பாடல் 489 - சிதம்பரம் - திருப்புகழ்

ராகம் - ...;
தாளம் -
தனந்தத் தத்தன தானன தானன தனந்தத் தத்தன தானன தானன தனந்தத் தத்தன தானன தானன ...... தனதான |
இணங்கித் தட்பொடு பால்மொழி பேசிகள் மணந்திட் டுச்சுக மாய்விளை யாடிகள் இளஞ்சொற் செப்பிகள் சாதனை வீணிகள் ...... கடிதாகும் இடும்பைப் பற்றிய தாமென மேயினர் பெருஞ்சொற் பித்தளை தானும்வை யாதவர் இரும்பிற் பற்றிய கூர்விழி மாதர்கள் ...... எவரேனும் பணஞ்சுற் றிக்கொளு பாயவு தாரிகள் மணங்கட் டுக்குழல் வாசனை வீசிகள் பலஞ்செப் பித்தர மீளழை யாதவர் ...... அவரோடே பதந்துய்த் துக்கொடு தீமைய மாநர கடைந்திட் டுச்சவ மாகிவி டாதுன பதம்பற் றிப்புக ழானது கூறிட ...... அருள்வாயே வணங்கச் சித்தமி லாதஇ ராவணன் சிரம்பத் துக்கெட வாளிக டாவியெ மலங்கப் பொக்கரை யீடழி மாதவன் ...... மருகோனே மதம்பட் டுப்பொரு சூரபன் மாதியர் குலங்கொட் டத்திகல் கூறிய மோடரை வளைந்திட் டுக்கள மீதினி லேகொல ...... விடும்வேலா பிணம்பற் றிக்கழு கோடுபல் கூளிகள் பிடுங்கிக் கொத்திட வேயம ராடியெ பிளந்திட் டுப்பல மாமயி லேறிய ...... முருகோனே பிரிந்திட் டுப்பரி வாகிய ஞானிகள் சிலம்பத் தக்கழல் சேரவெ நாடிடு பெரும்பற் றப்புலி யூர்தனில் மேவிய ...... பெருமாளே. |
மனம் ஒருமித்து குளிர்ந்த பால் போன்ற இனிய சொற்களைப் பேசுபவர்கள், கூடிய பின் சுகமாய் விளையாடுபவர்கள், தாழ்வான மொழிகளைப் பேசுபவர்கள், தாம் சொன்னதையே சாதிக்கும் பயனிலிகள், கடுமையான துன்பம் பிடித்தவர் போல இருப்பவர்கள், (வந்தவர்களிடம்) பெரிய வார்த்தைகளைப் பேசி, பித்தளை சாமான்களைக் கூட விட்டுவைக்காமல் கவர்பவர்கள், இரும்பாலான வேல் போன்ற கூரிய கண்களை உடையவர்கள், யாராயிருந்த போதிலும் அவரிடம் பணத்தைக் கவர்ந்து கொள்ளும் தந்திரம் வல்ல சிறப்பு உடையவர்கள், நறுமணம் கூடியதாய்ப் பின்னிக் கட்டியுள்ள கூந்தலினின்று வாசனை வீசச் செய்பவர்கள், பொன்னைக் கொடுக்கிறேன் என்று சொன்னால் அது தருமளவும் (தமது வீட்டுக்கு) மறுபடியும் அழையாதவர்கள், இத்தகைய பொது மகளிரொடு இன்பத்தை அனுபவித்துக் கொண்டு, கொடுமை வாய்ந்த பெரிய நரகத்தை அடைந்து பிணமாகி விடாமல், உனது திருவடியைப் பற்றி உன் திருப்புகழைக் கூற எனக்கு அருள்வாயாக. (ராமனை) வணங்குவதற்கு மனம் இல்லாத ராவணனுடைய பத்துத் தலைகளும் அற்று விழும்படி அம்பைச் செலுத்தி, மனம் கலங்க, பொய்யை உடைய அரக்கரின் வலிமையை அழித்த திருமாலின் மருகனே, ஆணவம் கொண்டு சண்டை செய்த சூரபன்மன் ஆகியோரை, குலப் பெருமை பேசி இறுமாப்புடன் பகைமைப் போர் சொல்லி வந்த மூடரை, சூழ்ந்து வளைத்து போர்க்களத்தில் இறந்து போகும்படி வேலைச் செலுத்தியவனே, பிணத்தைப் பற்றிக் கொண்டு, கழுகுகளுடன் பல பேய்கள் பிடுங்கிக் கொத்தி உண்ணும்படி போர் செய்து, பகைவர்களைப் பிளந்து அழித்து, வன்மை கொண்ட சிறந்த மயில் வாகனத்தில் ஏறிய முருகோனே, உன்னைப் பிரிந்திருந்து, உள்ளத்தில் அன்பு நிறைந்திருந்த ஞானிகள், சிலம்பையும் பொன்னால் செய்யப்பட்ட வீரக் கழலையும் அணிந்த திருவடிகளைச் சேர விரும்பி வருகின்ற, பெரும் பற்றப் புலியூர் என்ற சிதம்பரத்தில் வீற்றிருக்கும் பெருமாளே.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 489 - சிதம்பரம் - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - தானன, தனந்தத், மனம், கொண்டு, தத்தன, பேசுபவர்கள், பெரிய, பேசி, உடையவர்கள், போர், முருகோனே, பித்தளை, பற்றிய, யாதவர், வாசனை, ஞானிகள், பிடுங்கிக், பெருமாளே