பாடல் 1321 - பழமுதிர்சோலை - திருப்புகழ்

ராகம் - யமுனா
கல்யாணி - மத்யம ஸ்ருதி
தாளம் - ஆதி
- எடுப்பு - 1/2 இடம்
தாளம் - ஆதி
- எடுப்பு - 1/2 இடம்
தனதன தத்தத் தனதன தத்தத் தனதன தத்தத் தனதன தத்தத் தனதன தத்தத் தனதன தத்தத் ...... தனதானா |
தலைமயிர் கொக்குக் கொக்கந ரைத்துக் கலகலெ னப்பற் கட்டது விட்டுத் தளர்நடை பட்டுத் தத்தடி யிட்டுத் ...... தடுமாறித் தடிகொடு தத்திக் கக்கல்பெ ருத்திட் டசனமும் விக்கிச் சத்தியெ டுத்துச் சளியுமி குத்துப் பித்தமு முற்றிப் ...... பலகாலும் திலதயி லத்திட் டொக்கவெ ரிக்கத் திரிபலை சுக்குத் திப்பிலி யிட்டுத் தெளியவ டித்துற் றுய்த்துடல் செத்திட் ...... டுயிர்போமுன் திகழ்புகழ் கற்றுச் சொற்கள்ப யிற்றித் திருவடி யைப்பற் றித்தொழு துற்றுச் செனனம றுக்கைக் குப்பர முத்திக் ...... கருள்தாராய் கலணைவி சித்துப் பக்கரை யிட்டுப் புரவிசெ லுத்திக் கைக்கொடு வெற்பைக் கடுகுந டத்தித் திட்டென எட்டிப் ...... பொருசூரன் கனபடை கெட்டுத் தட்டற விட்டுத் திரைகட லுக்குட் புக்கிட எற்றிக் களிமயி லைச்சித் ரத்தில்ந டத்திப் ...... பொருகோவே குலிசன்ம கட்குத் தப்பியு மற்றக் குறவர்ம கட்குச் சித்தமும் வைத்துக் குளிர்தினை மெத்தத் தத்துபு னத்திற் ...... றிரிவோனே கொடியபொ ருப்பைக் குத்திமு றித்துச் சமரம்வி ளைத்துத் தற்பர முற்றுக் குலகிரி யிற்புக் குற்றுரை யுக்ரப் ...... பெருமாளே. |
தலைமயிரானது கொக்கின் இறகு போல நரைத்தும், கலகல என்று பல்லின் கட்டுக்கள் யாவும் விட்டும், தளர்ந்த நடை ஏற்பட்டு, தத்தித்தத்தி அடிகளை வைத்தும், தடுமாற்றத்துடன் கம்பை ஊன்றித் தள்ளாடி நடந்தும், இருமல் தொடர்ந்து பெருகியும், உணவு தொண்டையில் அடைத்து விக்கல் எடுத்தும், வாந்தி எடுத்தும், சளி அதிகரித்தும், பித்தமும் பலத்துப் போய், பலதடவையும் எள் எண்ணெயில் இட்டு ஒன்றுபட்டு எரிக்க கடுகு, நெல்லி, தான்றி ஆகிய மூன்றும் சேர்ந்த திரிபலை, சுக்கு, திப்பிலி முதலியவற்றை இட்டு வறுத்து, தெளிவாக கஷாயத்தை வடிகட்டி வாய்க்குள் இட்டும், உடல் செத்துப்போய், உயிர் நீங்குவதற்கு முன்னாலே, விளக்கமுடைய உனது திருப்புகழைக் கற்று, அப்புகழுக்கு உண்டான சொற்களைப் பழகுமாறு செய்து, உன் திருவடிகளைப் பற்றிக்கொண்டு தொழுது வணங்கி, பிறப்பை அறுப்பதற்கு மேலான மோக்ஷத்திற்குத் திருவருளை அருள்வாயாக. சேணத்தை இறுக்கக் கட்டி, அங்கவடியை அமைத்து, குதிரைப் படையை நடத்தி, துதிக்கையை உடைய மலைபோன்ற யானைப்படையை வேகமாகச் செலுத்தி திடுமென ஓட்டிப் போர் செய்யும் சூரன் பெரும் சேனை அழிந்து போய், தடுக்கமுடியாமல் கைவிட்டு, அலைமோதும் கடலுக்குள் புகுந்து ஒளிந்து கொள்ள, தாக்கி, செருக்குடன் கூடிய மயிலை அழகுறச் செலுத்தி போர் செய்யும் பெருமானே, வஜ்ராயுதப் படையுள்ள இந்திரன் மகளாம் தேவயானைக்குத் தப்பியும் குறவர் மகளாம் வள்ளிக்கு மனத்தைப் பறிகொடுத்தும், குளிர்ந்த தினை மிகுதியாக விளைகின்ற தினைப்புனத்திலே அலைந்து திரிந்தவனே, கொடுமையான கிரெளஞ்சமலையை வேலால் குத்தி அழித்து, போரை விளைவித்து, தானே மேலானவனாக நின்று, மேலான மலையிற் சென்று பொருந்தி வீற்றிருக்கின்ற பெருஞ்சினத்துப் பெருமாளே.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 1321 - பழமுதிர்சோலை - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - தனதன, தத்தத், மேலான, செலுத்தி, செய்யும், மகளாம், இட்டு, போர், எடுத்தும், யிட்டுத், விட்டுத், திரிபலை, திப்பிலி, பெருமாளே, போய்