பாடல் 291 - திருத்தணிகை - திருப்புகழ்

ராகம் - ....; தாளம்
- .......
தனத்தன தத்தன தனதன தனதன தனத்தன தத்தன தனதன தனதன தனத்தன தத்தன தனதன தனதன ...... தனதான |
முகத்தைமி னுக்கிக ளசடிகள் கபடிகள் விழித்தும ருட்டிகள் கெருவிகள் திருடிகள் மொழிக்குள்ம யக்கிகள் வகைதனில் நகைதனில் ...... விதமாக முழித்தும யற்கொளு மறிவிலி நெறியிலி புழுக்குட லைப்பொரு ளெனமிக எணியவர் முயக்கம டுத்துழி தருமடி யவனிடர் ...... ஒழிவாக மிகுத்தழ கைப்பெறு மறுமுக சரவண புயத்திள கிக்கமழ் நறைமலர் தொடைமிக விசைக்கொடு மைப்பெறு மரகத கலபியும் ...... வடிவேலும் வெளிப்படெ னக்கினி யிரவொடு பகலற திருப்பதி யப்புக ழமுதியல் கவிசொலி விதித்தனெ ழுத்தினை தரவரு மொருபொரு ...... ளருளாயோ புகைத்தழ லைக்கொடு திரிபுர மெரிபட நகைத்தவ ருக்கிட முறைபவள் வலைமகள் பொருப்பிலி மக்கிரி பதிபெறு மிமையவ ...... ளபிராமி பொதுற்றுதி மித்திமி நடமிடு பகிரதி எழுத்தறி ருத்திரி பகவதி கவுரிகை பொருட்பய னுக்குரை யடுகிய சமைபவள் ...... அமுதாகச் செகத்தைய கட்டிடு நெடியவர் கடையவள் அறத்தைவ ளர்த்திடு பரசிவை குலவதி திறத்தமி ழைத்தரு பழையவ ளருளிய ...... சிறியோனே செருக்கும ரக்கர்கள் பொடிபட வடிவுள கரத்தில யிற்கொடு பொருதிமை யவர்பணி திருத்தணி பொற்பதி தனில்மயில் நடவிய ...... பெருமாளே. |
முகத்தை மினுக்குபவர்கள். முட்டாள்கள். வஞ்சகர்கள். கணகளால் விழித்துப் பார்த்து மருட்டுபவர்கள். கர்வம் கொண்டவர்கள். திருடிகள். பேச்சால் மயக்குபவர்கள். உபாயத்திலும் சிரிப்பிலும் ஒரு வகையாக செய்வதறியாமல் திகைத்து, மோகம் கொண்ட அறிவில்லாதவன் நான். ஒழுக்கம் இல்லாதவன். புழுக்கள் உள்ள குடலை (உடலை) ஒரு பொருட்டாக மிகவும் நினைத்து அந்தப் பொது மகளிரைத் தழுவுவதற்காக அடுத்து, திரிகின்ற அடியேனுடைய துன்பங்கள் நீங்க, மிகுந்த அழகைப் பெற்ற ஆறுமுகனே, சரவணனே, உனது திருப்புயங்களில் நெகிழ்வுற்று மணம் வீசும் தேன் நிறைந்த பூ மாலையும், மிக வேகமாகச் செல்லும் உக்ரமான பச்சை நிற மயிலும், கூரிய வேலும் வெளிப்பட்டு என் முன்னே தோன்ற, இரவு, பகல் என்னும் வேற்றுமை அற்று சுத்த அருள் நிலை உற, லக்ஷ்மிகரம் அழுத்தமாகப் பொருந்த, உனது திருப்புகழை அமுது பொருந்தும் பாடல்களாகப் பாடி, பிரமன் எழுதிய எழுத்து மெலிந்து அழிந்திட, மேம்பட்டு விளங்கும் ஒப்பற்ற பொருளை உபதேசித்து அருள்வாயாக. புகை தரும் நெருப்பினால் முப்புரங்கள் எரிபட்டு அழியும்படி சிரித்தவருடைய இடது பாகத்தில் வீற்றிருப்பவள், வலைஞர் மகளாக* (மீனவப் பெண்ணாகத்) தோன்றியவள், மலைகளுள் சிறந்த இமயமலை அரசன் பெற்ற