பாடல் 184 - பழநி - திருப்புகழ்

ராகம் - ....; தாளம் -
தனதன தத்தத் தனந்த தந்தன தனதன தத்தத் தனந்த தந்தன தனதன தத்தத் தனந்த தந்தன ...... தந்ததான |
முகிலள கத்திற் கமழ்ந்த வண்பரி மளஅலர் துற்றக் கலந்தி டந்தரு முகிழ்நுதி தைத்துத் துயர்ந்த மங்கைய ...... ரங்கமீதே முகம்வெயர் வுற்றுப் பரந்து செங்கயல் விழியிணை செக்கச் சிவந்து குங்கும ம்ருகமத மத்தத் தனங்க ளின்மிசை ...... யெங்குமேவி உகவுயி ரொத்துப் புயங்க ளின்புற வுறவினை யுற்றுத் திரண்டு கொங்கள வுறுமணை யுற்றுத் திரங்கு மஞ்சமி ...... லொன்றிமேவி ஒளிதிகழ் பத்மக் கரங்க ளின்புற முறுவளை யொக்கக் கலின்க லென்கவு முயர்மய லுற்றுற் றிரங்கு மன்பதொ ...... ழிந்திடாதோ செகமுழு தொக்கப் பயந்த சங்கரி அடியவர் சித்தத் துறைந்த சம்ப்ரம சிவனொரு பக்கத் துறைந்த மங்கைசு ...... மங்கைநீடு திகழ்வன பச்சைப் பசங்கி யம்பண கரதலி கச்சுற் றிலங்கு கொங்கையள் திருவரு ணற்பொற் பரந்தி டும்பரை ...... யண்டமீதே பகலிர வற்றிட் டுயர்ந்த அம்பிகை திரிபுரை முற்றிட் டிரண்டொ டொன்றலர் பரிவுற வொக்கச் செயும்ப ரம்ப்ரமி ...... யன்புகூரும் பதிவ்ரதை மிக்கச் சிரந்தெ ரிந்தருள் பகிரதி வெற்பிற் பிறந்த பெண்தரு பழநியில் வெற்பிற் றிகழ்ந்து நின்றருள் ...... தம்பிரானே. |
மேகம் போல் கரிய கூந்தலில் வாசனை உள்ள நறு மணம் கொண்ட மலர்கள் நெருங்கும்படிச் சேர்ந்து இடம்பெறும்படி, தான் தொடர்ந்த மாதர்களின் உடலின் மேல் நக நுனியால் குறிகளை அழுந்தப் பதித்து, முகத்தில் வியர்வை உற்றுப் பரவ, செங்கயல் மீன் போன்ற கண் இணைகள் செக்கச் சிவக்க, குங்குமம், கஸ்தூரி இவைகளை அணிந்து செருக்குற்ற மார்பகங்களின் மேல் எல்லாம் பொருந்தி, வெளிப்பட்டுத் தோன்றும் இவ்வேசியர்கள் உயிரே போலும் எனக் கருதி, புயங்கள் இன்புறும்படியாக கூடல் செய்து, திரண்டுள்ளதும் வாசனை கலந்துள்ளதுமான படுக்கையில் அமர்ந்து, சுருக்கம் கொள்ளும் கட்டிற் படுக்கையில் பொருந்தியிருந்து, ஒளி விளங்கும் தாமரை போன்ற கைகளின் மேலுள்ள வளைகள் ஒருங்கே கலின்கல் என்று ஒலி செய்ய, மிக்க மோகம் கொண்டு (அவர்களுக்கு) இரக்கம் காட்டும் அன்பு ஒழியாதோ? உலகம் முழுதும் பெற்ற சங்கரி, அடியார்களுடைய உள்ளத்தில் உறைகின்ற சிறப்பு வாய்ந்த சிவபெருமானுடைய ஒரு பாகத்தில் உறைகின்ற மங்கை, நல்ல மங்கை, பெரிதும் விளங்கும் பச்சைப் பசேல் என்ற நிறம் உடையவள், யாழ் ஏந்திய கரத்தினள், கச்சு அணிந்த மார்பகங்களை உடையவள், திருவருள் என்னும் நல்ல செல்வத்தைப் பரப்பி உலகைப் பாலிக்கும் பராசக்தி, அண்டங்களுக்கு அப்பால் பகலும் இரவும் அற்றுப் போன உயர்ந்த இடத்தில் உள்ள அம்பிகை, திரிபுரங்களை அழித்தவள், மும்மூர்த்திகளுக்கும் உயர்ந்தவளாய் மூவரும் அல்லரான சிவபெருமான் அன்பு கொள்ளுபடி தவம் செய்த பர தேவதை, அன்பு மிக்க பதிவிரதை, சிறந்த (சிவபெருமானுடைய) தலையில் விளக்கமுற்று அருளும் கங்கா நதி உற்பத்தியாகும் (இமய) மலையில் உதித்த பெண்ணாகிய பார்வதி தந்து அருளி குழந்தையே, பழனி மலை மீது விளங்கி நின்றருளும் தனிப் பெருந் தலைவனே.
* இப்பாடலில் உமா தேவியின் புகழ் கூறப்பட்டுள்ளது. மும்மூர்த்திகளுக்கும் மேலானவள் என்பது குறிக்கத் தக்கது. மும்மூர்த்திகள் = பிரமன், திருமால், ருத்திரன். சிவபெருமான் இவர்களுக்கு அப்பாற்பட்டு பார்வதியின் பதியாகத் திகழ்கிறார்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 184 - பழநி - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - தனதன, தந்தன, தனந்த, அன்பு, தத்தத், உறைகின்ற, விளங்கும், சிவபெருமானுடைய, மிக்க, நல்ல, சிவபெருமான், மும்மூர்த்திகளுக்கும், உடையவள், படுக்கையில், மங்கை, வாசனை, யுற்றுத், ளின்புற, செக்கச், செங்கயல், சங்கரி, துறைந்த, உள்ள, வெற்பிற், அம்பிகை, பச்சைப், மேல்