பாடல் 137 - பழநி - திருப்புகழ்

ராகம் - ....; தாளம் -
தனதன தத்தத் தனந்த தந்தன தனதன தத்தத் தனந்த தந்தன தனதன தத்தத் தனந்த தந்தன ...... தந்ததான |
கலவியி லிச்சித் திரங்கி நின்றிரு கனதனம் விற்கச் சமைந்த மங்கையர் கயல்கள்சி வப்பப் பரிந்து நண்பொடு ...... மின்பமூறிக் கனியித ழுற்றுற் றருந்தி யங்குறு மவசமி குத்துப் பொருந்தி யின்புறு கலகம்வி ளைத்துக் கலந்து மண்டணை ...... யங்கமீதே குலவிய நற்கைத் தலங்கொ டங்கணை கொடியிடை மெத்தத் துவண்டு தண்புயல் குழலள கக்கட் டவிழ்ந்து பண்டையி ...... லங்கம்வேறாய்க் குறிதரு வட்டத் தடர்ந்த சிந்துர முகதல முத்துப் பொலிந்தி லங்கிட கொடியம யற்செய்ப் பெருந்த டந்தனில் ...... மங்கலாமோ இலகிய சித்ரப் புனந்த னிந்துறை குறமகள் கச்சுக் கிடந்த கொங்கைமி னினிதுறு பத்மப் பதம்ப ணிந்தருள் ...... கந்தவேளே எழுகடல் வற்றப் பெருங்கொ டுங்கிரி யிடிபட மிக்கப் ப்ரசண்டம் விண்டுறு மிகலர்ப தைக்கத் தடிந்தி லங்கிய ...... செங்கைவேலா பலவித நற்கற் படர்ந்த சுந்தரி பயில்தரு வெற்புத் தருஞ்செ ழுங்கொடி பணைமுலை மெத்தப் பொதிந்து பண்புறு ...... கின்றபாலைப் பலதிசை மெச்சத் தெரிந்த செந்தமிழ் பகரென இச்சித் துகந்து கொண்டருள் பழநியில் வெற்பிற் றிகழ்ந்து நின்றருள் ...... தம்பிரானே. |
கலவி இன்பத்தில் ஆசைப்பட்டு பரிந்து (தங்கள் வீட்டு வாயிலில்) நின்று இரண்டு பருத்த மார்பகங்களை விற்பதற்கு ஒப்புதலாகி நிற்கும் விலை மகளிரின் கயல் மீன் போன்ற கண்கள் சிவக்கும்படி அவர்கள் மீது அன்பு கொண்டு நட்புடன் இன்பத்தில் அழுந்தி, கொவ்வைப் பழம் போன்ற இதழ்களை அடிக்கடி உண்டு, அச்செயல்களால் தன் வசம் இழத்தல் அதிகப்பட்டு காம லீலைகளில் பொருந்தி இன்பம் உறுகின்றபின் மறுபடியும் ஊடல் கொண்டு பின் கலந்தும், நெருங்கிய பஞ்சு அணைகளுடன் கூடிய கட்டிலின் மேல் குலவுகின்ற பலமுள்ள கைகளோடும் அங்கு அணைந்து, கொடி போலும் மெல்லிய இடை மிகவும் துவண்டு, குளிர்ந்த மேகம் போன்ற அளக பாரக் கூந்தல் கட்டு அவிழவும், முன்னிருந்த உடம்பின் பொலிவு வேறுபடவும், அடையாளமாகவும், வட்டமாகவும் நெருக்கமாகவும் உள்ள குங்குமப் பொட்டுள்ள முகத்தில் (முத்துப் போன்ற) வேர்வைத் துளி பொலிந்து விளங்கிடவும், தீய காம மயக்கத்தை உண்டு பண்ணும் பெரிய குளத்தில் விழுந்து மழுங்கிப் போகலாமா? விளங்கும் அழகிய தினைப் புனத்தில் தனித்திருந்த குறமகளாகிய வள்ளி, கச்சு அணிந்த மார்பகங்களை உடைய மின்னொளி போன்ற வள்ளியின் இனிமை உள்ள தாமரை ஒத்த பாதங்களில் பணிந்தருளிய கந்த வேளே, ஏழு கடல்களும் வற்றிப் போகும்படி, பெரிய பொல்லாத கிரெளஞ்ச மலை இடிந்து விழ, மிகுந்த வேகத்தை வெளிப்படுத்திக் கொண்டு வந்த பகைவர் பதைபதைக்க அழிவு செய்து விளக்கமுற்ற வேலினைச் சிவந்த கையில் ஏந்தினவனே, பல விதமான நல்ல கற்புக் குணங்கள் மிக்க அழகியும், நன்கு பயின்ற இமய மலை அரசன் ஈன்ற செழிப்பான கொடி போன்ற உமா தேவியின் திருமுலையில் மிக்கு நிறைந்த குணமுள்ள சிவஞான அமுதத்தை, பல திக்குகளில் உள்ளவர்களும் மெச்சிப் புகழும்படி சிறந்த தமிழ்ப் பாக்களை பாடுக என்று கூறிக் கொடுக்க, (அப்பாலை) விருப்பமுடனும் மகிழ்ச்சியுடனும் உட்கொண்டு (தேவாரத்தை) அருளிய திருஞானசம்பந்தனே, பழனி மலை மீது விளங்கி நின்றருளும் தம்பிரானே.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 137 - பழநி - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - கொண்டு, தனதன, தந்தன, தனந்த, தத்தத், உண்டு, பெரிய, மீது, உள்ள, கொடி, தம்பிரானே, பொருந்தி, பரிந்து, துவண்டு, முத்துப், இன்பத்தில், மார்பகங்களை