பாடல் 460 - சிதம்பரம் - திருப்புகழ்

ராகம் - ....;
தாளம் -
தத்தனந் தத்தனந் தானனத் தந்ததன தத்தனந் தத்தனந் தானனத் தந்ததன தத்தனந் தத்தனந் தானனத் தந்ததன ...... தந்ததான |
தத்தையென் றொப்பிடுந் தோகைநட் டங்கொளுவர் பத்திரங் கட்கயங் காரியொப் புங்குழல்கள் சச்சையங் கெச்சையுந் தாளவொத் தும்பதுமை ...... யென்பநீலச் சக்கரம் பொற்குடம் பாலிருக் குந்தனமொ டொற்றிநன் சித்திரம் போலஎத் தும்பறியர் சக்களஞ் சக்கடஞ் சாதிதுக் கங்கொலையர் ...... சங்கமாதர் சுத்திடும் பித்திடும் சூதுகற் குஞ்சதியர் முற்பணங் கைக்கொடுந் தாருமிட் டங்கொளுவர் சொக்கிடும் புக்கடன் சேருமட் டுந்தனகும் ...... விஞ்சையோர்பால் தொக்கிடுங் கக்கலுஞ் சூலைபக் கம்பிளவை விக்கலுந் துக்கமுஞ் சீதபித் தங்கள்கொடு துப்படங் கிப்படுஞ் சோரனுக் கும்பதவி ...... யெந்தநாளோ குத்திரங் கற்றசண் டாளர்சத் தங்குவடு பொட்டெழுந் திட்டுநின் றாடஎட் டந்திகையர் கொற்றமுங் கட்டியம் பாடநிர்த் தம்பவுரி ...... கொண்டவேலா கொற்றர்பங் குற்றசிந் தாமணிச் செங்குமரி பத்தரன் புற்றஎந் தாயெழிற் கொஞ்சுகிளி கொட்புரந் தொக்கவெந் தாடவிட் டங்கிவிழி ...... மங்கைபாலா சித்திரம் பொற்குறம் பாவைபக் கம்புணர செட்டியென் றெத்திவந் தாடிநிர்த் தங்கள்புரி சிற்சிதம் பொற்புயஞ் சேரமுற் றும்புணரு ...... மெங்கள்கோவே சிற்பரன் தற்பரன் சீர்திகழ்த் தென்புலியுர் ருத்திரன் பத்திரஞ் சூலகர்த் தன்சபையில் தித்தியென் றொத்திநின் றாடுசிற் றம்பலவர் ...... தம்பிரானே. |
கிளி என்று ஒப்புமை சொல்லத் தக்கவராய், மயில் போன்று நடனம் செய்பவர்கள். அம்பு போன்ற கண்ணும் நீருண்ட மேகத்தை ஒத்த கூந்தலும், சப்திக்கும் காற் சதங்கையும் தாள ஒத்துப் போல ஒலி செய்யும் பாவை எனக் கூறத் தக்கவர். நீல நிறமுள்ள சக்கரவாகப் புள், பொன்னாலாகிய குடம் இவற்றைப் போலிருந்து, பால் கொண்டதாயுள்ள மார்பினைக் கொண்டு தழுவி, நல்ல ஓவியம் போல இருந்து வஞ்சித்து, பொருளைப் பறிப்பவர்கள். முழுப் பொய்யைப் பரிகாசத்தினால் சாதிக்கின்ற, துக்கம் தரும் கொலைத் தொழிலைச் செய்பவர்கள். அழகிய விலைமாதர்கள். தம் வசத்தில் சுழலும்படியான பித்து ஏற்றுகின்ற சூதினைக் கற்ற சதிகாரிகள். முன்னதாகப் பணத்தைக் கையில் கொண்டு செலுத்தும் யார் மீதும் தமது விருப்பத்தைச் செலுத்துபவர்கள். மயங்கும்படியான அகந்தை வார்த்தைகளைச் சொல்லி பொருள் சேரும் வரையில் நட்பினைக் காட்டும் மாய வித்தைக்காரர்களிடத்தே, நெருங்கிக் கூடி வருகின்ற வாந்தியும், சூலை நோயும், விலாப் பக்கத்தில் வரும் ராஜபிளவைக் கட்டியும், விக்கலும், துக்கமும், சீத