பாடல் 268 - திருத்தணிகை - திருப்புகழ்

ராகம் -
நாதநாமக்ரியா; தாளம் - அங்கதாளம் - 7 1/2
தகிட-1 1/2, தகதிமி-2, தகதிமி-2, தகதிமி-2
தகிட-1 1/2, தகதிமி-2, தகதிமி-2, தகதிமி-2
தந்து தானன தனதன தனதன தந்து தானன தனதன தனதன தந்து தானன தனதன தனதன ...... தனதான |
கொந்து வார்குர வடியினு மடியவர் சிந்தை வாரிஜ நடுவினு நெறிபல கொண்ட வேதநன் முடியினு மருவிய ...... குருநாதா கொங்கி லேர்தரு பழநியி லறுமுக செந்தில் காவல தணிகையி லிணையிலி கொந்து காவென மொழிதர வருசம ...... யவிரோத தந்த்ர வாதிகள் பெறவரி யதுபிறர் சந்தி யாதது தனதென வருமொரு சம்ப்ர தாயமு மிதுவென வுரைசெய்து ...... விரைநீபச் சஞ்ச ¡£கரி கரமுரல் தமனிய கிண்கி ணீமுக விதபத யுகமலர் தந்த பேரருள் கனவிலு நனவிலு ...... மறவேனே சிந்து வாரமு மிதழியு மிளநவ சந்த்ர ரேகையு மரவமு மணிதரு செஞ்ச டாதரர் திருமக வெனவரு ...... முருகோனே செண்ப காடவி யினுமித ணினுமுயர் சந்த னாடவி யினுமுறை குறமகள் செம்பொ னூபுர கமலமும் வளையணி ...... புதுவேயும் இந்து வாண்முக வனசமு ம்ருகமத குங்கு மாசல யுகளமு மதுரித இந்த ளாம்ருத வசனமு முறுவலு ...... மபிராம இந்த்ர கோபமு மரகத வடிவமு மிந்த்ர சாபமு மிருகுழை யொடுபொரு மிந்த்ர நீலமு மடலிடை யெழுதிய ...... பெருமாளே. |
பூங்கொத்துக்களால் நிறைந்த குராமரத்து* அடியிலும், அடியார்களின் இதயத் தாமரையின் நடுவிலும், பல நெறிகளைக் கொண்ட வேதத்தின் நல்ல முடிவிலும், விளங்குகின்ற குருநாதனே, கொங்கு நாட்டில் அழகு நிறைந்த பழனியில் ஆறுமுகனாக எழுந்தருளியவனே, திருச்செந்தூரில் காவற்காரனாக விளங்குபவனே, திருத்தணிகையில் இணையில்லாதவனாக விளங்குபவனே, கூட்டமாக இரைச்சலுடன் தர்க்கித்து வருகின்ற, அநேக யுக்திகளைக்கொண்டு கொண்டு விரோதிக்கின்ற, சமயவாதிகளால் பெறுவதற்கு அரிதானதும், அன்னியர்களால் சந்திக்க முடியாததும், தனக்கே உரிய ஓர் ஒப்பற்ற பரம்பரையாக வருவதும், இதுவே என்று எனக்கு உபதேசித்து, வாசனை பொருந்திய கடம்பமாலை அணிந்ததும், வண்டினம் ஒலிப்பதும், பொன்னால் ஆன சிறுசலங்கைகளைத் தரித்ததுமான, சுகம் தரும் இரு திருவடித் தாமரைகளைத் தந்த பெரிய கிருபையை கனவிலும் நனவிலும் மறவேன். நதியையும் (கங்கை), ஆத்திமலரையும், கொன்றையையும், இளமையும் புதுமையும் உடைய பிறைச்சந்திரனையும், பாம்பையும் தரித்துள்ள சிவந்த சடையுடைய சிவபெருமானது அழகிய குழந்தையாக அவதரித்த முருகனே, செண்பகமரங்கள் நிறை வனத்திலும், பரண்மீதும், உயரமான சந்தன மரக் காட்டிலும் வாசம் செய்த குறமகள் வள்ளியின் செம்பொன் சிலம்பை அணிந்த தாமரை போன்ற பாதங்களையும், வளையல் அணிந்த இளம் மூங்கில் போன்ற கரங்களையும், சந்திரனை ஒத்த ஒளிமிக்க முகத் தாமரையையும், கஸ்தூரியும் குங்குமமும் தரித்த மார்பையும், இனிமையான யாழ் போன்றதும் அமிர்தம் போன்றதுமான வசனத்தையும், இளநகையையும், வசீகரிக்கும் (இந்த்ரகோபம் என்ற சிவந்த பூச்சி போன்ற) சிவப்பான அதரங்களையும், மரகதப் பச்சை வடிவத்தையும், வானவில் போன்ற புருவங்களையும், இரு குண்டலங்களோடு போர்புரிவது போல காதுவரை நீண்ட கண்களின் நீலமணிகளையும், மடல் ஏட்டில்** எழுதி வர்ணித்த பெருமாளே.
* குராமரம்: முருகன் விரும்பி அமரும் மரம். திருவிடைக்கழி என்ற தலத்தில் குராமரத்தின் கீழே முருகன் வீற்றிருக்கிறான்.
** மடல் எழுதுதல்: தலைவன் தலைவியின் அழகை வர்ணித்து ஓர் ஏட்டில் மடலாக எழுதி அவளது ஊருக்குச் சென்று நாற்சந்தியில் ஒன்றும் பேசாமல் ஒருவரது வசைக்கும் கூசாமல் படத்தில் எழுதிய உருவத்தைப் பார்த்தவாறு பகலும் இரவுமாக நிற்பான். அவனது உறுதிகண்டு தலைவியின் வீட்டார் தலைவனுக்கு அவளை மணம் செய்து வைப்பர். முருகன் வள்ளியை ஊரறிய மடல் எழுதி மணம் செய்துகொண்ட காட்சி கந்த புராணத்தில் வருகிறது.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 268 - திருத்தணிகை - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - தனதன, தகதிமி, முருகன், தந்து, மடல், தானன, எழுதி, அணிந்த, தலைவியின், மணம், சிவந்த, பெருமாளே, கொண்ட, கொந்து, தந்த, குறமகள், நிறைந்த, மிந்த்ர, விளங்குபவனே