர் பெற்றது.'செங்கோடனைக் கண்டுதொழ நாலாயிரம் கண் படைத்திலனே அந்த நான்முகனே' - என கந்தர் அலங்காரத்தில் சுவாமிகள் பாடியுள்ளார்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 604 - திருச்செங்கோடு - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - குக்குக், தத்தத், தத்தத்தத், என்றும், இருப்பதால், போல், திருச்செங்கோடு, அந்த, வலையில், கொண்டு, வாய்ந்த, குக்குக்குக், சுத்தப், பட்டுக், பச்சைப், சுற்றித், திரியாமல், பெருமாளே, கொட்டுக், அழகிய