பாடல் 365 - திருவானைக்கா - திருப்புகழ்

ராகம் - தேஷ்;
தாளம் - அங்கதாளம் - 7 1/2
தகதிமி-2, தகதிமி-2, தகிடதகதிமி-3 1/2
- எடுப்பு -1/2 இடம்
தகதிமி-2, தகதிமி-2, தகிடதகதிமி-3 1/2
- எடுப்பு -1/2 இடம்
தனதன தனதன தாந்த தானன தனதன தனதன தாந்த தானன தனதன தனதன தாந்த தானன ...... தனதான |
பரிமள மிகவுள சாந்து மாமத முருகவிழ் வகைமலர் சேர்ந்து கூடிய பலவரி யளிதுயில் கூர்ந்து வானுறு ...... முகில்போலே பரவிய இருள்செறி கூந்தல் மாதர்கள் பரிபுர மலரடி வேண்டி யேவிய பணிவிடை களிலிறு மாந்த கூளனை ...... நெறிபேணா விரகனை யசடனை வீம்பு பேசிய விழலனை யுறுகலை யாய்ந்தி டாமுழு வெகுளியை யறிவது போங்க பாடனை ...... மலமாறா வினையனை யுரைமொழி சோர்ந்த பாவியை விளிவுறு நரகிடை வீழ்ந்த மோடனை வினவிமு னருள்செய்து பாங்கி னாள்வது ...... மொருநாளே கருதலர் திரிபுர மாண்டு நீறெழ மலைசிலை யொருகையில் வாங்கு நாரணி கழலணி மலைமகள் காஞ்சி மாநக ...... ருறைபேதை களிமயில் சிவனுடன் வாழ்ந்த மோகினி கடலுடை யுலகினை யீன்ற தாயுமை கரிவன முறையகி லாண்ட நாயகி ...... யருள்பாலா முரணிய சமரினில் மூண்ட ராவண னிடியென அலறிமு னேங்கி வாய்விட முடிபல திருகிய நீண்ட மாயவன் ...... மருகோனே முதலொரு குறமகள் நேர்ந்த நூலிடை யிருதன கிரிமிசை தோய்ந்த காமுக முதுபழ மறைமொழி யாய்ந்த தேவர்கள் ...... பெருமாளே. |
நறுமணம் மிக்க கலவைச் சாந்து, கஸ்தூரி, வாசனை வீசும் நல்ல பூக்கள் இவைகளில் பொருந்திக் கூடியதும், பல ரேகைகளைக் கொண்ட வண்டுகளின் துயில் கொண்டதும், ஆகாயத்தில் உள்ள கருமேகம் போன்றதும், பரந்துள்ள இருளைப் போல் கரியதுமான கூந்தலை உடைய மாதர்களின் சிலம்பு அணிந்த மலர் போன்ற அடிகளை விரும்பி, அவர்கள் இட்ட வேலைகளை பணியாளாகச் செய்வதில் பெருமைகொள்ளும் பயனற்ற என்னை, ஒழுக்க முறையை அனுஷ்டிக்காத வீணனை, மூடனை, கர்வப் பேச்சு பேசும் உதவாக் கரையை, உரிய கலை நூல்களை ஆய்ந்து அறியாத முழு வெறுப்பு மிக்கவனை, அறிவு நீங்கிய வஞ்சகனை, குற்றங்கள் நீங்காத வினை நிரம்பியவனை, சொல்லும் சொல் தவறிய பாவியை, இறந்தபின் சேரும் நரகத்தில் இப்போதே விழுந்துள்ள மூடனை, எனக்கு என்ன ஆயிற்று என்று கவனித்துக் கேட்டு, திருவருள் பாலித்து, நன்கு ஆண்டருளுவதாகிய காலமும் ஒன்று உண்டா? பகைவர்களின் முப்புரங்களை அழித்துத் தூளாக்க மேரு மலையை ஒரு கையில் வில்லாக வளைத்த நாராயணி (விஷ்ணுவின் தங்கை), சிலம்பணிந்த மலை மகள், காஞ்சி நகரில் விளங்கும் தேவி காமாக்ஷி, இன்பமாய் ஆடும் மயில் போன்றவள், சிவபெருமானுடன் வாழும் அழகி, கடலை ஆடையாகக்கொண்ட உலகத்தை ஈன்ற தாயாகிய உமா தேவி, திருவானைக்காவில் வீற்றிருக்கும் அகிலாண்ட நாயகி அருளிய குழந்தையே, மாறுபட்ட போரில் முற்பட்டெழுந்த இராவணன் (வலியினால்) இடி ஒலியுடன் அலறியும், அதற்கு முன் கலங்கி வாய்விட்டு அழவும், (அவனுடைய) பல தலைகளை அரிந்துத் தள்ளிய இராமனும், விஸ்வரூபம் எடுத்தவனுமாகிய திருமாலின் மருகனே, முன்பு, ஒப்பற்ற குற மகள் வள்ளியின் நுண்ணிய நூல்போன்ற இடை மீதும், இரண்டு மார்புகளின் மீதும் தோய்ந்த காதலனே, மிகப் பழையதான வேதங்களை ஆய்ந்துள்ள தேவர்களின் பெருமாளே.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 365 - திருவானைக்கா - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - தனதன, தாந்த, தானன, மூடனை, மகள், தேவி, மீதும், பெருமாளே, காஞ்சி, சாந்து, பாவியை, தகதிமி, நாயகி, தோய்ந்த