பாடல் 591 - திருச்செங்கோடு - திருப்புகழ்

ராகம் - ...;
தாளம் -
தந்த தாத்தத் தனத்தந் தாத்தத் தந்த தாத்தத் தனத்தந் தாத்தத் தந்த தாத்தத் தனத்தந் தாத்தத் ...... தனதான |
துஞ்சு கோட்டிச் சுழற்கண் காட்டிக் கொங்கை நோக்கப் பலர்க்குங் காட்டிக் கொண்ட ணாப்பித் துலக்கஞ் சீர்த்துத் ...... திரிமானார் தொண்டை வாய்ப்பொற் கருப்பஞ் சாற்றைத் தந்து சேர்த்துக் கலக்குந் தூர்த்தத் துன்ப வாழ்க்கைத் தொழிற்பண் டாட்டத் ...... துழலாதே கஞ்சம் வாய்த்திட் டவர்க்குங் கூட்டிக் கன்று மேய்த்திட் டவர்க்குங் கூற்றைக் கன்ற மாய்த்திட் டவர்க்குந் தோற்றக் ...... கிடையாநீ கண்டு வேட்டுப் பொருட்கொண் டாட்டத் தின்ப வாக்யத் தெனக்குங் கேட்கத் தந்து காத்துத் திருக்கண் சாத்தப் ...... பெறுவேனோ வஞ்ச மாய்ப்புக் கொளிக்குஞ் சூற்கைத் துன்று சூர்ப்பொட் டெழச்சென் றோட்டிப் பண்டு வாட்குட் களிக்குந் தோட்கொத் ...... துடையோனே வண்டு பாட்டுற் றிசைக்குந் தோட்டத் தண்கு ராப்பொற் புரக்கும் பேற்றித் தொண்டர் கூட்டத் திருக்குந் தோற்றத் ...... திளையோனே கொஞ்சு வார்த்தைக் கிளித்தண் சேற்கட் குன்ற வேட்டிச் சியைக்கண் காட்டிக் கொண்டு வேட்டுப் புனப்பைங் காட்டிற் ...... புணர்வோனே கொங்கு லாத்தித் தழைக்குங் காப்பொற் கொண்ட லார்த்துச் சிறக்குங் காட்சிக் கொங்கு நாட்டுத் திருச்செங் கோட்டுப் ...... பெருமாளே. |
சோர்வு உற்றது போலக் கண்ணைச் சிமிட்டிக் காட்டி, மார்பகங்கள் தெரியும்படி பலருக்கும் காட்டி, அழைத்துக் கொண்டு போய் ஏமாற்றி, தங்கள் கீர்த்தி விளக்கமாக சிறப்புடன் ஓங்குமாறு திரிகின்ற விலைமாதர்களின் கொவ்வைக் கனி போன்ற அழகிய வாயிதழின் கரும்பு போல் இனிக்கும் ஊறலைப் பருகச் செய்து, அணைத்துச் சேர்ந்து மயக்கத்தைத் தரும் காம ஆசையால் வருகின்ற துன்ப வாழ்க்கைத் தொழிலாகிய பழைய ஆட்டங்களில் சுழன்று திரியாமல், தாமரையில் வீற்றிருக்கும் பிரமனுக்கும், கன்றுகளை ஒன்று சேர்த்து மேய்த்திட்ட கண்ணனாகிய திருமாலுக்கும், யமனை வாட்டமுற்று மாயும்படி செய்த சிவ பெருமானுக்கும் காண்பதற்குக் கிட்டாத நீ, என்னைப் பார்த்து, என் மீது விருப்பம் கொண்டு, கொண்டாடத் தக்க பொருள் அமைந்த இன்ப உபதேச வார்த்தையை அடியேனாகிய நானும் கேட்டு உணரும்படி போதித்துக் காத்து, உனது திருக் கண்ணோக்கம் அடியேன் மீது படும்படியான பாக்கியத்தைப் பெறுவேனோ? வஞ்சகமாகப் புகுந்து (கடலில்) ஒளிந்து கொண்டவனும், சூலம் ஏந்திய கையோடு நெருங்கியவனுமான சூரன் அழிந்து போகும்படி அவனைத் தேடிச் சென்று ஓட வைத்து, முன்பு, வாளாயுதத்தைச் செலுத்தி இன்புறும் பன்னிரு தோள் கொத்தை உடையவனே, வண்டுகள் பாடல் பாடி இசை எழுப்பும் தோட்டத்தில், குளிர்ந்த குரா மலர் சூடிய அழகிய மார்புடன், உன் திருப்புகழைப் போற்றும் அடியார் கூட்டத்திலிருந்து, அவர்களுக்குக் காட்சி அளிக்கும் இளையவனே, கொஞ்சும் சொற்களை உடைய கிளி போன்றவளை, குளிர்ந்த மலையில் வாழ்கின்ற சேல் மீனைப் போல் கண்கள் கொண்ட வேடப் பெண்ணாகிய வள்ளியைக் கண் கொண்டு ஜாடை காட்டி அழைத்துச் சென்று, அவளை விரும்பி, தினைப் புனத்துப் பசுஞ்சோலையில் தழுவியவனே, வாசனையை வீசி உலவச் செய்து தழைத்திருக்கும் சோலைகளில், அழகிய மேகங்கள் நிறைந்து சிறந்து நிற்கும் காட்சியைக் கொண்ட கொங்கு நாட்டில் உள்ள திருச்செங்கோட்டில்* உறையும் பெருமாளே.
* திருச்செங்கோடு சேலம் மாவட்டம் சங்கரிதுர்க்கம் ரயில் நிலையத்திலிருந்து 6 மைல் தொலைவில் மலைமீது உள்ளது. மலை பாம்பின் உருவில் இருப்பதால் நாகமலை என்றும், சிவந்து இருப்பதால் திருச்செங்கோடு என்றும் பெயர் பெற்றது.'செங்கோடனைக் கண்டுதொழ நாலாயிரம் கண் படைத்திலனே அந்த நான்முகனே' - என கந்தர் அலங்காரத்தில் சுவாமிகள் பாடியுள்ளார்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 591 - திருச்செங்கோடு - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - தாத்தத், கொண்ட, கொண்டு, காட்டிக், காட்டி, அழகிய, தந்த, கொங்கு, தனத்தந், சென்று, மீது, செய்து, குளிர்ந்த, திருச்செங்கோடு, என்றும், இருப்பதால், போல், டாட்டத், பெறுவேனோ, வேட்டுப், வாழ்க்கைத், துன்ப, தந்து, பெருமாளே, டவர்க்குங்