பாடல் 529 - திருவேங்கடம் - திருப்புகழ்

ராகம் -
சக்ரவாஹம் ; தாளம் - திஸ்ர த்ருபுடை
தனதாந்தன தானன தானன தனதாந்தன தானன தானன தனதாந்தன தானன தானன ...... தனதான |
வரிசேர்ந்திடு சேல்கய லோவெனு முழைவார்ந்திடு வேலையு நீலமும் வடுவாங்கிடு வாள்விழி மாதர்கள் ...... வலையாலே வளர்கோங்கிள மாமுகை யாகிய தனவாஞ்சையி லேமுக மாயையில் வளமாந்தளிர் போல்நிற மாகிய ...... வடிவாலே இருள்போன்றிடு வார்குழல் நீழலில் மயல்சேர்ந்திடு பாயலின் மீதுற இனிதாங்கனி வாயமு தூறல்கள் ...... பருகாமே எனதாந்தன தானவை போயற மலமாங்கடு மோகவி காரமு மிவைநீங்கிட வேயிரு தாளினை ...... யருள்வாயே கரிவாம்பரி தேர்திரள் சேனையு முடனாந்துரி யோதன னாதிகள் களமாண்டிட வேயொரு பாரத ...... மதிலேகிக் கனபாண்டவர் தேர்தனி லேயெழு பரிதூண்டிய சாரதி யாகிய கதிரோங்கிய நேமிய னாமரி ...... ரகுராமன் திரைநீண்டிரை வாரியும் வாலியும் நெடிதோங்கும ராமர மேழொடு தெசமாஞ்சிர ராவண னார்முடி ...... பொடியாகச் சிலைவாங்கிய நாரண னார்மரு மகனாங்குக னேபொழில் சூழ்தரு திருவேங்கட மாமலை மேவிய ...... பெருமாளே. |
செவ்வரி படர்ந்த சேல் மீனோ, கயல் மீனோ என்று சொல்லத்தக்கதும், மானையும், வார்த்தெடுக்கப்பட்ட வேலையும், நீலோத்பல மலரையும், மாம்பிஞ்சினையும் நிகர்த்த கண்களை உடைய மாதர்களின் காம வலையினாலும், வளர்ந்த கோங்கு மரத்தின் இளம் சிறப்பான அரும்பையொத்த மார்பகங்களின் மேல் வைத்த ஆசையாலும், முகத்தின் மயக்கத்தாலும், செழுமையான மாந்தளிர் போன்ற நிறத்து வடிவத்தாலும், இருளையொத்துக் கருத்து நீண்ட கூந்தலின் நிழலாலும், காம மயக்கம் கொண்ட படுக்கையின் மேலே பொருந்த, இனிதான கோவைக்கனி இதழ்களின் அமுதாகிய ஊறல்களை உண்ணாதபடி, என்னுடையவை, தன்னுடையவை என்றவை நீங்கி அற்றுப்போகவும், மும்மலங்களினால் உண்டாகும் காம விகாரங்கள் அனைத்தும் அகன்றிடவும், உன் இரு திருவடிகளை அருள்வாயாக. யானைப்படையும், தாவும் குதிரைப் படையும், தேர்ப்படையும், திரண்ட காலாட்படையும், ஒன்றாகக் கூடியுள்ள துரியோதனாதியர் போர்க்களத்தில் இறந்தழிய, ஒரு பாரதப் போர்க்களத்தில் சென்று, பெருமைவாய்ந்த பாண்டவர்களின் தேரிலே, கிளம்பிப் பாயும் குதிரைகளைச் செலுத்திய தேரோட்டி ஆனவனும், ஒளி மிகுந்த சுதர்ஸன சக்கரத்தை உடையவனுமான ஹரி, ரகுராமன், ஆகிய திருமாலும், அலைகள் ஓங்கி ஒலிக்கும் கடலையும், வாலியையும், நீண்டு உயர்ந்த ஏழு மராமரங்களையும், பத்துத் தலைகளையுடைய ராவணனின் சிரங்களையும் பொடிபடும்படி கோதண்ட வில்லை வளைத்த (ராமனாக வந்த) நாராயணனின் மருகனான குகனே, சோலைகள் சூழ்ந்த திருவேங்கடமாம் திருமலையில் வீற்றிருக்கும் பெருமாளே.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 529 - திருவேங்கடம் - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - தானன, தனதாந்தன, போர்க்களத்தில், மீனோ, ரகுராமன், யாகிய, பெருமாளே