பாடல் 415 - திருவருணை - திருப்புகழ்

ராகம் - ....;
தாளம் -
தனதனன தனதனன தானத் தாத்தன தனதனன தனதனன தானத் தாத்தன தனதனன தனதனன தானத் தாத்தன ...... தனதான |
குரவநறு மளககுழல் கோதிக் காட்டியெ குலவுமிரு கயல்கள்விழி மோதித் தாக்கியெ குமுதமல ரொளிபவள வாயைக் காட்டியெ ...... குழையாத குணமுறுக இனிதுபயில் கூறிக் காட்டியெ குலையஇரு கலைநெகிழ வீசிக் காட்டியெ குடவியிடு மரிவையர்க ளாசைப் பாட்டிலெ ...... கொடியேன்யான் பொருளிளமை கலைமனமு மேகப் போக்கிய புலையனிவ னெனவுலக மேசப் போக்கென பொறிவழியி லறிவழிய பூதச் சேட்டைகள் ...... பெருகாதே புதுமலர்கள் மருவுமிரு பாதத் தாற்றியெ பொதுவகையி லருணைநிலை நீள்கர்த் தாவென புகழடிமை தனையுனது பார்வைக் காத்திட ...... நினையாதோ அரவமுட னறுகுமதி யார்மத் தாக்கமு மணியுமொரு சடைமவுலி நாதர்க் கேற்கவெ அறிவரிய வொருபொருளை போதத் தேற்றிய ...... அறிவோனே அழகுசெறி குழலியர்கள் வானத் தாட்டியர் தருமமது சரவணையில் வாவித் தேக்கியெ அறுசிறுவ ரொருவுடல மாகித் தோற்றிய ...... இளையோனே சுரருலவ அசுரர்கள் மாளத் தூட்பட துயவுமுட லயிலைவிடு மாவுக் ராக்ரம சுவறியெழு கடலுமுறை யாகக் கூப்பிட ...... முனிவோனே துடிமுழவு மறவரிட சேவற் காட்டினில் துணைமலரி னணுகிதினை காவற் காத்தனை சுரியகுழல் குறமகளை வேளைக் காத்தணை ...... பெருமாளே. |
குரா மலரின் நறு மணம் வீசும் மயிர்க் கற்றை உள்ள கூந்தலை வேண்டுமென்றே சிக்கெடுத்துக் காட்டியும், விளங்கும் இரண்டு கயல் மீன்கள் போன்ற கண்களைக் கொண்டு மோதித் தாக்கியும், குமுத மலர் போன்றதும், ஒளி பொருந்திய பவளம் போன்றதுமான வாயைக் காட்டியும், இளகாத காமம் முதிர்ச்சி உறும்படி, இனிமையாக நெருங்கிய ஞாபகத்தைக் காட்டும் பேச்சுக்களைப் பேசிக் காட்டியும், பெரிய ஆடை குலைவுற்று நெகிழ்ந்து தளரும்படி பக்கம் வீசிக் காட்டியும், ஆடவர்களை வளைத்துப் போடும் மாதர்களுடைய காம லீலைகளில் (ஈடுபட்ட) கொடியவனாகிய நான், என் பொருள், இளமை, கல்வி, மனம் இவை யாவும் போகும்படி தொலைத்த கீழ்மகன் இவன் என்று உலகத்தவர் இகழ்ந்து உரைக்க, ஐம்பொறிகள் இழுத்த இழுப்பின் வழியிலே சென்று என் அறிவு அழிய, ஐம்பூதங்களால் ஆகிய உடம்பின் குறும்புச் செயல்கள் என்னிடம் வளராதவாறு, புதிய மலர்கள் பொருந்திய உன் இரண்டு திருவடிகளால் அமைதியாகி, யாவரும் ஒப்புக்கொள்ளும் வகையில் திருவண்ணாமலையில் நிலைத்துள்ள பெரிய தலைவன் நீதான் என்று உன்னைப் புகழ்கின்ற இந்த அடிமையை, உன் திருக்கண் பார்வையால் காத்தளிக்க நினைக்க மாட்டாயோ? பாம்பும், அறுகும், சந்திரனும், ஆத்தியும், ஊமத்தை மலரும், ருத்ராட்சமும், மணியும் அணிந்துள்ள ஒப்பற்ற சடையை உடைய சிவபெருமான் உவந்து ஏற்றுக் கொள்ளும் வகையில், அறிதற்கு அரிதான மேலான பிரணவப் பொருளை உபதேசித்து ஊட்டிய அறிஞனே, அழகு நிறைந்த கூந்தலை உடையவர்களாக, வானிடத்திலே உள்ள ஆறு கார்த்திகைப் பெண்கள் தந்த பால் அமுதை சரவண மடுவில் நிரம்ப உண்டு, ஆறு சிறுவர்களாக இருந்தவர்கள் ஓர் உடலினராகி விளங்கிய இளைஞனே, தேவர்கள் (மகிழ்ந்து) உலவும்படியும், அசுரர்கள் இறக்கும்படியும், பொடியாக அறிவு கலங்கும்படி கோபித்த வேலாயுதத்தைச் செலுத்திய பெரிய மூர்த்தியே, நீதிமானே, வற்றிப்போன ஏழு கடல்களும் முறை செய்து ஒலி எழுப்பும்படியாகக் கோபித்தவனே, உடுக்கை, முரசு (இவைகளை உடைய) வேடர்களின் காவல் கொண்ட காட்டில், உனது இரண்டு (திருவடி) மலர்களால் நெருங்கி, தினைப் புனத்தைக் காவல் காத்திருந்த தாய், சுருண்ட கூந்தலைக் கொண்ட குற மகளாகிய வள்ளியை, தக்க சமயத்துக்காக காத்திருந்து, (அவளை) அணைந்த பெருமாளே.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 415 - திருவருணை - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - தனதனன, காட்டியும், காட்டியெ, தானத், பெரிய, தாத்தன, இரண்டு, அறிவு, உடைய, கொண்ட, காவல், பொருந்திய, வகையில், உள்ள, வாயைக், மோதித், வீசிக், அசுரர்கள், பெருமாளே, கூந்தலை