பாடல் 427 - திருவருணை - திருப்புகழ்

ராகம் -....;
தாளம் -
தனனாதன தனனாதன தாந்தன தாந்தனதந் தனனாதன தனனாதன தாந்தன தாந்தனதந் தனனாதன தனனாதன தாந்தன தாந்தனதந் ...... தனதான |
தமிழோதிய குயிலோமயி லாண்டலை யாம்புறவங் கிளிகாடையி னணிலேரளி யாங்குரல் வாய்ந்ததிசெந் தகுமாமிட றொலியாரித ழாஞ்சுளை தேன்கனியின் ...... சுவைசேருந் தனபாரமு மலையாமென வோங்கிட மாம்பொறிசிந் திடவேல்விழி நுதலோசிலை வான்பிறை மாந்துளிரின் சரிரார்குழ லிருளாநகை யோங்கிய வான்கதிரின் ...... சுடர்பாயக் குமிழ்நாசியின் முகமோமதி யாங்குளிர் சேங்கமலஞ் சரிதோடிணை செவியாடுச லாங்கள பூங்கமுகங் கொடிநூலிடை யுடையாரன மாம்ப்ரியர் மாண்புரிமின் ...... கொடிமாதர் குணமோடம ளியினாடினு மோங்கிய பூங்கமலஞ் சரணூபுர குரலோசையு மேந்திடு மாண்டலையின் கொடியோடெழு தரிதாம்வடி வோங்கிய பாங்கையுமன் ...... தகையேனே திமிதோதிமி திமிதோதிமி தாங்கண தீங்கணதொந் தகுதோதகு தகுதோதகு டாங்குட தீங்கடதொந் திகுடோடிமி டிமிடோடிமி டாங்குட டீந்தகமென் ...... றியல்பேரி திசைமூடுக கடலேழ்பொடி யாம்படி யோங்கியவெங் கரிதேர்பரி யசுரார்கள மாண்டிட நீண்டரவின் சிரமீள்பட குவடோதுகள் வான்பெற வாங்கியவண் ...... கதிர்வேலா கமழ்மாவிதழ் சடையாரடி யேன்துயர் தீர்ந்திடவெண் தழல்மாபொடி யருள்வோரடல் மான்துடி தாங்கியவண் கரர்மாடரு ளுமையாளெமை யீன்றவ ளீன்றருள்மென் ...... குரவோனே கடையேனிரு வினைநோய்மல மாண்டிட தீண்டியவொண் சுகமோகினி வளிநாயகி பாங்கனெ னாம்பகர்மின் கலைநூலுடை முருகாவழ லோங்கிய வோங்கலின்வண் ...... பெருமாளே. |
தமிழின் இனிமைக் குரலைக் காட்டும் குயிலோ, மயிலோ, கோழி தானோ, புறாவோ, கிளியோ, காடையோ, இனிமையான அன்றில் பறவையோ, அழகிய வண்டோ என்னும்படி குரலை உடைய, மிக்க செம்மையான, தக்கதான, சிறந்த கண்டத்து ஒலியை (புட்குரலை) உடைய விலைமாதர்களின் வாயிதழ் பலாச் சுளை, தேன், பழம் இவைகளின் சுவை சேர்ந்ததாகும். மார்பகப் பாரங்களும் மலை என்னும்படி பருத்து ஓங்க, அழகிய தேமல் அங்கும் இங்கும் சிதறிட, விழி வேல் தானோ, நெற்றி வில்லோ, சிறந்த பிறையோ, சா£ரம் மாந்துளிர் போன்றதோ, கூந்தல் இருளோ? பற்கள் விளங்கும் சிறந்த சூரியனின் பாயும் ஒளியோ? மூக்கு குமிழம்பூவோ? முகம் சந்திரனோ? குளிர்ந்த செந்தாமரையோ? பொருத்தமாக உள்ள தோடு விளங்கும் காதுகள் ஆடுகின்ற ஊஞ்சலோ? கழுத்து மென்மையான கமுகோ? இடுப்பு கொடியோ, நூலோ? எனக் கொண்டுள்ளவர்கள் அன்னம் போல்பவர். அன்பு காட்டுபவர்கள். பெருமை வாய்ந்த மின்னல் கொடி போன்றவர் (ஆகிய) பொது மகளிர். அவர்களது குணத்திலும் ஈடுபட்டு படுக்கையில் கலவி புரிந்தாலும், விளங்குகின்ற அழகிய தாமரை போன்ற உனது திருவடியில் உள்ள சிலம்பின ஒலியும், உன் கையில் ஏந்திய கோழிக் கொடியையும், எழுதுவதற்கு அரிதான ஒளி நிறைந்த அழகும் மிகுந்த அளவுக்கு என் நினைவில் வருவதை நான் சிறிதேனும் தடை செய்யேன். திமிதோதிமி திமிதோதிமி தாங்கண தீங்கணதொந் தகுதோதகு தகுதோதகு டாங்குட தீங்கடதொந் திகுடோடிமி டிமிடோடிமி டாங்குட டீந்தக இவ்வாறு ஒலிக்கும் பேரி முரசின் ஓசை திசைகள் எல்லாம் மூடும் படியும், ஏழு கடல்களும் பொடியாகும்படியும், பேரொலியுடன் வந்த கொடிய யானைகளும், தேர்களும், குதிரைகளும், அசுரர்களும் இறந்துபட, பெரிய ஆதிசேஷனாகிய பாம்பின் தலை பூ பாரத்திலிருந்து மீட்சி பெற, மலைகளின் பொடி ஆகாயத்தை அளாவும்படி செலுத்திய வளமும் ஒளியும் வாய்ந்த வேலாயுதனே, மணம் வீசும் அழகிய கொன்றையைச் சூடிய சடையை உடைய சிவபெருமான், அடியேனுடைய துயரங்கள் நீங்க வெண்ணிறமான நெருப்பால் தோன்றிய பெருமை வாய்ந்த பொடியாகிய திருநீற்றை அருளியவர், வலிமை பொருந்திய மான், உடுக்கை ஆகியவற்றைத் தாங்கிய வளப்பம் பொருந்திய கைகளை உடையவர் பக்கத்தில் இருந்து அருளும் உமா தேவி, எம்மைப் பெற்றவள் பெற்றருளிய அமைதி வாய்ந்த குருவே, கீழோனாகிய என்னுடைய (நல்வினை, தீவினை ஆகிய) இரு வினைகளும், நோயும், (ஆணவம், கன்மம், மாயை என்ற) மும்மலங்களும் அழிந்து போகும்படி தொட்டு தீ¨க்ஷ செய்தவனும், ஒள்ளிய சுக மோகினியாகிய வள்ளி நாயகிக்கு கணவன் என்று சொல்லப்படுகின்றவனும், விளங்கும் கலை நூல்களில் வல்லவனுமான முருகனே, நெருப்பு உருவான மலையாகிய திரு அண்ணாமலையில் வளப்பம் பொருந்தி வீற்றிருக்கும் பெருமாளே.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 427 - திருவருணை - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - தனனாதன, வாய்ந்த, அழகிய, தகுதோதகு, டாங்குட, திமிதோதிமி, விளங்கும், தாந்தன, உடைய, சிறந்த, தாந்தனதந், பெருமை, வளப்பம், ஆகிய, பொருந்திய, உள்ள, பெருமாளே, தீங்கடதொந், தீங்கணதொந், தாங்கண, திகுடோடிமி, டிமிடோடிமி, தானோ, மாண்டிட, என்னும்படி