பாடல் 241 - திருத்தணிகை - திருப்புகழ்

ராகம் - ....; தாளம்
-
தனத்தனத் தனத்தனத் தனத்தனத் தனத்தனத் தனத்தனத் தனத்தனத் ...... தனதான |
அருக்கிமெத் தெனச்சிரித் துருக்கியிட் டுளக்கருத் தழித்தறக் கறுத்தகட் ...... பயிலாலே அழைத்தகப் படுத்தியொட் டறப்பொருட் பறிப்பவர்க் கடுத்தபத் தமுற்றுவித் ...... தகர்போலத் தரிக்கும்வித் தரிக்குமிக் கதத்துவப் ப்ரசித்தியெத் தலத்துமற் றிலைப்பிறர்க் ...... கெனஞானம் சமைத்துரைத் திமைப்பினிற் சடக்கெனப் படுத்தெழச் சறுக்குமிப் பிறப்புபெற் ...... றிடலாமோ பொருக்கெழக் கடற்பரப் பரக்கர்கொத் திறப்புறப் பொருப்பினிற் பெருக்கவுற் ...... றிடுமாயம் புடைத்திடித் தடற்கரத் துறப்பிடித் தகற்பகப் புரிக்கிரக் கம்வைத்தபொற் ...... கதிர்வேலா திருத்தமுத் தமிழ்க்கவிக் கொருத்தமைக் குறத்தியைத் தினைப்புனக் கிரித்தலத் ...... திடைதோயுஞ் சிவத்தகுக் குடக்கொடிச் செருக்கவுற் பலச்சுனைச் சிறப்புடைத் திருத்தணிப் ...... பெருமாளே. |
சுருக்கமாகவும், அமைதியுடனும் சிரித்து, காண்பவர்களின் மனதை உருக்கி உள்ளக் கருத்தை அழித்து, மிகவும் கருநிறமுள்ள கண்களின் குறிப்புகளால், அழைத்து தம் வலைக்குள் அகப்பட வைத்து, ஒன்றையும் விடாமல் பொருளைப் பறிக்கும் வேசியர்களிடம் செல்கின்ற தவறைச் செய்தும், அறிவாளி போல் நடித்தும், விரிவாகப் பேசியும், மேலான உண்மைகளை எடுத்துப் பேசும் கீர்த்தி (தன்னைப் போல்) எந்த ஊரிலும் வேறு யார்க்கும் கிடையாது என்று சொல்லும்படி ஞானப் பேச்சுகளை புதிதாகப் படைத்துப் பேசியும், ஒரு இமைப் பொழுதில் வேகத்துடன் படுத்து எழுதல் போல நழுவி ஒழியும் இந்த நிலையாப் பிறவியைப் பெற்றிடல் நன்றோ? வறண்டு உலர்ந்த காட்சி எழும்படி கடல் வற்றவும், அசுரர்களின் கூட்டம் மடிந்து ஒழியவும், கிரெளஞ்ச மலையில் நிரம்ப இருந்த மாயம் உடைந்து அழியவும், வலிமையான திருக்கரத்தில் தங்கும்படி பிடித்த (வேலனே), கற்பக புரியாகிய தேவநாட்டின் மீது அருள் வைத்த அழகிய கதிர் வேலனே, செப்பிய முத்தமிழ்ப் பாடலுக்கு ஒப்பற்றவனாய் நிற்பவனே, மை தீட்டிய கண்களை உடைய வள்ளியை தினைப் புனம் உள்ள வள்ளிமலை நாட்டில் அணைந்தவனே, சிவப்பு நிறம் கொண்ட சேவற்கொடி பெருமிதம் அடைய, நீலோற்பலம் மலர்கின்ற சுனையை உடைய சிறப்புள்ள திருத்தணிகையில் வீற்றிருக்கும் பெருமாளே.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 241 - திருத்தணிகை - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - தனத்தனத், உடைய, வேலனே, போல், பெருமாளே, பேசியும்