பாடல் 314 - காஞ்சீபுரம் - திருப்புகழ்

ராகம் - .....;
தாளம் - ......
தனதனந் தத்தத் தத்தன தத்தம் தனதனந் தத்தத் தத்தன தத்தம் தனதனந் தத்தத் தத்தன தத்தம் ...... தனதான |
புனமடந் தைக்குத் தக்கபு யத்தன் குமரனென் றெத்திப் பத்தர்து திக்கும் பொருளைநெஞ் சத்துக் கற்பனை முற்றும் ...... பிறிதேதும் புகலுமெண் பத்தெட் டெட்டியல் தத்வம் சகலமும் பற்றிப் பற்றற நிற்கும் பொதுவையென் றொக்கத் தக்கதொ ரத்தந் ...... தனைநாளும் சினமுடன் தர்க்கித் துச்சிலு கிக்கொண் டறுவருங் கைக்குத் திட்டொரு வர்க்குந் தெரிவரும் சத்யத் தைத்தெரி சித்துன் ...... செயல்பாடித் திசைதொறுங் கற்பிக் கைக்கினி யற்பந் திருவுளம் பற்றிச் செச்சைம ணக்குஞ் சிறுசதங் கைப்பொற் பத்மமெ னக்கென் ...... றருள்வாயே கனபெருந் தொப்பைக் கெட்பொரி யப்பம் கனிகிழங் கிக்குச் சர்க்கரை முக்கண் கடலைகண் டப்பிப் பிட்டொடு மொக்கும் ...... திருவாயன் கவளதுங் கக்கைக் கற்பக முக்கண் திகழுநங் கொற்றத் தொற்றைம ருப்பன் கரிமுகன் சித்ரப் பொற்புகர் வெற்பன் ...... றனையீனும் பனவியொன் றெட்டுச் சக்ரத லப்பெண் கவுரிசெம் பொற்பட் டுத்தரி யப்பெண் பழயஅண் டத்தைப் பெற்றம டப்பெண் ...... பணிவாரைப் பவதரங் கத்தைத் தப்பநி றுத்தும் பவதிகம் பர்க்குப் புக்கவள் பக்கம் பயில்வரம் பெற்றுக் கச்சியில் நிற்கும் ...... பெருமாளே. |
தினைப்புனத்து மடந்தையாகிய வள்ளிக்கு ஏற்றதான புயங்களை உடையவன், குமரன் என்று போற்றி பக்தர்கள் துதிக்கின்ற பொருளை, மனத்தில் கொண்ட கற்பனைகள் முழுமையும், பிறவான பலவற்றையும், புகழ்ந்து சொல்லப்படும் தொண்ணூற்றாறு* வகையான தத்துவ உண்மைகளும் ஆக எல்லாவற்றையும், பற்றியும், பற்று இல்லாமலும் நிற்கும் பொதுப் பொருளை, சூரியனுக்கு ஒப்பாகத் தக்க (பேரொளியைக் கொண்ட) ஒப்பற்றச் செல்வத்தை நாள் தோறும், கோபத்துடன் வாதாடிப் பேசி சண்டையிட்டுக் கொண்டு அறு வகைச் சமயத்தாரும் கைக்குத்துடன் வாதம் செய்து, ஒருவருக்கும் தெரிதற்கு அரிதான சத்தியப் பொருளை தரிசனம் செய்து, உன் திருவிளையாடல்களைப் பாடி, திக்குகள் தோறும் (உள்ள யாவருக்கும்) எடுத்து உபதேசிக்க, இனி மேல் நீ சற்று தயை கூர்ந்து, வெட்சி மாலை மணம் வீசும், சிறிய சதங்கை அணிந்துள்ள உன் அழகிய திருவடித் தாமரையை எனக்கு எப்போது தந்து அருள்வாய்? கனத்த பெரிய வயிற்றில் எள், பொரி, அப்பம், பழம், கிழங்கு, கரும்பு இவைகளையும், சர்க்கரை, தேங்காய், கடலை, கற்கண்டு இவைகளையும் வாரி உண்டு, பிட்டுடன் விழுங்கும் திரு வாயை உடையவர், சோற்றுத் திரளை உண்ணும் சிறந்த துதிக்கையை உடைய கற்பக விநாயகர் (கற்பகத்தரு போல கேட்டதைக் கொடுப்பவர்), முக்கண்ணர், விளங்கும் நமது வீரம் வாய்ந்த ஒற்றைக் கொம்பர், யானை முகத்தினர், அழகிய, பொலிவுள்ள (மத்தகத்தில்) புள்ளிகளை உடைய மலை போன்ற கணபதியைப் பெற்ற அந்தணி, (1+ 8) ஒன்பது கோணங்களை உடைய சக்ரத்தில் (நவாவரணத்தில்) வீற்றிருக்கும் பெண், கெளரி, செவ்விய அழகிய பட்டாலாகிய மேலாடை அணிந்துள்ள அந்தப் பெண், பழையவளும், அண்டங்களைப் பெற்றவளுமாகிய இளம் பெண், தன்னைப் பணிபவர்களுடைய பிறப்பு என்னும் அலை கடலை விலக்கி நிறுத்தும் பகவதி (பார்வதி), ஏகாம்பர நாதரைக் கணவராக அடைந்தவள் ஆகிய உமா தேவிக்குப் பக்கத்தில் அமர்ந்து, வரத்தைப் பெற்று**, காஞ்சீபுரத்தில் நின்றருளும் பெருமாளே.
* 96 தத்துவங்கள் பின்வருமாறு:36 பரதத்துவங்கள் (அகநிலை): ஆத்ம தத்துவம் 24, வித்யா தத்துவம் 7, சிவ தத்துவம் 5.ஐம்பூதங்கள், அவற்றின் தன்மைகளோடு, ஐயைந்து - 25 (புறநிலை): மண், தீ, நீர், காற்று, வெளி.ஏனைய தத்துவங்கள் 35 (புறநிலை): வாயுக்கள் 10, நாடிகள் 10, கன்மங்கள் 5, அகங்காரம் 3, குணம் 3, வாக்குகள் 4.
** தந்தை சொல்லி அனுப்பியும் பிரமனைச் சிறையினின்று விடாது, பின்னர் அவர் நேரில் வந்து சொல்லிய பின் பிரமனை முருகன் விடுத்தார். இந்த குற்றம் நீங்க, முருகவேள் காஞ்சீபுரத்தில் உள்ள குமரக் கோட்டத்தில் தவம் புரிந்து, தோஷம் நீங்கி வரம் பெற்றார்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 314 - காஞ்சீபுரம் - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - தத்துவம், அழகிய, தனதனந், பொருளை, உடைய, நிற்கும், தத்தத், தத்தன, தத்தம், பெண், இவைகளையும், கடலை, தத்துவங்கள், புறநிலை, காஞ்சீபுரத்தில், தோறும், கற்பக, முக்கண், சர்க்கரை, பெருமாளே, கொண்ட, உள்ள, செய்து, அணிந்துள்ள