பாடல் 485 - சிதம்பரம் - திருப்புகழ்

ராகம் - சிந்து
பைரவி ; தாளம் - ஆதி - எடுப்பு - 1/2 இடம்
தனத்தத் தானன தானன தானன தனத்தத் தானன தானன தானன தனத்தத் தானன தானன தானன ...... தந்ததான |
எலுப்புத் தோல்மயிர் நாடிகு ழாமிடை இறுக்குச் சீபுழு வோடடை மூளைகள் இரத்தச் சாகர நீர்மல மேவிய ...... கும்பியோடை இளைப்புச் சோகைகள் வாதம் விலாவலி உளைப்புச் சூலையொ டேவலு வாகிய இரைப்புக் கேவல மூலவி யாதியொ ...... டண்டவாதங் குலைப்புக் காய்கனல் நீரிழி வீளையொ டளைப்புக் காதடை கூனல்வி சூசிகை குருட்டுக் கால்முட மூமையு ளூடறு ...... கண்டமாலை குடிப்புக் கூனமி தேசத மாமென எடுத்துப் பாழ்வினை யாலுழல் நாயெனு னிடத்துத் தாள்பெற ஞானச தாசிவ ...... அன்புதாராய் கெலிக்கப் போர்பொரு சூரர்கு ழாமுமி ழிரத்தச் சேறெழ தேர்பரி யாளிகள் கெடுத்திட் டேகடல் சூர்கிரி தூள்பட ...... கண்டவேலா கிளர்ப்பொற் றோளிச ராசர மேவியெ யசைத்துப் பூசைகொள் ஆயிப ராபரி கிழப்பொற் காளைமெ லேறுமெ நாயகி ...... பங்கின்மேவும் வலித்துத் தோள்மலை ராவண னானவன் எடுத்தப் போதுடல் கீழ்விழ வேசெய்து மகிழ்ப்பொற் பாதசி வாயந மோஅர ...... சம்புபாலா மலைக்கொப் பாமுலை யாள்குற மாதினை அணைத்துச் சீர்புலி யூர்பர மாகிய வடக்குக் கோபுர வாசலில் மேவிய ...... தம்பிரானே. |
எலும்பு, தோல், மயிர், நாடிக் குழாய்களின் நெருக்கம், உள் அழுந்தியுள்ள சீழ், புழு இவைகளுடன் பொருந்திய மூளைகள், இரத்தக் கடல்நீர், மலம் இவை எல்லாம் நிறைந்த சேற்றுக் குளத்தில், சோர்வு, இரத்தக் குறைவால் வரும் சோகை, வாயு மிகுதலாகிய பிணி, பக்க வாதம், வயிற்று உளைவு, சூலை என்னும் நோயோடு, பலத்த மூச்சு வாங்குதல், இழிவான மூல நோயுடன் விரைவாதம், நடுக்கு வாதம், காய்கின்ற நெருப்புப் போன்ற சுரம், நீரிழிவு, கபநோயின் காரணமாக கோழையின் கலப்பு, செவிட்டுத் தன்மை, கூன், வாந்தி பேதி, குருட்டுத் தன்மை, கால் முடமாயிருத்தல், பேச வராமை, உள் பக்கத்தே அறுத்துச் செல்லுகின்ற கழுத்தைச் சுற்றி வரும் புண், (இத்தகைய நோய்கள் எல்லாம்) குடி புகுந்த, கேடு செய்கின்ற இந்த உடலே நிலையானது என்று எடுத்துக்கொண்டு, பாழ்படுத்தும் கொடிய வினையால் திரிகின்ற நாய் போன்ற அடியேன், உனது திருவடிகளைப் பெற, ஞான மயமானதும், எப்போதும் மங்களகரமானதும் ஆகிய அன்பைத் தருவாயாக. வெற்றி பெறுவதன் பொருட்டுப் போர் செய்த அசுரர்களுடைய கூட்டம் கக்கும் இரத்தச் சேறு பெருக, தேர்கள், குதிரைகள், யாளிகள் (இப் படைகள் எல்லாம்) அழிபட்டு, கடலும் சூரனும், கிரெளஞ்ச மலையுடன் எழு மலைகளும் தூள்படும்படி செய்த வேலனே, விளங்குகின்ற அழகிய தோள்களை உடையவள், அசையும் பொருள், அசையாப்பொருள் இவை இரண்டிலும் கலந்தும் அவைகளை ஆட்டுவித்தும் பூஜை பெறுகின்ற எங்கள் அன்னை, பரம் பொருளானவள், (தனக்கு) உரிமையான அழகிய எருதின் மேலே ஏறி வருபவளும் எம்முடைய பிராட்டியும் ஆகிய பார்வதியின் பக்கத்தில் இருப்பவரும், வன்மையுடன் ஆட்டி அசைத்து, தனது தோளால் (கயிலை) மலையை இராவணன் என்பவன் எடுத்த பொழுது*, அவனுடைய உடலைக் கீழே விழச் செய்து மகிழும் அழகிய பாதங்களை உடையவரும், சிவாயநம என்னும் ஐந்தெழுத்துக்கு மூலப்பொருளானவருமான சிவசம்புவின் குமாரனே, மலை போன்ற மார்பகங்களை உடைய குறப்பெண்ணாகிய வள்ளியைத் தழுவி, பெருமை வாய்ந்த புலியூர் என்னும் சிதம்பரத்தில் மேலான பொருளாய்ச் சிறந்து விளங்கும் வடக்குக் கோபுர வாசலில் வீற்றிருக்கும் தனிப்பெரும் தலைவனே.
* இராவணன் திக்கு விஜயம் செய்த போது, அவனுடைய புஷ்பக விமானம் கயிலை மலையைக் கடக்க முடியாது தடைபட்டது. அந்த மலையை வேரோடு பறித்து எறிய, அவன் தன் கைகளால் பெயர்த்து அசைக்க, சிவ பெருமான் தமது கட்டை விரலால் அம் மலையை அழுத்த, இராவணன் நசுக்குண்டு சாமகானம் பாடி, இறைவனை மகிழ்வித்து உய்ந்தான்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 485 - சிதம்பரம் - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - தானன, அழகிய, செய்த, எல்லாம், என்னும், மலையை, இராவணன், தனத்தத், வாதம், தன்மை, கயிலை, அவனுடைய, ஆகிய, இரத்தக், மேவிய, இரத்தச், மூளைகள், யாளிகள், வடக்குக், வாசலில், கோபுர, வரும்