பாடல் 381 - திருவருணை - திருப்புகழ்

ராகம் - .....;
தாளம் - ......
தனதனன தான தத்த தனதனன தான தத்த தனதனன தான தத்த ...... தனதான |
வடவையன லூடு புக்கு முழுகியெழு மாம திக்கு மதுரமொழி யாழி சைக்கு ...... மிருநாலு வரைதிசைவி டாது சுற்றி யலறுதிரை வாரி திக்கு மடியருவ வேள்க ணைக்கு ...... மறவாடி நெடுகனக மேரு வொத்த புளகமுலை மாத ருக்கு நிறையுமிகு காத லுற்ற ...... மயல்தீர நினைவினொடு பீலி வெற்றி மரகதக லாப சித்ர நிலவுமயி லேறி யுற்று ...... வரவேணும் மடலவிழு மாலை சுற்று புயமிருப தோடு பத்து மவுலியற வாளி தொட்ட ...... அரிராமன் மருகபல வான வர்க்கு மரியசிவ னார்ப டிக்க மவுனமறை யோது வித்த ...... குருநாதா இடையரியு லாவு முக்ர அருணகிரி மாந கர்க்கு ளினியகுண கோபு ரத்தி ...... லுறைவோனே எழுபுவிய ளாவு வெற்பு முடலிநெடு நாக மெட்டு மிடையுருவ வேலை விட்ட ...... பெருமாளே. |
(யுக முடிவில் வட துருவத்திலிருந்து வெளிப்பட்டு வரும் நெருப்புக் கோளமான) வடவா முகாக்கினியின் உள்ளே நுழைந்து முழுகி (வானில்) எழுகின்ற சிறந்த சந்திரனுக்கும், மங்கையரின் இனிய மொழி போலச் சுவைக்கும் யாழின் இசை ஒலிக்கும், எட்டு மலைகளும், எட்டுத் திசைகளும் விடாமல் சுற்றி வளைத்து பேரொலி செய்யும் அலைகளை உடைய கடலுக்கும், இறந்து போய் உருவம் இழந்து அருவமாயுள்ள மன்மதனுடைய (மலர்ப்) பாணங்களுக்கும் மிகவும் வாடி, பொன் மயமான மேரு மலையைப் போன்றதும், புளகம் கொண்டதுமான மார்பை உடைய இந்தப் பெண் அருமை நிறைந்துள்ள மிக்க காதல் கொண்ட மயக்கம் தீர, (இவள் நிலைமையை) ஞாபகம் வைத்து, பீலிக் கண்களைக் கொண்ட, வெற்றி வாய்ந்த, பச்சை நிறம் கொண்ட, தோகையின் அழகு பொலியும் மயிலின் மேல் ஏறி அமர்ந்து நீ இவளிடம் வர வேண்டும். இதழ்கள் விரிந்த மலர் மாலைகள் சுற்றி அணிந்துள்ள இருபது தோள்களுடன், (ராவணனுடைய) பத்துத் தலைகளும் அற்று விழும்படியாக அம்பைச் செலுத்திய ஹரியாகிய ராமனின் மருகனே, பல தேவர்களுக்கும் அரியவராக நிற்கும் சிவபெருமான் கற்கும்படி மவுன ரகசிய வேதப்பொருளை உபதேசித்த குருநாதனே, வழியில் பாம்புகள் உலவுகின்ற பயங்கரமான திருவண்ணாமலை என்னும் சிறந்த நகரில் இனிமையான கிழக்கு கோபுரத்தில் உறைபவனே, ஏழு உலகளவும் அளாவி நிற்கும் (மேரு) மலையுடன் மாறுபட்டுப் பொருது*, பெரிய மலைகள் (கிரெளஞ்ச மலை, ஏழு குலகிரிகள்) எட்டையும் ஊடுருவும்படியாக வேலைச் செலுத்திய பெருமாளே.
* முருகன் பாண்டியன் உக்கிரவழுதியாக மதுரையில் அவதரித்தபோது கொடிய பஞ்சம் ஏற்பட்டது. அப்போது மேருவிடம் பொற்குவியலைக் கேட்க, அது தராமையால் சினந்து செண்டால் மேருவின்மீது எறிந்து பொன் பெற்றார். இப்பாடல் அகத்துறையில் 'நாயக நாயகி' பாவத்தில் தலைவியின் செவிலித்தாய் பாடுவது போல அமைந்தது.நிலவொளி, யாழிசை, கடல் ஒலி, மன்மதன், மலர்க் கணை முதலியவை தலைவனின் பிரிவை மிகவும் அதிகமாக்கும் பொருட்கள்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 381 - திருவருணை - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - தனதனன, கொண்ட, சுற்றி, மேரு, தத்த, பொன், நிற்கும், செலுத்திய, மிகவும், பெருமாளே, திக்கு, வெற்றி, சிறந்த, உடைய