பாடல் 139 - பழநி - திருப்புகழ்

ராகம் - ....; தாளம் -
தனதனன தத்த தந்த தனதனன தத்த தந்த தனதனன தத்த தந்த ...... தனதான |
களபமுலை யைத்தி றந்து தளவநகை யைக்கொ ணர்ந்து கயலொடுப கைத்த கண்கள் ...... குழைதாவக் கரியகுழ லைப்ப கிர்ந்து மலர்சொருகு கொப்ப விழ்ந்து கடியிருளு டுக்கு லங்க ...... ளெனவீழ முழுமதியெ னச்சி றந்த நகைமுகமி னுக்கி யின்ப முருகிதழ்சி வப்ப நின்று ...... விலைகூறி முதலுளது கைப்பு குந்து அழகுதுகி லைத்தி றந்து முடுகுமவ ருக்கி ரங்கி ...... மெலிவேனோ இளமதிக டுக்கை தும்பை அரவணிப வர்க்கி சைந்து இனியபொரு ளைப்ப கர்ந்த ...... குருநாதா இபமுகவ னுக்கு கந்த இளையவம ருக்க டம்ப எனதுதலை யிற்ப தங்க ...... ளருள்வோனே குழகெனஎ டுத்து கந்த உமைமுலைபி டித்த ருந்து குமரசிவ வெற்ப மர்ந்த ...... குகவேலா குடிலொடுமி கச்செ றிந்த இதணுளபு னத்தி ருந்த குறவர்மக ளைப்பு ணர்ந்த ...... பெருமாளே. |
கலவைச் சந்தனம் அணிந்த மார்பகத்தைத் திறந்து, முல்லை போன்ற பற்களைக் காட்டி, கயல் மீனோடு மாறுபட்ட கண்கள் (செவிகளிலுள்ள) தோடுகளின் மீது தாவவும், கருத்த கூந்தலை வாரி ஒழுங்கு படுத்தி, (மலர்கள்) சொருகப்பட்ட கொண்டை கலைவதால், இருளை நீக்குகின்ற நட்சத்திரக் கூட்டங்களைப் போல் உதிரவும், பூரணச் சந்திரனைப் போல சிறந்த ஒளி பொருந்திய முகத்தை மினுக்கி, இன்பம் தரும் வாசனையுள்ள இதழ்கள் சிவக்கும்படி (வாயிற்படியில்) நின்று விலை பேசி, (வந்தவருடைய) பொருள் யாவும் தமது கையில் வந்த பின் அழகிய புடவையைத் திறந்து நெருங்கி உறவாடும் வேசியர்களுக்கு (ஈடுபட்டு) இரங்கி மெலிந்து நிற்பேனோ? பிறைச் சந்திரனையும், கொன்றை மலரையும், தும்பையையும், பாம்பையும் அணிந்துள்ள சிவபெருமானுக்கு இணங்கி, இனிமை வாய்ந்த (பிரணவமாகிய) மூலப் பொருளை உபதேசித்த குரு நாதனே, யானை முகக் கணபதிக்குப் பிரியமான தம்பியே, நறுமணமுடைய கடப்ப மாலையை அணிபவனே, எனது தலையில் உனது திருவடியைச் சூட்டியவனே, குழந்தை என்று எடுத்து மகிழ்ந்த உமா தேவியின் திருமுலைகளைப் பற்றி (ஞானப்) பாலை உண்ட குமரனே, சிவ மலையில் (பழநி மலையில்) வீற்றிருக்கும் குகனே, வேலனே, சிறு குடிசைக்கு அருகில் நெருங்கியிருந்த பரண் அமைந்த தினைப் புனத்திலிருந்த குறப்பெண்ணாகிய வள்ளியை மணந்த பெருமாளே.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 139 - பழநி - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - தனதனன, தந்த, தத்த, திறந்து, மலையில், பெருமாளே, கண்கள், றந்து, நின்று, கந்த