பாடல் 388 - திருவருணை - திருப்புகழ்

ராகம் -
குந்தலவராளி; தாளம் - மிஸ்ர சாபு
தகதிமி-2, தகிட-1 1/2
தகதிமி-2, தகிட-1 1/2
தனதன தனனம் தனதன தனனம் தனதன தனனம் ...... தனதான |
இரவியு மதியுந் தெரிவுற எழுமம் புவிதனி லினமொன் ...... றிடுமாதும் எழில்புதல் வருநின் றழுதுள முருகும் மிடர்கொடு நடலம் ...... பலகூறக் கருகிய வுருவங் கொடுகனல் விழிகொண் டுயிரினை நமனுங் ...... கருதாமுன் கலைகொடு பலதுன் பமுமக லிடநின் கழலிணை கருதும் ...... படிபாராய் திருமரு வியதிண் புயனயன் விரியெண் டிசைகிடு கிடவந் ...... திடுசூரன் திணிபுய மதுசிந் திடஅலை கடலஞ் சிடவலி யொடுகன் ...... றிடும்வேலா அருமறை யவரந் தரமுறை பவரன் புடையவ ருயஅன் ...... றறமேவும் அரிவையு மொருபங் கிடமுடை யவர்தங் கருணையி லுறையும் ...... பெருமாளே. |
சூரியனும், சந்திரனும் தெரியும்படி விளங்கும் இப்பூமியில் சுற்றம் என்று பொருந்திவரும் மனைவியும் அழகிய மக்களும் உடன் நின்று அழுது, உள்ளம் உருகும்படியான வருத்தத்துடன் துன்ப மொழிகள் பல சொல்ல, கறுத்த உருவமும் நெருப்பு வீசும் கண்களுடனும் உள்ள யமனும் என் உயிரைக் கவர்ந்து செல்லக் கருதி வருவதற்கு முன்பாக, யான்கற்ற பல கலைகளும், என் துயரங்களும் ஒருங்கே நீங்கிட உன் திருவடிகளையே யான் தியானிக்கும்படி கண்பார்த்தருள்வாயாக. திருமகளை மார்பில் வைத்த திண்ணிய தோளினன் திருமாலும், பிரமனும், பரந்த எண்திசையிலுள்ள யாவரும் நடுநடுங்க வந்த சூரனுடைய வலிய புயங்கள் அறுபட்டு விழ, அலை வீசும் கடல் பயப்படுமாறு வலிமையோடு கோபித்த வேலனே, அரிய வேதங்களில் வல்லவரும், வானில் உறையும் தேவர்களும், உன்னிடம் அன்பு மிகுந்த அடியார்களும் பிழைக்கும் வண்ணம், அன்று முப்பத்திரண்டு* அறங்களையும் விரும்பிச் செய்த தேவி பார்வதியை தம் ஒரு பாகத்தில் இடப்பக்கமாகக் கொண்டவரான சிவபிரான் தங்கும் திருவண்ணாமலையில் வீற்றிருக்கும் பெருமாளே.
* பெரிய புராணத்தில் கூறிய முப்பத்திரண்டு அறங்கள் பின்வருமாறு:சாலை அமைத்தல், ஓதுவார்க்கு உணவு, அறுசமயத்தாருக்கும் உணவு, பசுவுக்குத் தீனி, சிறைச் சோறு, ஐயம், தின்பண்டம் நல்கல், அநாதைகளுக்கு உணவு, மகப்பெறுவித்தல், மகவு வளர்த்தல், சிசுக்களுக்குப் பால் நல்கல், அநாதைப் பிணம் சுடுதல், அநாதைகளுக்கு உடை, சுண்ணாம்பு பூசல், நோய்க்கு மருந்து, வண்ணார் தொழில், நாவிதத் தொழில், கண்ணாடி அணிவித்தல், காதோலை போடுதல், கண் மருந்து, தலைக்கு எண்ணெய், ஒத்தடம் தருதல், பிறர் துயர் காத்தல், தண்ணீர்ப் பந்தல், மடம் கட்டுதல், தடாகம் அமைத்தல், சோலை வளர்த்தல், தோல் பதனிடல், மிருகங்களுக்கு உணவு, ஏர் உழுதல், உயிர் காத்தல், கன்னிகாதானம்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 388 - திருவருணை - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - உணவு, தனதன, தனனம், மருந்து, தொழில், காத்தல், வளர்த்தல், நல்கல், பெருமாளே, வீசும், அமைத்தல், அநாதைகளுக்கு