மலம், பித்தம் ஆகிய நோய்களைக் கொள்வதால், வலிமை குன்றி அழிந்து படும் இந்தக் கள்வனுக்கும் (சாலோக, சாமீப, சாரூப, சாயுஜ்ய எனப்படும்) சிவலோக இன்பப் பதவிகள்* கிடைப்பது எப்போதோ? வஞ்சகம் கற்ற சண்டாளர் ஆகிய ஏழு மலைகளும் பொடிபட்டு நின்று குலைய, எட்டுத் திக்குப் பாலகர்களும் உனது வீரத்தைப் புகழ் மாலையாகப் பாட, நடனமாகிய கூத்துக்களைக் கொண்ட வேலனே, வெற்றியாளராகிய சிவபெருமானது இடது பக்கத்தில் உள்ள சிந்தாமணி போன்றவள், செவ்விய குமரி, பக்தர்கள் அன்பு கொண்ட எமது தாய், அழகு கொஞ்சும் கிளி, சுழன்று திரியும் திரி புரங்கள் எல்லாம் வெந்து குலைய வைத்த நெருப்புக் கண்ணை உடைய பார்வதி தேவியின் புதல்வனே, விசித்திரமான அழகிய குறப் பெண்ணாகிய வள்ளி அருகில் சென்று சேர வளைச் செட்டி வடிவு எடுத்து ஏமாற்றி வந்து விளையாடல்கள் செய்து கூத்துக்கள் புரிந்து, நுண்ணிய ஞானத்தவளாகிய அந்த வள்ளி உனது அழகிய தோள்களைச் சேர, அவளை முழுதும் கலந்து சேர்ந்த எங்கள் தலைவனே, ஞானபரன், பரம் பொருள், சீர் விளங்கும் அழகிய சிதம்பரத்தில் விளங்கும் ருத்திர மூர்த்தி, இலைகளை உடைய சூலாயுதத்தைக் கொண்ட தலைவன், பொன்னம்பலத்தில் தித்தி என்னும் தாளத்துக்குத் தக்கபடி நடனம் செய்யும் நடராஜப் பெருமானது தம்பிரானே.
* 4 பக்தி மார்க்கங்கள் பின்வருமாறு:1. சரியை: திருக்கோயிலில் அலகு இடுதல், மெழுகுதல், விளக்கு இடுதல், நந்தவனம் வைத்தல், பூ எடுத்தல், மாலை அமைத்தல், இறைவனை வாழ்த்துதல், திருவேடம் கண்டு பணிதல். இது 'தாத மார்க்கம் - சாலோகம்'.2. கிரியை: பூஜை உபகரணங்களை அமைத்து நித்தியக் காரியம் செய்தல். இது 'புத்ர மார்க்கம் - சாமீபம்'.3. யோகம்: புலன்களை அடக்கிப் பிராண வாயுவைச் சலனம் அற நிறுத்தி ஆறு ஆதாரங்களின் பொருளை உணர்ந்து, சந்திர மண்டல அமிர்தத்தை உடல் முழுதும் நிரப்பி, முழு ஜோதியை நினைத்திருத்தல். இது 'சக மார்க்கம் (தோழ நெறி) - சாரூபம்'.4. ஞானம்: புறத் தொழில் அகத் தொழில் இன்றி, அறிவு மாத்திரத்தாலே செய்யும் வழிபாடு ஞானம். இது 'சன்மார்க்கம் - சாயுஜ்யம்'. சிவஞான சித்தியார் சூத்திரம்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 460 - சிதம்பரம் - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - தத்தனந், அழகிய, செய்யும், மார்க்கம், கொண்ட, தானனத், தந்ததன, உடைய, உனது, வள்ளி, விளங்கும், தொழில், ஞானம், இடுதல், குலைய, முழுதும், பொருள், கிளி, தம்பிரானே, சித்திரம், டங்கொளுவர், நடனம், செய்பவர்கள், பக்கத்தில், கற்ற, கொண்டு, ஆகிய