பாடல் 407 - திருவருணை - திருப்புகழ்

ராகம் - ....;
தாளம் -
தனதனனத் தனதனனத் தனதனனத் தனதனனத் தனதனனத் தனதனனத் ...... தனதான |
கமலமுகப் பிறைநுதல்பொற் சிலையெனவச் சிரகணைநற் கயலெனபொற் சுழலும்விழிக் ...... குழல்கார்போல் கதிர்தரளொப் பியதசனக் கமுகுகளப் புயகழைபொற் கரகமலத் துகிர்விரலிற் ...... கிளிசேருங் குமரிதனத் திதலைமலைக் கிசலியிணைக் கலசமெனக் குவிமுலைசற் றசையமணிக் ...... கலனாடக் கொடியிடைபட் டுடைநடைபொற் சரணமயிற் கெமனமெனக் குனகிபொருட் பறிபவருக் ...... குறவாமோ திமிலையுடுக் குடன்முரசுப் பறைதிமிதித் திமிதிமெனட் டிமிடிமிடிட் டிகுர்திமிதித் ...... தொலிதாளம் செககணசெக் கணகதறத் திடுதிடெனக் கொடுமுடியெட் டிகைசிலைபட் டுவரிபடச் ...... சிலைகோடித் துமிலவுடற் றசுரர்முடிப் பொடிபடரத் தமுள்பெருகத் தொகுதசைதொட் டலகையுணத் ...... தொடும்வேலா துவனிதினைப் புனமருவிக் குறமகளைக் களவுமயற் சுகமொடணைத் தருணகிரிப் ...... பெருமாளே. |
தாமரை போன்ற முகமும், பிறைச் சந்திரனையும் அழகிய வில்லையும் போன்ற நெற்றியும் புருவமும், மிகவும் உறுதியான அம்பையும் நல்ல மீனைப் போன்றதும் ஆகிய அழகிய சுழலும் கண்களும், மேகம் போன்ற கூந்தலும், ஒளி பொருந்திய முத்தை ஒக்கும் பற்களும், கமுகின் கிளையை ஒத்த கழுத்தும், மூங்கிலை ஒத்த மென்மையான புயங்களும், தாமரையை ஒக்கும் கையில் கிளியின் (மூக்கை) ஒக்கும் விரலின் சிவந்த நகங்களும், பருவப் பெண்ணின் தேமல் படர்ந்த மார்பகம் மலையுடன் போட்டியிட்டு, இரண்டு குடங்கள் போல விளங்க, குவிந்துள்ள அந்த மார்பகம் சிறிது அசையவும், ரத்தின ஆபரணங்கள் ஆடவும், கொடி போன்ற இடையில் பட்டாடையுடன், அழகிய பாதங்களின் நடை மயில் செல்வது போல விளங்க, கொஞ்சிப் பேசிப் பொருளை அபகரிக்கும் பொது மகளிர்களின் கூட்டுறவு எனக்கு ஆகுமோ? திமிலை, உடுக்கை முதலிய பறை வகைகள் திமிதித் திமிதிம் என்றும் டிமி டிமி டிட் டிகுர் திமிதித் என்றும் பல விதமான தாளங்களில் ஒலிகளைச் செய்யவும், செககண செக்கண என்ற பெரும் ஒலியை எழுப்பவும், திடுதிடு என்று சிகரங்களை உடைய மலைகள் எட்டுத் திசைகளிலும் அழிபடவும், கடல் கலங்கவும், வில்லை வளைத்து, பெரிய ஆரவரத்துடன் போர் புரிந்த அசுரர்களின் தலைகள் பொடிபட, ரத்தம் போர்க்களத்தில் உள்ள இடம் எல்லாம் பெருக, விழுந்து கூடியுள்ள மாமிசங்களைக் கொத்தி பேய்கள் உண்ணும்படி வேலாயுதத்தைச் செலுத்திய வீரனே, (பட்சி வகைகளின்) ஒலி நிறைந்த தினைப் புனத்துக்குச் சென்று, குற மகள் வள்ளியை களவு வழியில் மோக இன்பத்துடன் தழுவியனே, திருவண்ணாமலையில் வீற்றிருக்கும் பெருமாளே.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 407 - திருவருணை - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - தனதனனத், ஒக்கும், அழகிய, என்றும், டிமி, திமிதித், ஒத்த, பெருமாளே, மார்பகம், விளங்க