இமயவல்லி, அபிராமி, அம்பலத்தில் திமித்திமி என நடனம் செய்யும் தேவி, இலக்கணங்கள் அறிந்துள்ள ருத்திரன் தேவி, பகவதி, கெளரி, ஒழுங்காக சொல்லும் பொருளும் போலச் சிவத்தோடு கலந்திட்டு நிற்பவள், அமுதுருண்டை போல பூமியை வயிற்றில் அடக்கிய நெடியோனாகிய திருமாலுக்குத் தங்கை, (காஞ்சியில் காமாட்சி தேவியாக முப்பத்திரண்டு)** அறங்களையும் வளர்த்த பர சிவை, குலச்சிறப்பமைந்தவள், (இயல், இசை, நாடகம் என்ற) முன்று வகையான தமிழைத் தந்த முன்னைப் பழம் பொருளான உமை அருளிய குழந்தையே, கர்வம் கொண்ட அசுரர்கள் பொடிபட்டு விழ, அழகிய கையில் வேல் கொண்டு சண்டை செய்து, தேவர்கள் பணிந்து போற்றும் திருத்தணிகையாகிய அழகிய தலத்தில் மயில் மீது நடனமிடும் பெருமாளே.
* மறைப் பொருளைத் தேவிக்கு உபதேசித்த போது, தேவியார் கவனக் குறைவாக இருப்பதைக் கண்ட சிவபெருமான் நீ மீன் பிடிக்கும் வலைஞருக்கு மகளாகுக. அப்போது உன்னை மணப்பேன் எனச் சபித்தார். மீனவள் வலைஞரால் வளர்க்கப்பட்டு வந்தாள். சிவன் தேவிக்கு உபதேசித்த போது முருகனையும், கணபதியையும் உள்ளே விட்ட காரணத்தால் நந்தி தேவரும் சுறா மீனாக ஆகுமாறு சபிக்கப்பட்டார். இந்தச் சுறாமீன் வலையில் அகப்படாது பல இடர்களைச் செய்ததால் வலைஞர் அரசன் மீனைப் பிடிப்பவர்களுக்குத் தன் பெண்ணை மணம் செய்விப்பேன் என அறிவித்தான். சிவபெருமான் வலைஞன் போல வந்து மீனைப் பிடித்துத் தேவியை மணந்தார்.
** பெரிய புராணத்தில் கூறிய முப்பத்திரண்டு அறங்கள் பின்வருமாறு:சாலை அமைத்தல், ஓதுவார்க்கு உணவு, அறுசமயத்தாருக்கும் உணவு, பசுவுக்குத் தீனி, சிறைச் சோறு, ஐயம், தின்பண்டம் நல்கல், அநாதைகளுக்கு உணவு, மகப்பெறுவித்தல், மகவு வளர்த்தல், சிசுக்களுக்குப் பால் நல்கல், அநாதைப் பிணம் சுடுதல், அநாதைகளுக்கு உடை, சுண்ணாம்பு பூசல், நோய்க்கு மருந்து, வண்ணார் தொழில், நாவிதத் தொழில், கண்ணாடி அணிவித்தல், காதோலை போடுதல், கண் மருந்து, தலைக்கு எண்ணெய், ஒத்தடம் தருதல், பிறர் துயர் காத்தல், தண்ணீர்ப் பந்தல், மடம் கட்டுதல், தடாகம் அமைத்தல், சோலை வளர்த்தல், தோல் பதனிடல், மிருகங்களுக்கு உணவு, ஏர் உழுதல், உயிர் காத்தல், கன்னிகாதானம்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 291 - திருத்தணிகை - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - தனதன, உணவு, தனத்தன, தத்தன, அமைத்தல், மீனைப், போது, உபதேசித்த, சிவபெருமான், அநாதைகளுக்கு, தொழில், காத்தல், மருந்து, வளர்த்தல், தேவிக்கு, நல்கல், முப்பத்திரண்டு, கர்வம், கொண்ட, பெருமாளே, பகவதி, திருடிகள், பெற்ற, உனது, தேவி, அரசன், வலைஞர், மணம், அழகிய