பாடல் 283 - திருத்தணிகை - திருப்புகழ்

ராகம் - ....; தாளம்
-
தானனத் தத்த தத்த தானனத் தத்த தத்த தானனத் தத்த தத்த ...... தனதான |
பூசலிட் டுச்ச ரத்தை நேர்கழித் துப்பெ ருத்த போர்விடத் தைக்கெ டுத்து ...... வடிகூர்வாள் போலமுட் டிக்கு ழைக்கு ளோடிவெட் டித்தொ ளைத்து போகமிக் கப்ப ரிக்கும் ...... விழியார்மேல் ஆசைவைத் துக்க லக்க மோகமுற் றுத்து யர்க்கு ளாகிமெத் தக்க ளைத்து ...... ளழியாமே ஆரணத் துக்க ணத்து னாண்மலர்ப் பொற்ப தத்தை யான்வழுத் திச்சு கிக்க ...... அருள்வாயே வாசமுற் றுத்த ழைத்த தாளிணைப் பத்த ரத்த மாதர்கட் கட்சி றைக்கு ...... ளழியாமே வாழ்வுறப் புக்கி ரத்ன ரேகையொக் கச்சி றக்கு மாமயிற் பொற்க ழுத்தில் ...... வரும்வீரா வீசுமுத் துத்தெ றிக்க வோலைபுக் குற்றி ருக்கும் வீறுடைப் பொற்கு றத்தி ...... கணவோனே வேலெடுத் துக்க ரத்தி னீலவெற் பிற்ற ழைத்த வேளெனச் சொற்க ருத்தர் ...... பெருமாளே. |
போர் புரிவது போல் அமைந்து, அம்பை (தனது கூர்மைக்கு) நேர் நிற்க முடியாமல் விரட்டித் தள்ளி, மிகுந்து நெருங்கி வந்த (ஆலகால) விஷத்தை வென்று அழித்து, மிகக் கூர்மை கொண்ட வாள் போலத் தாக்கி, காதிலுள்ள குண்டலங்கள் வரையிலும் ஓடிப் பாய்ந்து, கண்டவர் உயிரை வெட்டித் தொளைத்து, இன்பத்தைத் தன்னிடம் நிரம்பக் கொண்டுள்ள கண்களை உடைய பொது மகளிர் மேல் ஆசை வைத்து, கலக்கும் மோகத்தைக் கொண்டு, துயரத்துக்கு உள்ளாகி மிகவும் சோர்ந்து உள்ளம் குலைந்து போகாமல், வேதத்தின் கண் விரும்பிப் போற்றும் புது மலர் அணிந்துள்ள அழகிய திருவடியை நான் போற்றிச் சுகம் பெற அருள் புரிவாயாக. நறுமணம் கொண்டு விளங்கும் உனது திருவடியைப் பற்றிய பக்தர்கள், பொருளாசை கொண்ட விலைமாதர்களின் கண் என்னும் சிறைச் சாலையில் அடைபட்டு அழிந்து போகாமல் நல் வாழ்வை அடையும்படி புறப்பட்டு, ரத்ன வரிகள் போலப் பிரகாசிக்கும் நிறம் கொண்ட மேன்மையான மயிலின் அழகிய கழுத்தில் வருகின்ற வீரனே, ஒளி வீசும் முத்துக்கள் சிதறுண்ண, (தினைப்புனத்தில்) ஓலையால் ஆக்கப்பட்ட பரண் மீது புகுந்து நின்றிருக்கும் பெருமை வாய்ந்த அழகிய குறப் பெண்ணாகிய வள்ளியின் கணவனே, கையில் வேலாயுதத்துடன், நீலோற்பலம் (தினமும் சுனையில்) மலர்கின்ற திருத்தணிகை மலையில் மகிழ்ந்து வீற்றிருப்பவனே, செவ்வேளே எனக் கூறிப் புகழும் கருத்துள்ள அடியார்களின் பெருமாளே.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 283 - திருத்தணிகை - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - தத்த, தானனத், கொண்ட, துக்க, அழகிய, கொண்டு, போகாமல், ழைத்த, ளைத்து, ளழியாமே, ரத்ன, பெருமாளே