பாடல் 211 - சுவாமி மலை - திருப்புகழ்

ராகம் - யமுனா
கல்யாணி; தாளம் - அங்கதாளம்
தகதகிட-2 1/2, தகிட-1 1/2, தகதிமி-2
தகதகிட-2 1/2, தகிட-1 1/2, தகதிமி-2
தனதனன தந்த தானனத் தனதனன தந்த தானனத் தனதனன தந்த தானனத் தனதான |
கறைபடுமு டம்பி ராதெனக் கருதுதலொ ழிந்து வாயுவைக் கருமவச னங்க ளால்மறித் ...... தனலூதிக் கவலைபடு கின்ற யோககற் பனைமருவு சிந்தை போய்விடக் கலகமிடு மஞ்சும் வேரறச் ...... செயல்மாளக் குறைவறநி றைந்த மோனநிர்க் குணமதுபொ ருந்தி வீடுறக் குருமலைவி ளங்கு ஞானசற் ...... குருநாதா குமரசர ணென்று கூதளப் புதுமலர்சொ ரிந்து கோமளப் பதயுகள புண்ட ¡£கமுற் ...... றுணர்வேனோ சிறைதளைவி ளங்கு பேர்முடிப் புயலுடன டங்க வேபிழைத் திமையவர்கள் தங்க ளூர்புகச் ...... சமராடித் திமிரமிகு சிந்து வாய்விடச் சிகரிகளும் வெந்து நீறெழத் திகிரிகொள நந்த சூடிகைத் ...... திருமாலும் பிறைமவுலி மைந்த கோவெனப் பிரமனைமு னிந்து காவலிட் டொருநொடியில் மண்டு சூரனைப் ...... பொருதேறிப் பெருகுமத கும்ப லாளிதக் கரியெனப்ர சண்ட வாரணப் பிடிதனைம ணந்த சேவகப் ...... பெருமாளே. |
குற்றங்களுக்கு இடமான உடல் நிலைத்து நிற்காது என்று எண்ணுதலை விட்டு, (அவ்வுடல் நிலைத்து நிற்கச் செய்ய விரும்பி) உள் இழுக்கும் வாயுவை தொழில்* மந்திரங்களால் தடுத்து நிறுத்தி, மூலாக்கினியை எழுப்பி, கவலைக்கு இடம் தருகின்ற யோக மார்க்கப் பயிற்சிகளைப் பற்றி எண்ணும் சிந்தனைகள் தொலையவும், கலக்கத்தைத் தரும் ஐம்புலன்களும் ஒடுங்கி வேரற்றுப் போகவும், என் செயல்கள் எல்லாம் அழியவும், குறைவின்றி நிறைந்ததான மவுன நிலையை, குணங்கள் அற்ற நிலையை, நான் அடைந்து வீட்டின்பத்தைப் பெறவும், (அதற்காக) சுவாமி மலையில் விளங்கி வீற்றிருக்கும் ஞான சற் குரு நாதனே, குமரனே, சரணம் என்று கூதளச் செடியின் புது மலரைச் சொரிந்து, (உனது) அழகிய இரண்டு திருவடித் தாமரைகளைச் சிந்தித்து உன்னை உணர்வேனோ? சிறையும் விலங்குமாய்க் கிடந்து விளங்கியவர்களான தேவர்கள் இந்திரன் முதலான யாவரும் ஒருங்கே பிழைக்கவும், தேவர்கள் தங்கள் ஊராகிய (அமராவதி என்ற) பொன்னுலகில் குடி போகவும், போரைப் புரிந்து, இருள் மிகுந்த கடல் ஓலமிட, மலைகள் வெந்து பொடியாக, (சுதர்ஸன) சக்கரத்தை ஏந்தியவரும் பொன்முடியைத் தரித்தவரும் ஆகிய திருமாலும், பிறைச் சந்திரனை முடியில் சூடிய சிவபெருமானின் மைந்தனே, (சூரனை அழித்தருளுக என்று) இரங்கி வேண்ட, பிரமனைக் கோபித்துச் சிறையிட்டு, ஒரு நொடிப் பொழுதில் நெருங்கி எதிர்த்த சூரனுடன் சண்டை செய்து வென்று, பெருகி வருகின்ற மத நீருள்ள மத்தகத்தையும், அழகையும் கொண்ட யானை எனப்படும் வீரம் கொண்ட (ஐராவதம் என்னும்) வெள்ளை யானையால் வளர்க்கப்பட்ட தேவயானையை மணம் புரிந்த வலிமை வாய்ந்த பெருமாளே.
* தொழில் மந்திரங்கள் ஆகர்ஷண, ஸ்தம்பநாதி மந்திரங்கள் ஆகும். இவற்றை கர்மயோகிகள் மேற்கொள்வர்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 211 - சுவாமி மலை - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - தனதனன, தானனத், தந்த, நிலையை, தேவர்கள், மந்திரங்கள், போகவும், கொண்ட, பெருமாளே, ளங்கு, வெந்து, திருமாலும், நிலைத்து