பாடல் 445 - திருவருணை - திருப்புகழ்

ராகம் - ...;
தாளம் -
தானதன தானதன தானதன தானதன தானதன தானதன ...... தனதான |
வீறுபுழு கானபனி நீர்கள்மல தோயல்விடு மேருகிரி யானகொடு ...... தனபார மீதுபுர ளாபரண சோதிவித மானநகை மேகமனு காடுகட ...... லிருள்மேவி நாறுமலர் வாசமயிர் நூலிடைய தேதுவள நாணமழி வார்களுட ...... னுறவாடி நாடியது வேகதியெ னாசுழலு மோடனைநின் ஞானசிவ மானபத ...... மருள்வாயே கூறுமடி யார்கள்வினை நீறுபட வேஅரிய கோலமயி லானபத ...... மருள்வோனே கூடஅர னோடுநட மாடரிய காளியருள் கூருசிவ காமியுமை ...... யருள்பாலா ஆறுமுக மானநதி பாலகுற மாதுதன மாரவிளை யாடிமண ...... மருள்வோனே ஆதிரகு ராமஜய மாலின்மரு காபெரிய ஆதியரு ணாபுரியில் ...... பெருமாளே. |
(மணம் வீசும்) புனுகு, பன்னீர் ஆகியவைகளை மலம் தோய்ந்துள்ள உடலின் மீது விட்டுப் பூசி, மேரு மலை போன்ற, தீமைக்கு இடமான, மார்பகப் பாரங்களின் மேல் புரள்கின்ற ஆபரணங்களின் ஒளியும், பல விதமான சிரிப்பும் கொண்டு, மேகம், பின்னும் காடு, கடல் ஆகியவைகளின் கறுப்பு நிறத்துடன் மணம் வீசும் மலர்களின் வாசனையைக் கொண்ட கூந்தலை விரித்து, நூல் போல் நுண்ணிய இடையை துவளச் செய்து, நாணம் என்பதே இல்லாது அழியும் விலைமாதர்களுடன் நட்பு பூண்டு, விரும்பி அந்த வேசையருடன் ஆடுவதே கதி என்று சுழல்கின்ற மூடனாகிய எனக்கு உனது சிவஞான மயமான திருவடியைத் தந்து அருள்வாயாக. உன்னைப் போற்றும் அடியார்களின் வினை தூளாகிப் போக, அருமையான அழகிய மயிலான பதவியை அருள்பவனே, சிவபெருமானோடு சேர்ந்து நடனம் ஆடும் அரிய காளியும் திருவருள் மிக்க சிவகாமியும் ஆன உமாதேவி அருளிய குழந்தையே, ஆறு முகங்கள் கொண்ட கங்கா நதியின் குழந்தையே, குறப் பெண் வள்ளியின் நெஞ்சம் குளிர விளையாடி அவளை மணம் புரிந்தவனே, ஆதி ரகுராமனும் வெற்றி பொருந்தியவனுமான திருமாலின் மருகனே, பெரிய திருவண்ணாமலையில் வீற்றிருக்கும் பெருமாளே.
'கூறுமடியார்கள் வினை', 'ஆறுமுகமான', 'ஆதியருணாபுரியில்', என்ற சொற்றொடர்கள் 'ஏறுமயில் ஏறி' என்னும் பாடலை ஒத்திருப்பதைக் காணலாம்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 445 - திருவருணை - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - தானதன, மணம், வினை, குழந்தையே, கொண்ட, வீசும், மருள்வோனே, பெருமாளே