பாடல் 563 - திருக்கற்குடி - திருப்புகழ்

ராகம் - ...;
தாளம் -
தனத்தத் தனத்தத் தனத்தத் தனத்தத் தனத்தத் தனத்தத் ...... தனதான |
குடத்தைத் தகர்த்துக் களிற்றைத் துரத்திக் குவட்டைச் செறுத்துக் ...... ககசாலக் குலத்தைக் குமைத்துப் பகட்டிச் செருக்கிக் குருத்தத் துவத்துத் ...... தவர்சோரப் புடைத்துப் பணைத்துப் பெருக்கக் கதித்துப் புறப்பட் டகச்சுத் ...... தனமாதர் புணர்ச்சிச் சமுத்ரத் திளைப்பற் றிருக்கப் புரித்துப் பதத்தைத் ...... தருவாயே கடத்துப் புனத்துக் குறத்திக் குமெத்தக் கருத்திச் சையுற்றுப் ...... பரிவாகக் கனக்கப் ரியப்பட் டகப்பட் டுமைக்கட் கடைப்பட் டுநிற்கைக் ...... குரியோனே தடத்துற் பவித்துச் சுவர்க்கத் தலத்தைத் தழைப்பித் தகொற்றத் ...... தனிவேலா தமிழ்க்குக் கவிக்குப் புகழ்ச்செய்ப் பதிக்குத் தருக்கற் குடிக்குப் ...... பெருமாளே. |
குடத்துக்கு (ஒப்பிடலாம் என்றால்) குடத்தை நொறுங்க உடையச் செய்தும், யானைக்கு (ஒப்பிடலாம் என்றால்) யானையைக் காட்டில் துரத்தியும், மலைக்கு (ஒப்பிடலாம் என்றால்) மலை குறுகி அடங்கியும், சக்ரவாகப் பட்சிகளின் கூட்டத்தின் குலத்துக்கு (ஒப்பிடலாம் என்றால்) (அந்தப் பட்சிகளை) வெட்கப்பட வைத்தும், ஆடம்பரம் காட்டி, அகந்தை பூண்டு, குருவின் நிலையிலிருந்து அறிவுரைகளை எடுத்து ஓதும் தவசிகளும் சோர்ந்து மயங்கும்படி, பருத்து, செழிப்புற்று, மிகவும் எழுச்சியுற்று வெளித் தோன்றுவதும் கச்சு அணிந்ததுமான மார்பகங்களை உடைய விலைமாதர்களின் கலவி என்னும் கடலில் ஊடாடுதல் நீங்கி இருக்க அருள் செய்து உன் திருவடியைத் தருவாயாக. காட்டில் தினைப் புனத்தில் இருந்த குறத்தி வள்ளியின் மேல் மிக்க ஆசை மனத்தில் கொண்டு, அன்புடனே மிகவும் காதல் பூண்டு, மை அணியப்பட்ட அவளுடைய கடைக் கண்ணில் வசப்பட்டு நிற்பதற்கு ஆளானவனே, (சரவண) மடுவில் தோன்றி, பொன்னுலகை வாழ்வித்த வீரம் பொருந்திய ஒப்பற்ற வேலனே, தமிழ்ப் பெருமாளே, கவி ராஜப் பெருமாளே, புகழப்படும் வயலூர் என்ற தலத்துப் பெருமாளே, மரங்கள் நிறைந்த திருக்கற்குடியில்* வீற்றிருக்கும் பெருமாளே.
* திருக்கற்குடி திருச்சிக்கு அருகேயுள்ள வயலூரின் பக்கத்தில் உள்ளது.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 563 - திருக்கற்குடி - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - தனத்தத், பெருமாளே, என்றால், ஒப்பிடலாம், மிகவும், காட்டில், பூண்டு