பாடல் 232 - சுவாமி மலை - திருப்புகழ்

ராகம் - ....; தாளம்
-
தானதன தான தந்த தானதன தான தந்த தானதன தான தந்த ...... தனதான |
வாதமொடு சூலை கண்ட மாலைகுலை நோவு சந்து மாவலிவி யாதி குன்ம ...... மொடுகாசம் வாயுவுட னேப ரந்த தாமரைகள் பீன சம்பின் மாதர்தரு பூஷ ணங்க ...... ளெனவாகும் பாதகவி யாதி புண்க ளானதுட னேதொ டர்ந்து பாயலைவி டாது மங்க ...... இவையால்நின் பாதமல ரான தின்க ணேயமற வேம றந்து பாவமது பான முண்டு ...... வெறிமூடி ஏதமுறு பாச பந்த மானவலை யோடு ழன்று ஈனமிகு சாதி யின்க ...... ணதிலேயான் ஈடழித லான தின்பின் மூடனென வோது முன்புன் ஈரஅருள் கூர வந்து ...... எனையாள்வாய் சூதமகிழ் பாலை கொன்றை தாதுவளர் சோலை துன்றி சூழமதில் தாவி மஞ்சி ...... னளவாகத் தோரணநன் மாட மெங்கு நீடுகொடி யேத ழைந்த சுவாமிமலை வாழ வந்த ...... பெருமாளே. |
வாத நோய், வயிற்றுளைவு நோய், கழுத்தைச் சுற்றி வரும் புண் கட்டி, மார்பு எரிச்சல், எலும்புருக்கி நோய், பெரிய இழுப்பு நோய், மகோதரத்துடன், கோழை நோய், வாயுவினால் உண்டாகும் படர்தாமரை போன்ற சொறி, படை, மூக்கடைப்பு, பின்னும் ஒழுக்கம் கெட்ட விலைமாதர்களுடன் இணைவதால் கிடைக்கும் ஆபரணங்கள் என்று சொல்லத்தக்க புண் வகைகள், பாவ நோய்ப் புண்கள் ஆகிய இவை உடனே என்னைப் பீடிப்பதால், படுக்கையை விடாது கிடந்து, உடல் நலம் குறைந்து, இக்காரணத்தால் உனது திருவடி மலர்களில் அன்பு என்பதை முற்றும் மறந்து, பாவம் நிறைந்த கள்ளைக் குடித்து, அதனால் மயக்கம் மிகுந்து, குற்றம் தரும் பந்த பாசக் கட்டுகளான வலையில் அகப்பட்டு அலைந்து, இழிவான என் ஜாதித் தொழில்களிலே ஈடுபட்டு, நான் வலிமை அற்று அழிந்த பின், இவன் ஒரு முட்டாள் எனப் பிறர் கூறுவர். (அங்ஙனம் பிறர்) சொல்லுவதற்கு முன்பு உனது கருணை நிறைந்த திருவருள் மிக்கு வந்து என்னை ஆட் கொள்வாயாக. மாமரம், மகிழ மரம், பாலை மரம், கொன்றை மரம் (இவைகளின்) பூந்தாது நிறைந்துள்ள சோலைகள் நெருங்கியுள்ளதும், சூழ்ந்துள்ள மதில் உயர்ந்து மேகத்தை அளாவி நிற்பதும், தோரணங்கள், நல்ல வீடுகளில் எங்கும் உயர் கொடிகள் தழைந்துள்ளதுமான, சுவாமிமலையில் வாழ வந்த பெருமாளே.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 232 - சுவாமி மலை - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - நோய், தானதன, மரம், தந்த, புண், பிறர், நிறைந்த, உனது, வந்த, பந்த, யாதி, வந்து, பாலை, கொன்றை, பெருமாளே