பாடல் 269 - திருத்தணிகை - திருப்புகழ்

ராகம் - ஆபோகி;
தாளம் - கண்டசாபு - 2 1/2
தகிட-1 1/2, தக-1
தகிட-1 1/2, தக-1
தனத்தன தனத்தம் தனத்தன தனத்தம் தனத்தன தனத்தம் ...... தனதான |
சினத்தவர் முடிக்கும் பகைத்தவர் குடிக்குஞ் செகுத்தவர் ருயிர்க்குஞ் ...... சினமாகச் சிரிப்பவர் தமக்கும் பழிப்பவர் தமக்கும் திருப்புகழ் நெருப்பென் ...... றறிவோம்யாம் நினைத்தது மளிக்கும் மனத்தையு முருக்கும் நிசிக்கரு வறுக்கும் ...... பிறவாமல் நெருப்பையு மெரிக்கும் பொருப்பையு மிடிக்கும் நிறைப்புக ழுரைக்குஞ் ...... செயல்தாராய் தனத்தன தனத்தந் திமித்திமி திமித்திந் தகுத்தகு தகுத்தந் ...... தனபேரி தடுட்டுடு டுடுட்டுண் டெனத்துடி முழக்குந் தளத்துட னடக்குங் ...... கொடுசூரர் சினத்தையு முடற்சங் கரித்தம லைமுற்றுஞ் சிரித்தெரி கொளுத்துங் ...... கதிர்வேலா தினைக்கிரி குறப்பெண் தனத்தினில் சுகித்தெண் திருத்தணி யிருக்கும் ...... பெருமாளே. |
முருகன் அடியார்களை கோபிப்பவர்களது தலைக்கும், அவர்களைப் பகை செய்தவர்களது குடும்பத்திற்கும், அவர்களைக் கொன்றவர்களது உயிருக்கும், அவர்களைக் கண்டு கோபமாகச் சிரிப்பவர்கட்கும், அவர்களைப் பழிக்கும் தன்மையினர்க்கும், திருப்புகழே நெருப்பாகி (அடியோடு அழிக்குமென) யாம் நன்கு அறிவோம். (அடியார்களாகிய யாம்) எதை நினைக்கினும் அதனை நினைத்தவுடனேயே தரவல்லதும், (பாடுவோர், கேட்போரின்) மனதையும் உருக்குவதும், மீண்டும் ஒரு தாய் வயிற்றில் பிறவாதவண்ணம் இருள் நிறைந்த கருக்குழியில் விழும் துயரை அறுப்பதும், அனைத்தையும் எரிக்கவல்ல நெருப்பையே எரிப்பதும், மலையையும் இடித்தெறிய வல்லதுமாகிய, எல்லாப் பொருள்களும் நிறைந்த திருப்புகழை பாடுகின்ற நற்பணியைத் தந்தருள்வாய். தனத்தன தனத்தந் திமித்திமி திமித்திந் (அதே ஒலியுடன்) பேரிகைகள் முழங்கவும், (அதே ஒலியுடன்) உடுக்கைகள் முழங்கவும், சேனைகளுடன் போருக்கு அணிவகுத்து வந்த கொடிய சூராதி அசுரர்களின் கோபத்தையும், அறுத்தெறிந்த பிணமலைகள் யாவையும், புன்னகை புரிந்தே அதிலெழுந்த அனற்பொறியால் எரித்துச் சாம்பலாக்கிய ஒளிமிக்க வேற்படையுள்ள வீரனே, தினைப்பயிர் விளையும் மலைக் குறவள்ளியை மார்புற அணைத்து இன்புற்று, உயர்ந்தோர் மதிக்கும் திருத்தணியில் வீற்றிருக்கும் பெருமாளே.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 269 - திருத்தணிகை - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - தனத்தன, தனத்தம், யாம், நிறைந்த, ஒலியுடன், முழங்கவும், அவர்களைக், பெருமாளே, தமக்கும், தனத்தந், திமித்திமி, திமித்திந், அவர்களைப்