பாடல் 602 - திருச்செங்கோடு - திருப்புகழ்

ராகம் -
பீம்பளாஸ் ; தாளம் - ஆதி
- எடுப்பு - 3/4 இடம்
- எடுப்பு - 3/4 இடம்
தத்தன தத்தன தத்தன தத்தன தத்தன தத்தன ...... தனதான |
பத்தர்க ணப்ரிய நிர்த்தந டித்திடு பட்சிந டத்திய ...... குகபூர்வ பச்சிம தட்சிண வுத்தர திக்குள பத்தர்க ளற்புத ...... மெனவோதுஞ் சித்ரக வித்துவ சத்தமி குத்ததி ருப்புக ழைச்சிறி ...... தடியேனுஞ் செப்பென வைத்துல கிற்பர வத்தெரி சித்தவ நுக்ரக ...... மறவேனே கத்திய தத்தைக ளைத்துவி ழத்திரி கற்கவ ணிட்டெறி ...... தினைகாவல் கற்றகு றத்திநி றத்தக ழுத்தடி கட்டிய ணைத்தப ...... னிருதோளா சத்தியை யொக்கஇ டத்தினில் வைத்தத கப்பனு மெச்சிட ...... மறைநூலின் தத்துவ தற்பர முற்றுமு ணர்த்திய சர்ப்பகி ரிச்சுரர் ...... பெருமாளே. |
அடியார் திருக்கூட்டத்தின் மீது அன்புள்ளவனே, நடனம் ஆடவல்ல மயிலை வாகனமாகக் கொண்டு உலவும் குகமூர்த்தியே, கிழக்கு, மேற்கு, தெற்கு, வடக்கு ஆகிய நாலாதிசைகளிலும் உள்ள அன்பர்கள் இது அற்புதம் என வியந்து கொண்டாடும் அழகிய கவிபாடும் திறத்தின் ஒலி மிகுந்துள்ள திருப்புகழை ஓரளவுக்காவது நானும் சொல்லும்படியாக வைத்தும், அப்பாடல்கள் உலகெங்கும் பரவும்படியாகச் செய்தும், திருப்புகழில் உன்னைத் தரிசனம் செய்வித்த அருளை அடியேன் ஒரு நாளும் மறக்க மாட்டேன். கத்துகின்ற கிளிகள் களைத்து விழும்படி சுழற்றும் கவணில் கல்லை வைத்து எறிகின்ற, தினைப்புனத்தைக் காவல் செய்யக் கற்ற குறத்தி வள்ளியின் அழகிய நிறமுடைய கழுத்தினைக் கட்டி அணைத்த பன்னிரண்டு புயங்களை உடையவனே, பராசக்தியைப் பொருந்த தன் இடப்பக்கத்தில் வைத்த தந்தையாகிய சிவ பெருமானும் மெச்சும்படி வேத நூலின் மெய்ப்பொருள் பரம்பொருள் அனைத்தையும் உபதேசித்து விளக்கிய நாகமலையில்* வாழும், தேவர்கள் போற்றும் பெருமாளே.
* திருச்செங்கோடு சேலம் மாவட்டம் சங்கரிதுர்க்கம் ரயில் நிலையத்திலிருந்து 6 மைல் தொலைவில் மலைமீது உள்ளது.மலை பாம்பின் உருவில் இருப்பதால் நாகமலை என்றும், சிவந்து இருப்பதால் திருச்செங்கோடு என்றும் பெயர் பெற்றது.'செங்கோடனைக் கண்டுதொழ நாலாயிரம் கண் படைத்திலனே அந்த நான்முகனே' - என கந்தர் அலங்காரத்தில் சுவாமிகள் பாடியுள்ளார்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 602 - திருச்செங்கோடு - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - தத்தன, இருப்பதால், என்றும், திருச்செங்கோடு, அழகிய, பத்தர்க, பெருமாளே