பாடல் 353 - திருவானைக்கா - திருப்புகழ்

ராகம் - .....;
தாளம் - .......
தந்தன தானன தத்ததத்தன தந்தன தானன தத்ததத்தன தந்தன தானன தத்ததத்தன ...... தனதான |
அஞ்சன வேல்விழி யிட்டழைக்கவு மிங்கித மாகந கைத்துருக்கவு மம்புயல் நேர்குழ லைக்குலைக்கவும் ...... நகரேகை அங்கையின் மூலம்வெ ளிப்படுத்தவு மந்தர மாமுலை சற்றசைக்கவு மம்பரம் வீணில விழ்த்துடுக்கவு ...... மிளைஞோர்கள் நெஞ்சினி லாசைநெ ருப்பெழுப்பவும் வம்புரை கூறிவ ளைத்திணக்கவு மன்றிடை யாடிம ருட்கொடுக்கவு ...... மெவரேனும் நிந்தைசெ யாதுபொ ருட்பறிக்கவு மிங்குவ லார்கள்கை யிற்பிணிப்பற நின்பத சேவைய நுக்ரகிப்பது ...... மொருநாளே குஞ்சர மாமுக விக்கிநப்ரபு அங்குச பாசக ரப்ரசித்தனொர் கொம்பன்ம கோதரன் முக்கண்விக்ரம ...... கணராஜன் கும்பிடு வார்வினை பற்றறுப்பவன் எங்கள்வி நாயக னக்கர்பெற்றருள் குன்றைய ரூபக கற்பகப்பிளை ...... யிளையோனே துஞ்சலி லாதச டக்ஷரப்பிர பந்தச டானன துஷ்டநிக்ரக தும்பிகள் சூழவை யிற்றமிழ்த்ரய ...... பரிபாலா துங்கக ஜாரணி யத்திலுத்தம சம்புத டாகம டுத்ததக்ஷிண சுந்தர மாறன்ம திட்புறத்துறை ...... பெருமாளே. |
மை தீட்டிய வேல் போன்ற கண்ணைக் கொண்டு அழைக்கவும், இன்பகரமாக சிரித்து மனதை உருக்கவும், மேகம் போன்ற கூந்தலைக் கலைத்து அவிழ்க்கவும், நகக் குறி இட்டு அழகிய கைகளால் தங்கள் காம எண்ணங்களை வெளியிடவும், மந்தர மலையைப் போன்ற மார்பகத்தைச் சிறிது அசைக்கவும், சேலையை அனாவசியமாக நெகிழ்த்தி, பின்பு உடுக்கவும், வாலிபர்கள் மனதில் காமத் தீயை எழுப்பவும், வீண் வார்த்தைகளைப் பேசி அவர்களை வளைத்து வசப்படுத்தவும், சபையில் நடனம் ஆடி காம மயக்கத்தைக் கொடுக்கவும், யாராயிருந்த போதிலும் இகழ்ச்சி இன்றி அவர்களிடமிருந்து பொருளை அபகரிக்கவும், இங்கு வல்லவர்களாகிய (பொது மகளிரின்) கையில் அகப்பட்டுக் கொண்ட கட்டு நீங்க, உன்னுடைய திருவடி சேவையை நீ தந்து அருளுவது கூடும் ஒரு நாள் உண்டாகுமோ? யானையின் அழகிய முகத்தைக் கொண்ட விக்ன விநாயகன் என்னும் பெரியோன், (சினத்தை அடக்கும்) அங்குசம், (காமத்தை அடக்கும்) பாசம் இரண்டும் கையில் கொண்ட பிரசித்தி பெற்றவன், ஒற்றைக் கொம்பன், பெரு வயிற்றன், (சூரியன், சந்திரன், அக்கினி ஆகிய) முக்கண்ணன், வலிமை வாய்ந்தவன், கணபதி, துதிப்பவர்களுடைய வினைகளையும் ஆசையையும் தீர்ப்பவன், எங்கள் விநாயக மூர்த்தி, திகம்பரரான சிவபெருமான் பெற்றருளிய மலை போன்ற உருவத்தை உடையவன், ஆகிய கற்பக விநாயகப் பிள்ளைக்குத் தம்பியே, அழிவு இல்லாத (சரவணபவ என்னும்) ஆறு எழுத்தின் பெருமை கூறும் நூல்களுக்கு உரியவனே, ஆறு திருமுகத்தனே, துஷ்டர்களை அழிப்பவனே, (மதுரையில் சொக்கநாதர் ஆலயத்தில் செதுக்கப்பட்டுள்ள அஷ்ட) கஜங்கள் தாங்கும் மணி மண்டபத்தில் (இயல், இசை, நாடகம் என்ற) முத்தமிழை ஆதரித்து வளர்த்தவனே*, உயர்வு பெற்ற திருவானைக்காவில் வீற்றிருக்கும் உத்தமனே, சம்பு தீர்த்தத்துக்கு அடுத்துத் தெற்கே உள்ள சுந்தர (உக்கர) பாண்டியன் மதிலின் வெளிப்புறத்தில் வீற்றிருக்கும் பெருமாளே.
* மதுரையில் முருகன் உக்கிர பாண்டியனாய் தோன்றி, தமிழைப் பரிபாலித்தார்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 353 - திருவானைக்கா - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - கொண்ட, தந்தன, தத்ததத்தன, தானன, அடக்கும், மதுரையில், வீற்றிருக்கும், என்னும், ஆகிய, அழகிய, மந்தர, சுந்தர, பெருமாளே, கையில்