பாடல் 230 - சுவாமி மலை - திருப்புகழ்

ராகம் - ....; தாளம்
-
தனனா தனத்த தனனா தனத்த தனனா தனத்த ...... தனதான |
மருவே செறித்த குழலார் மயக்கி மதனா கமத்தின் ...... விரகாலே மயலே யெழுப்பி யிதழே யருத்த மலைபோல் முலைக்கு ...... ளுறவாகிப் பெருகாத லுற்ற தமியேனை நித்தல் பிரியாது பட்ச ...... மறவாதே பிழையே பொறுத்து னிருதாளி லுற்ற பெருவாழ்வு பற்ற ...... அருள்வாயே குருவா யரற்கு முபதேசம் வைத்த குகனே குறத்தி ...... மணவாளா குளிர்கா மிகுத்த வளர்பூக மெத்து குடகா விரிக்கு ...... வடபாலார் திருவே ரகத்தி லுறைவா யுமைக்கோர் சிறுவா கரிக்கு ...... மிளையோனே திருமால் தனக்கு மருகா வரக்கர் சிரமே துணித்த ...... பெருமாளே. |
மருக்கொழுந்து வாசனை மிகுந்த கூந்தலையுடைய பெண்கள் என்னை மயக்கி காம சாஸ்திரத்தின் தந்திர வகைகளாலே மோகத்தை மூட்டிவிட்டு, வாயிதழ் ஊறலை ஊட்டிவிட, மலைபோன்ற அவர்களின் மார்பகங்களில் விருப்பங்கொண்டு மிக்க ஆசை பூண்ட அடியேனை நித்தமும் பிரியாமலும், என்னிடம் அன்பு மாறாமலும், என் பிழைகளைப் பொறுத்து உன் இரண்டு திருவடிகளிலும் பொருந்தியுள்ள பேரின்பப் பெருவாழ்வை யான் பற்றும்படியாக அருள் புரிவாயாக. குருமூர்த்தியாக நின்று சிவபெருமானுக்கும் பிரணவ மந்திரத்தை உபதேசம் செய்த குகனே, குறத்தி வள்ளியின் மணவாளனே, குளிர்ந்த சோலைகளால் நிறைந்த, வளர்ந்தோங்கிய கமுக மரங்கள் சூழ்ந்த, மேற்கினின்று வரும் காவிரிக்கு வடபாலுள்ள திருவேரகமாம் சுவாமிமலையில் வாழ்பவனே, உமாதேவியின் ஒப்பற்ற மகனே, யானைமுகக் கணபதிக்குத் தம்பியே, திருமாலுக்கு மருமகனே, அரக்கரின் சிரங்களை வெட்டியெறிந்த பெருமாளே.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 230 - சுவாமி மலை - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - தனனா, தனத்த, குறத்தி, பெருமாளே, குகனே, லுற்ற, மயக்கி, பொறுத்து