பாடல் 140 - பழநி - திருப்புகழ்

ராகம் - .....; தாளம் -
தனத்த தனதன தனதன தந்தத் தனத்த தனதன தனதன தந்தத் தனத்த தனதன தனதன தந்தத் ...... தனதான |
கறுத்த குழலணி மலரணி பொங்கப் பதித்த சிலைநுத லணிதில தம்பொற் கணைக்கு நிகர்விழி சுழலெழு கஞ்சச் ...... சிரமான கழுத்தி லுறுமணி வளைகுழை மின்னக் குவட்டு முலையசை படஇடை யண்மைக் கமைத்த கலையிறு குறுதுவள் வஞ்சிக் ...... கொடிபோலச் சிறுத்த களமிகு மதமொழு கின்சொற் குயிற்க ளெனமட மயிலெகி னங்கட் டிருக்கு நடைபழ கிகள்கள பங்கச் ...... சுடைமாதர் திகைத்த தனமொடு பொருள்பறி யொண்கட் குவட்டி யவர்வலை யழலுறு பங்கத் திடக்கு தலைபுலை யவர்வழி யின்பைத் ...... தவிர்வேனோ பறித்த விழிதலை மழுவுழை செங்கைச் செழித்த சிவபர னிதழிநல் தும்பைப் படித்த மதியற லரவணி சம்புக் ...... குருநாதா பருத்த அசுரர்க ளுடன்மலை துஞ்சக் கொதித்த அலைகட லெரிபட செம்பொற் படைக்கை மணியயில் விடுநட னங்கொட் ...... கதிர்வேலா தெறித்து விழியர வுடல்நிமி ரம்பொற் குவட்டொ டிகைகிரி பொடிபட சண்டச் சிறப்பு மயில்மிசை பவுரிகொ ளும்பொற் ...... றிருபாதா சிறக்கு மழகிய திருமகள் வஞ்சிக் குறத்தி மகளுமை மருமகள் கொங்கைச் சிலைக்கு ளணைகுக சிவமலை கந்தப் ...... பெருமாளே. |
கரிய கூந்தலில் அணியப்பட்ட மலர் வரிசை நன்கு விளங்கவும், வில்லைப் போன்ற நெற்றியில் பதித்துள்ள அழகிய பொட்டும், ஒளி பொருந்திய அம்புக்கு ஒத்த, சுழற்சி கொண்டு எழும் தாமரை மலர் போன்ற, கண்களும், கமுகுக்கு ஒத்த கழுத்தில் உள்ள மணி மாலையும், வளைகளும், குண்டலங்களும் ஒளி விட்டு வீசவும், மலை போன்ற மார்பகங்கள் அசையவும், இடுப்பை ஒட்டினாற்போல அணிந்துள்ள சேலை இறுகக் கட்டியபடியால் வஞ்சிக் கொடியைப் போல் இடை நெளியவும், மெல்லிய கழுத்திலிருந்து பொங்கி எழும் இன்ப மதம் ஒழுகும் இனிய சொற்கள் குயில்களின் குரலைப் போல் ஒலிக்க, அழகிய மயில்கள் அன்னங்கள் இவைகளின் நடை போலக் காணப்படும் நடையைப் பழகுபவரும், கலவைச் சாந்து படும் இறுகிய கச்சை அணிந்த விலைமாதர்கள் ஆடவரைத் திகைக்கச் செய்கின்ற ஆற்றலோடு பொருளைப் பறிக்கும் ஒளி பொருந்திய கண்களை வளைத்து தம்முடைய வலையாகிய நெருப்பு ஒத்த துன்பத்தில் திடமாக வீழச் செய்யவல்ல கீழானவருடைய வழியில் செல்வதால் கிடைக்கும் இன்பத்தை நான் ஒழிக்க மாட்டேனோ? கண்களுடன் விளங்கும், பறிக்கப்பட்ட பிரம கபாலத்தையும், மழுவாயுதம், மான் இவைகளை ஏந்திய திருக்கைகள் இலங்கும் சிவபெருமான், புது கொன்றை தும்பை மலர்கள், பொருந்திய சந்திரன், கங்கை நதி, பாம்பு இவைகளைச் சடையில் அணிந்த சம்புவுக்கு குருநாதனே, பருத்த அசுரர்களின் கிரெளஞ்சம், ஏழு குலகிரிகள் ஆகிய மலைகள் மடியவும், கொதித்த அலை வீசும் கடல் எரியவும், செவ்விய அழகிய படைகளை ஏந்தும் திருக் கரத்தினின்று மணி கட்டிய வேலாயுதத்தைத் தெரிந்து செலுத்தி வெற்றி நடனம் புரியும் கதிர்வேலனே, கண் தெறித்து ஆதி சேஷனது உடம்பு நிமிரவும், அழகிய ஒளி பொருந்திய சிகரங்களை உடைய ஒள்ளிய திசைக் கிரிகளும் பொடியாகும்படியாக, வேகத்தில் சிறந்த மயிலின் மீது ஏறி உலகை வலம் வந்த அழகிய பாதங்களை உடையவனே, சிறந்த அழகு பொருந்திய லக்ஷ்மியின் புதல்வியும், வஞ்சிக் கொடி போன்ற குறமகளும், உமா தேவியின் மருமகளுமாகிய வள்ளி நாயகியின் மார்பாகிய மலையைத் தழுவும் குகனே, சிவ மலையில் (* பழநியில்) வீற்றிருக்கும் கந்தப் பெருமாளே.
* இடும்பன் காவடியாகக் கொண்டு வந்த சிவ மலை, சக்தி மலைகளுள், முருகன் வீற்றிருக்கும் பழனி மலை, சிவமலை எனப்படும் - பழனி புராணம்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 140 - பழநி - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - தனதன, அழகிய, பொருந்திய, வஞ்சிக், தந்தத், ஒத்த, தனத்த, போல், வந்த, பழனி, வீற்றிருக்கும், எழும், சிறந்த, அணிந்த, மலர், கொதித்த, பருத்த, தெறித்து, சிவமலை, பெருமாளே, கந்தப், கொண்டு