பாடல் 1325 - புனவாயில் - திருப்புகழ்
ராகம் - ரஞ்சனி
தாளம் - ஆதி
- எடுப்பு - 3/4 இடம்
தாளம் - ஆதி
- எடுப்பு - 3/4 இடம்
தனனந் தந்தன தானன தந்தன தனனந் தந்தன தானன தந்தன தனனந் தந்தன தானன தந்தன ...... தனதான |
உரையுஞ் சென்றது நாவும் உலர்ந்தது விழியும் பஞ்சுபொ லானது கண்டயல் உழலுஞ் சிந்துறு பால்கடை நின்றது ...... கடைவாயால் ஒழுகுஞ் சஞ்சல மேனிகு ளிர்ந்தது முறிமுன் கண்டுகை கால்கள்நி மிர்ந்தது உடலுந் தொந்தியும் ஓடிவ டிந்தது ...... பரிகாரி வரவொன் றும்பலி யாதினி என்றபின் உறவும் பெண்டிரு மோதிவி ழுந்தழ மறல்வந் திங்கென தாவிகொ ளுந்தினம் ...... இயல்தோகை மயிலுஞ் செங்கைக ளாறிரு திண்புய வரைதுன் றுங்கடி மாலையும் இங்கித வனமின் குஞ்சரி மாருடன் என்றன்முன் ...... வருவாயே அரிமைந் தன்புகழ் மாருதி என்றுள கவியின் சங்கமி ராகவ புங்கவன் அறிவுங் கண்டருள் வாயென அன்பொடு ...... தரவேறுன் அருளுங் கண்டத ராபதி வன்புறு விஜயங் கொண்டெழு போதுபு லம்பிய அகமும் பைந்தொடி சீதைம றைந்திட ...... வழிதோறும் மருவுங் குண்டலம் ஆழிசி லம்புகள் கடகந் தண்டைபொன் நூபுர மஞ்சரி மணியின் பந்தெறி வாயிது பந்தென ...... முதலான மலையுஞ் சங்கிலி போலம ருங்குவிண் முழுதுங் கண்டந ராயணன் அன்புறு மருகன் தென்புன வாயில மர்ந்தருள் ...... பெருமாளே. |
பேச்சும் நின்றுவிட, நாவும் வறண்டு போய்விட, கண்களும் பஞ்சடைந்தன போல ஆகிவிட, இவற்றைக் கண்டு வருத்தம் அடையும் உறவினர்கள் வாயிலே விட்ட பால் உள்ளே இறங்காமல் தேங்கி நிற்க, கடைவாயிலிருந்து பால் ஒழுக, துயரம் மிகுந்த உடம்பு குளிர்ந்து போக, முடங்கிய கைகளும் கால்களும் யமனுடைய பாசக்கயிற்றைக் கண்டு நிமிர்ந்திட, பருத்த உடலும் தொந்தியும் இளைத்து வேகமாக வடிந்து போக, வைத்தியர் வந்து பார்த்து இனிமேல் ஒரு வைத்தியமும் பலிக்காது என்று கூறிவிட்ட பின்பு சுற்றத்தாரும் பெண்களும் உடலின் மீது விழுந்து முட்டிக்கொண்டு அழ, யமன் இங்கு வந்து என் உயிரைக் கொண்டு போகின்ற நாளில் அழகிய தோகை மயிலும், பன்னிரு திருக்கரங்களும், பன்னிரு வலிய தோள்களாம் குன்றுகளிலே தவழும் வாசமிகு கடப்ப மாலையும், பண்பு மிகுந்த, காட்டு மின்னல் போன்ற வள்ளி, தேவயானை ஆகியோருடன் என் முன்னால் நீ வர வேண்டும். சூரியனின் மைந்தனான சுக்¡£வன் புகழ் மிக்க வானர மந்திரியாகிய மாருதியினிடத்தில் இராகவனாகிய மரவுறி தரித்தவனது அறிவின் திறத்தைக் கண்டு அருள்வாய் என்று அன்போடு அனுப்ப, அநுமன் இராமனின் அருளைக் கண்டு, மேலும் கூறினான் "அந்த அண்டத்து அதிபதி (இராவணன்) வலுக்கட்டாயமாக (சீதையை அபகரித்து) வானில் புஷ்பக விமானத்தில் கொண்டு செல்லும்போது, மனம் வருந்தி வாயாரப் புலம்பிய பசுங்கொடி போன்ற சீதையும் மறைவாக, சென்ற வழியில் எல்லாம், தான் அணிந்திருந்த நகைகளாகிய குண்டலம், வளைகள், சிலம்புகள், கொலுசு, பொன் சதங்கை, மாலைகள், மணிகள் ஆகியவற்றைப் பந்து போல் வீசி எறிந்தாள், அந்த நகை மூட்டை இதுதான்" என்று தந்திட, மேரு மலை அளவுக்கு உயர்ந்து பக்கத்தில் தொடராக உள்ள வானம் அனைத்தையும் (திரிவிக்ரமாவதாரத்தில்) பாதத்தால் அளந்த நாராயணனாம் திருமால் மிகவும் அன்பு கொண்ட மருகனாம், தென் திசையில் உள்ள புனவாயில்* என்ற தலத்தில் வீற்றிருக்கும் பெருமாளே.
* 'புனவாயில்' என்ற ஊர் இப்பொழுது 'திருப்புனவாசல்' என்று விளங்குகின்றது.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 1325 - புனவாயில் - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - தந்தன, கண்டு, தனனந், தானன, கொண்டு, வந்து, அந்த, உள்ள, மிகுந்த, பன்னிரு, பெருமாளே, நாவும், தொந்தியும், மாலையும், குண்டலம், பால்