பாடல் 233 - சுவாமி மலை - திருப்புகழ்

ராகம் - ....; தாளம்
-
தான தத்த தந்த தான தத்த தந்த தான தத்த தந்த ...... தனதான |
வார முற்ற பண்பின் மாத முற்ற நண்பி னீடு மெய்த்து யர்ந்து ...... வயதாகி வாலை யிற்றி ரிந்து கோல மைக்கண் மங்கை மார்க ளுக்கி சைந்து ...... பொருள்தேடி ஆர மிக்க பொன்க ளால மைத்த மர்ந்த மாப ணிக்கள் விந்தை ...... யதுவான ஆட கொப்ப மைந்த வோலை முத்த முங்கொ டாவி மெத்த நொந்து ...... திரிவேனோ சூர னைத்து ரந்து வேர றப்பி ளந்து சூழ்சு ரர்க்க ணன்பு ...... செயும்வீரா சூக ரத்தொ டம்பு தானெ டுத்து வந்த சூத னுக்கி சைந்த ...... மருகோனே ஏரெ திர்த்து வந்து நீர்கள் கட்டி யன்று தானி றைக்க வந்த ...... தொருசாலி யேமி குத்து யர்ந்த மாவ யற்கள் மிஞ்சு மேர கத்த மர்ந்த ...... பெருமாளே. |
(கணவனுக்கும் மனைவிக்கும்) அன்பு பூண்ட தன்மையில் (கருவுற்று), மாதங்கள் பல செல்ல (வளர்ந்து), அந்த அன்பினால் வளரும் உடலில் பிறந்து, வயது நிரம்பி, காளைப் பருவத்தில் திரிதலுற்று, அழகிய மை பூசிய கண்களை உடைய பெண்களிடத்தே நேசம் கொண்டு, (அவர்களுக்குக் கொடுக்கப்) பொருள் தேடி, மாலைகள், நல்ல பொன்னால் செய்யப்பட்டு விளங்கும் சிறந்த ஆபரணங்கள், விசித்திரமான பொன்னால் வேலைப்பாடு அமைந்த காதணியையும், முத்துக்களையும் கொடுத்து, என் உயிர் மிகவும் நொந்து திரிவேனோ? சூரனை விரட்டி ஓட்டி அடியோடு அவனைப் பிளந்து, சூழ்ந்துள்ள தேவர்களிடத்தே அன்பு காட்டிய வீரனே, பன்றியின் உருக்கொண்டு (வராக அவதாரத்தில்)* அழகிய பூமியை மேலே எடுத்து வந்த தந்திரம் வாய்ந்த திருமாலுக்கு உகந்த மருகனே, ஏர் எதிர்த்து வர நீரைப் பாய்ச்சிக் கட்டி, அப்போதைக்கப்போது உழவர்கள் இறைத்ததன் பயனால் விளைந்த ஒப்பற்ற செந்நெல் பயிர்களே பெருகி உயர்ந்து வளர்ந்த சிறந்த வயல்கள் நிறைந்துள்ள சுவாமி மலையில் வீற்றிருக்கும் பெருமாளே.
* திருமால் வராகாவதாரம் எடுத்த வரலாறு:இரணியாக்ஷன் என்னும் அசுரன் பூமியைப் பாய் போல் சுருட்டி எடுத்துக் கொண்டு பாதாளத்தில் மறைந்து கொண்டான்.திருமால் பன்றி உருவம் கொண்டு, பாதாளத்திற்குச் சென்று, தன் கொம்பினால் அவனைக் கொன்று, பூமியைக் கொம்பினால் தாங்கி மேலே கொண்டு வந்தார்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 233 - சுவாமி மலை - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - கொண்டு, தத்த, வந்த, தந்த, பொன்னால், மேலே, கொம்பினால், திருமால், அழகிய, சிறந்த, பெருமாளே, மர்ந்த, முற்ற, நொந்து, திரிவேனோ, கட்டி, அன்பு