பாடல் 271 - திருத்தணிகை - திருப்புகழ்

ராகம் - ....; தாளம்
-
தனன தனனத் தனன தனனத் தனன தனனத் ...... தனதான |
சொரியு முகிலைப் பதும நிதியைச் சுரபி தருவைச் ...... சமமாகச் சொலியு மனமெட் டனையு நெகிழ்விற் சுமட ரருகுற் ...... றியல்வாணர் தெரியு மருமைப் பழைய மொழியைத் திருடி நெருடிக் ...... கவிபாடித் திரியு மருள்விட் டுனது குவளைச் சிகரி பகரப் ...... பெறுவேனோ கரிய புருவச் சிலையும் வளையக் கடையில் விடமெத் ...... தியநீலக் கடிய கணைபட் டுருவ வெருவிக் கலைகள் பலபட் ...... டனகானிற் குரிய குமரிக் கபய மெனநெக் குபய சரணத் ...... தினில்வீழா உழையின் மகளைத் தழுவ மயலுற் றுருகு முருகப் ...... பெருமாளே. |
மழை பொழிகின்ற மேகத்தையும், பதும நிதியையும், காமதேனுவையும், கற்பக மரத்தையும் (கொடையில்) நீ ஒப்பாய் என்று சொல்லிப் புகழ்ந்தாலும், மனம் ஓர் எள் அளவும் இளகி இரங்குதல் இல்லாத கீழ் மக்களின் அருகில் சென்று, இலக்கியத் தமிழ்ப் புலவர்கள் தெரிந்து பாடிய அருமையான பழைய பாடல்களைத் திருடியும், திரித்து நுழைத்தும் பாடல்களைப் பாடி, திரிகின்ற மயக்க அறிவை விட்டு, குவளை மலர் தினமும் மலர்கின்ற, உன்னுடைய, திருத்தணிகை மலையின் பெருமையைக் கூறும்படியான பாக்கியத்தை நான் பெறுவேனோ? (வள்ளியின்) கரிய புருவம் என்னும் வில் (காம வேதனையால்) வளைந்து சுருங்க, (காமனது ஐந்தாவது) கடைசிப் பாணமானதும்*, விஷம் நிறைந்ததும் ஆகிய நீலோற்பலம் என்னும் கொடுமை வாய்ந்த அம்பு உன் மேல் பட்டு, நீ அதனால் விரக வேதனை மிகுந்து, மிகுந்த அச்சத்துடன், மான்கள் பல உள்ள வள்ளி மலைக் காட்டுக்குச் சென்று, அவ்விடத்துக்கு உரிய குமரியாகிய வள்ளிக்கு அபயம் என்று உரைத்து, அவளது இரண்டு பாதங்களிலும் விழுந்து, பின்பு, மான் பெற்ற மகளாகிய வள்ளியைத் தழுவ மோகம் கொண்டு உருகி நின்ற முருகப் பெருமாளே.
* நீலோற்பல மலர் மன்மதனின் ஐந்தாவது ஈற்றுப் பாணம். மற்ற கணைகள் - தாமரை, மா, அசோகம், முல்லை.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 271 - திருத்தணிகை - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - தனனத், சென்று, மலர், என்னும், ஐந்தாவது, பெருமாளே, தழுவ, பதும, பழைய, பெறுவேனோ, கரிய, முருகப்