பாடல் 244 - திருத்தணிகை - திருப்புகழ்

ராகம் - தோடி; தாளம்
- அங்கதாளம் - 5 1/2
தகிட-1 1/2, தகிட-1 1/2, தகதகிட-2 1/2
தகிட-1 1/2, தகிட-1 1/2, தகதகிட-2 1/2
தனன தான தானான தனன தான தானான தனன தான தானான ...... தனதான |
உடலி னூடு போய்மீளு முயிரி னூடு மாயாத உணர்வி னூடு வானூடு ...... முதுதீயூ டுலவை யூடு நீரூடு புவியி னூடு வாதாடு மொருவ ரோடு மேவாத ...... தனிஞானச் சுடரி னூடு நால்வேத முடியி னூடு மூடாடு துரிய வாகு லாதீத ...... சிவரூபம் தொலைவி லாத பேராசை துரிச றாத வோர்பேதை தொடுமு பாய மேதோசொ ...... லருள்வாயே மடல றாத வா¡£ச அடவி சாடி மாறான வரிவ ரால்கு வால்சாய ...... அமராடி மதகு தாவி மீதோடி யுழவ ரால டாதோடி மடையை மோதி யாறூடு ...... தடமாகக் கடல்பு காம காமீனை முடுகி வாளை தான்மேவு கமல வாவி மேல்வீழு ...... மலர்வாவிக் கடவுள் நீல மாறாத தணிகை காவ லாவீர கருணை மேரு வேதேவர் ...... பெருமாளே. |
உடலுக்கு உள்ளும், உடலில் சென்று மீளுகின்ற உயிருக்குள்ளும், அழியாத உணர்ச்சியுள்ளும், ஆகாயத்துள்ளும், முற்றிய தீக்குள்ளும், காற்றினுள்ளும், நீரின் உள்ளும், மண்ணினுள்ளும், சமயவாதம் புரிகின்ற எவரிடத்திலும் காணக்கிடைக்காத ஒப்பற்ற ஞான ஒளியினுக்குள்ளும், நான்கு வேத உச்சியிலும் ஊடாடுகின்றதும், துரிய* நிலையில் இருப்பதும், துன்பங்கள் கடந்த நிலையில் உள்ளதுமாகிய சிவ ரூபத்தை, முடிவற்ற பேராசையும் குற்றமும் நீங்காத ஓர் மூடனாகிய அடியேன் அடைவதற்கு உரிய வழி எதுவோ, அந்த உபதேச மொழியைச் சொல்லி வழிகாட்டி அருள்வாயாக. இதழ்கள் நீங்காத தாமரைப் பூவின்காட்டை அழித்து, தனக்குப் பகையான வரிபடர்ந்த வரால் மீன்கள் தோற்றுப்போய் பின்வாங்கும்படி போர் புரிந்து, செல்லும் வழியில் இருந்த நீர்பாயும் மதகைத் தாண்டி மேலே ஓடி, வயலில் உழும் உழவர்கள் தன்னை வருத்தாதபடி தப்பி ஓடி, வழியில் உள்ள நீர் மடைகளைத் தாக்கி, ஆற்றின் வழியிலே சென்று, கடலில் புகுந்து, அங்குள்ள பெரிய மீனை விரட்டித் தாக்கி, வாளை மீன் தான் இருந்த தாமரைக்குளத்தில் வந்து வீழும் (இத்தனை பெருமையை உடைய) மலர்ச் சுனையில்** தெய்வமணம் உள்ள நீலோத்பல மலர் மலர்வது என்றும் தவறாத திருத்தணிகைக்குக் காவலனே, வீரனே, கருணையில் மேரு மலை போன்றவனே, தேவர்களின் பெருமாளே.
* துரியை என்பது ஜாக்ரம் (விழிப்பு), சொப்பனம் (கனவு), சுழுத்தி (உறக்கம்) என்ற மூன்று நிலைகளையும் கடந்த நிலையாகும்.
** திருத்தணியின் தாமரைக்குளத்தில் இருக்கும் வாளை மீனின் ஆற்றல், 'மடல் அறாத' முதல் 'மலர்வாவி' வரை உள்ள ஆறு அடிகளில், கூறப்படுகிறது. முருகனின் தம்பியும் தூதுவரும் ஆன வீரபாகுத் தேவர் தூதுசெல்லும் வழியில் அரக்கர்களைக் கொன்று, கடல்நடுவில் உள்ள வீரமஹேந்திரம் சென்று போர் புரிந்து வெற்றியுடன் மீண்டு வந்ததையும் இது குறிப்பால் காட்டுகின்றது. - கந்த புராணம்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 244 - திருத்தணிகை - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - னூடு, உள்ள, சென்று, வழியில், வாளை, தானான, இருந்த, புரிந்து, தாக்கி, தாமரைக்குளத்தில், போர், நிலையில், பெருமாளே, மேரு, உள்ளும், தகிட, கடந்த, நீங்காத