பாடல் 36 - திருச்செந்தூர் - திருப்புகழ்

ராகம் - வலஜி /
பந்துவராளி; தாளம் - ஆதி
- எடுப்பு - 3/4 இடம்
- எடுப்பு - 3/4 இடம்
தானன தானன தானன தானன தானன தானன ...... தனதானா |
ஏவினை நேர்விழி மாதரை மேவிய ஏதனை மூடனை ...... நெறிபேணா ஈனனை வீணனை ஏடெழு தாமுழு ஏழையை மோழையை ...... அகலாநீள் மாவினை மூடிய நோய்பிணி யாளனை வாய்மையி லாதனை ...... யிகழாதே மாமணி நூபுர சீதள தாள்தனி வாழ்வுற ஈவது ...... மொருநாளே நாவலர் பாடிய நூலிசை யால்வரு நாரத னார்புகல் ...... குறமாதை நாடியெ கானிடை கூடிய சேவக நாயக மாமயி ...... லுடையோனே தேவிம நோமணி ஆயிப ராபரை தேன்மொழி யாள்தரு ...... சிறியோனே சேணுயர் சோலையி னீழலி லேதிகழ் சீரலை வாய்வரு ...... பெருமாளே. |
அம்பினை நிகர்க்கும் கண்களை உடைய மாதர்களை விரும்பும் கேடுகெட்டவனை, மூடனை, ஒழுக்கம் இல்லாத இழிந்தோனை, படிப்பே இல்லாத முழு ஏழையை, மடையனை, என்னைவிட்டு நீங்கா தீவினை மூடியுள்ள நோயும் பிணியும் கொண்டவனை, உண்மை இல்லாதவானை, இகழ்ந்து ஒதுக்காமல் சிறந்த மணிகளாலான சிலம்புள்ள உன் பாதங்களை, ஒப்பற்ற வாழ்வை (முக்தியை) யான் பெற தந்துதவும் ஒரு நாளும் எனக்கு உண்டோ? புலவர்கள் பாடிய நூல்களில் புகழப்பட்ட நாரத மாமுனிவர் முன்பு வருணித்த குறப்பெண் வள்ளியை விரும்பிச் சென்று காட்டிலே கூடிய வீரனே தலைவனே சிறந்த மயில் வாகனனே தேவி, மனோன்மணி, அன்னை, பராபரை, தேன் மொழியாள் உமையின் சிறுமகனே விண்வரை உயர்ந்த சோலைகளின் நிழலினிலே வளங்கும் திருச்செந்தூரில் அமர்ந்த பெருமாளே.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 36 - திருச்செந்தூர் - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - தானன, பெருமாளே, இல்லாத, சிறந்த, கூடிய, நாரத, மூடனை, ஏழையை, பாடிய