பாடல் 542 - திருக்கழுக்குன்றம் - திருப்புகழ்

ராகம் -
ஹிந்தோளம்; தாளம் - ஆதி-தேசாதி - 8
தனதனன தான தனதனன தான தனதனன தான ...... தனதான |
எழுகுநிறை நாபி அரிபிரமர் சோதி யிலகுமரன் மூவர் ...... முதலானோர் இறைவியெனு மாதி பரைமுலையி னூறி யெழுமமிர்த நாறு ...... கனிவாயா புழுகொழுகு காழி கவுணியரில் ஞான புநிதனென ஏடு ...... தமிழாலே புனலிலெதி ரேற சமணர்கழு வேற பொருதகவி வீர ...... குருநாதா மழுவுழைக பால டமரகத்ரி சூல மணிகரவி நோத ...... ரருள்பாலா மலரயனை நீடு சிறைசெய்தவன் வேலை வளமைபெற வேசெய் ...... முருகோனே கழுகுதொழு வேத கிரிசிகரி வீறு கதிருலவு வாசல் ...... நிறைவானோர் கடலொலிய தான மறைதமிழ்க ளோது கதலிவன மேவு ...... பெருமாளே. |
ஏழு உலகங்களையும் தன் வயிற்றிலே அடக்கிய திருமால், பிரமன், ஜோதிமயமான ருத்திரன், ஆகிய மூவருக்கும் மற்ற தேவர்களுக்கும் தலைவியான ஆதி பராசக்தியின் திருமார்பிலிருந்து சுரந்த அமிர்தமாம் ஞானப்பால் மணக்கும் கனி போன்ற வாயை உடையவனே, புனுகு வாசனை வீசும் சீர்காழிப் பகுதியில் கவுணியர் குடியில் ஞானசம்பந்தனாக அவதரித்து தமிழ்ப்பாசுர மகிமையாலே ஏடு வைகை ஆற்றின் நீரில் எதிர் ஏற்றத்தில் செல்லவும், சமணர்கள் கழுவில் ஏறவும், தமிழினால் வாதப் போர் புரிந்த கவிவீரன் ஞானசம்பந்தனே, குருநாதனே, கோடரியையும், மானையும், பிரம கபாலத்தையும், உடுக்கையையும், திரிசூலத்தையும் ஏந்திய கரங்கள் கொண்ட அற்புதமூர்த்தி சிவபிரான் அருளிய திருக்குமாரனே, தாமரை மலரில் உள்ள பிரமனை பெருஞ்சிறையில் அடைத்து, அவனது படைப்புத் தொழிலைச் செம்மையாகச் செய்தருளிய முருகக் கடவுளே, கழுகுகள்* தொழுகின்ற வேதமலையின் உச்சியில் விளங்கும், ஒளிவீசும் வாசலில் நிறைந்த தேவர்கள் கடலின் அலை ஓசை போன்று ஓம் என்று வேதமந்திரங்களையும் தமிழ் மறைகளையும் ஓதுகின்ற, கதலிவனம்** (என்ற திருக்கழுக்குன்றத்தில்) வாழுகின்ற பெருமாளே.
* எல்லா யுகங்களிலும் கீழ்க்கண்ட இரண்டு கழுகுகள் இந்த வேதமலையை பூஜித்தன:கிருத யுகம் - சண்டன், பிரசண்டன்,திரேதா யுகம் - ஜம்பாதி, ஜடாயு,துவாபர யுகம் - சம்புகுத்தன், மாகுத்தன்,கலி யுகம் - சம்பு, ஆதி.
** திருக்கழுக்குன்றத்தின் தலவிருட்சம் வாழையாதலால் இதற்கு 'கதலிவனம்' என்றும் பெயர்.இத்தலம் செங்கற்பட்டு ரயில் நிலையத்துக்கு தென்கிழக்கில் 9 மைலில் உள்ளது.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 542 - திருக்கழுக்குன்றம் - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - யுகம், தனதனன, பெருமாளே