பாடல் 186 - பழநி - திருப்புகழ்

ராகம் - ....; தாளம் -
தனன தனன தனத்த தனன தனன தனத்த தனன தனன தனத்த ...... தனதான |
முதிர வுழையை வனத்தில் முடுகி வடுவை யழித்து முதிய கயல்கள் கயத்தி ...... னிடையோடி முரண வளரும் விழிக்குள் மதன விரகு பயிற்றி முறைமை கெடவு மயக்கி ...... வருமாதர் மதுர அமுத மொழிக்கு மகுட களப முலைக்கு வலிய அடிமை புகுத்தி ...... விடுமாய மனதை யுடைய அசட்டு மனிதன் முழுது புரட்டன் மகிழ வுனது பதத்தை ...... யருள்வாயே சதுரன் வரையை யெடுத்த நிருத னுடலை வதைத்து சகடு மருத முதைத்த ...... தகவோடே தழையு மரமு நிலத்தில் மடிய அமரை விளைத்த தநுவை யுடைய சமர்த்தன் ...... மருகோனே அதிர முடுகி யெதிர்த்த அசுர ருடலை வதைத்து அமரர் சிறையை விடுத்து ...... வருவோனே அரிய புகழை யமைத்த பெரிய பழநி மலைக்கு ளழகு மயிலை நடத்து ...... பெருமாளே. |
நன்றாக மானை காட்டுக்குள் துரத்தி, மாவடுவை (உப்பிலிட்டு) அழித்து, பெரிய கயல் மீன்களை குளத்தினிடையே (புகும்படி) ஓட்டி* (இவ்வாறு இவைகளுடன்) மாறுபட்டு வளர்கின்ற கண்களால் காம லீலைத் தந்திரங்களைச் செய்து, எனது ஒழுக்கம் கெடும்படி மயக்கி வருகின்ற பொது மகளிருடைய இனிமையான அமுதம் போன்ற சொற்களுக்கும், அணி முடி போன்றதும் கலவைச் சந்தனம் அணிந்ததுமான மார்பகத்துக்கும் வலிய இழுத்து என்னை அடிமைப் படுத்தி விடுகின்ற மாயம் நிறைந்த மனம் கொண்ட மூட மனிதனாகிய நான் முழு பொய்யன். களிக்கும்படி உன் திருவடியைத் தந்து எனக்கு அருள்வாயாக. திறமை வாய்ந்தவனும், (கயிலை) மலையை அசைத்து எடுத்தவனுமான அரக்கனாகிய ராவணனின் உடலை அழித்தும், (சகடாசுரனாக வந்த) வண்டிச் சக்கரத்தை உதைத்தும், மருத மரத்தையும் வீழ்த்தித் தள்ளிய பக்குவத்தால், இலைகளுடனும், மரமும் பூமியில் பட்டு அழியவும் கடும்போர் புரிந்த வில் ஏந்திய சமர்த்தனுமாகிய திருமாலின் மருகனே, பூமி அதிரும்படியாக விரைந்து நெருங்கி வந்து எதிர்த்த அசுரர்களின் உடலை வதைத்து, தேவர்களைச் சிறையினின்றும் மீள வைத்து எழுந்தருளியவனே. அருமையான புகழைக் கொண்ட பெருமை வாய்ந்த பழனி மலையில் அழகான மயிலை நடத்தும் பெருமாளே.
* மாதர் கண்களுக்கு மான், மாவடு, கயல் மீன்கள் ஒப்பாகா என்ற கருத்தை வலியுறுத்துகிறார்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 186 - பழநி - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - வதைத்து, தனத்த, பெருமாளே, கயல், உடலை, கொண்ட, மயிலை, மருத, முடுகி, மயக்கி, வலிய, யுடைய, பெரிய