பாடல் 130 - பழநி - திருப்புகழ்

ராகம் - ....; தாளம் -
தனன தானன தானன தானன தனன தானன தானன தானன தனன தானன தானன தானன ...... தனதான |
கரிய மேகம தோஇரு ளோகுழல் அரிய பூரண மாமதி யோமுகம் கணைகொ லோஅயில் வேலது வோவிழி ...... யிதழ்பாகோ கமுகு தானிக ரோவளை யோகளம் அரிய மாமல ரோதுளி ரோகரம் கனக மேரது வோகுட மோமுலை ...... மொழிதேனோ கருணை மால்துயி லாலிலை யோவயி றிடைய தீரொரு நூலது வோவென கனக மாமயில் போல்மட வாருடன் ...... மிகநாடி கசட னாய்வய தாயொரு நூறுசெல் வதனின் மேலென தாவியை நீயிரு கமல மீதினி லேவர வேயருள் ...... புரிவாயே திரிபு ராதிகள் நீறெழ வேமிக மதனை யேவிழி யால்விழ வேசெயும் சிவசொ ரூபம கேசுர னீடிய ...... தனயோனே சினம தாய்வரு சூரர்கள் வேரற அமரர் வானவர் வாடிடு தேவர்கள் சிறைகள் மீளவு மேவடி வேல்விடு ...... முருகோனே பரிவு சேர்கம லாலய சீதன மருவு வார்திரு மாலரி நாரணர் பழைய மாயவர் மாதவ னார்திரு ...... மருகோனே பனக மாமணி தேவிக்ரு பாகரி குமர னேபதி னாலுல கோர்புகழ் பழநி மாமலை மீதினி லேயுறை ...... பெருமாளே. |
கூந்தல் கரு நிறமான மேகமோ, இருள் படலமோ? முகம் அருமையான சிறந்த முழு நிலவோ? கண்கள் அம்போ, கூர்மையான வேல்தானோ? உதடுகள் சர்க்கரைப் பாகோ? கழுத்து பாக்கு மரத்தை நிகரானதோ, சங்கோ? கை அருமையான சிறந்த தாமரை மலரோ, இளந்தளிரோ? மார்பகம் பொன் நிறமான மேரு மலையோ, பொற் குடமோ? பேச்சு தேனோ? வயிறு, கருணாமூர்த்தி திருமால் துயில் கொள்ளும் ஆலிலையோ? இடுப்பு ஆனது ஈர்க்குச்சியோ, ஒரு நூலோ? என்று சொல்லுமாறு உள்ள பொன் நிறத்து அழகிய மயில் போன்ற விலைமாதர்களை மிகவும் விரும்பி, குற்றமுள்ளவனாய் வயது ஏறி ஒரு நூறு வருடத்துக்கு மேல் வாழ்வதைக் காட்டிலும் மேலானது (என்னவென்றால்) எனது உயிரை நீ இப்போது உன்னுடைய இரண்டு தாமரை போன்ற திருவடிகளில் சேரும்படி அருள் புரிவதுதான். திரிபுரத்தில் உள்ளவர்கள் வெந்து சாம்பராகுமாறும், மிக்கு வந்த மன்மதனை நெற்றிக் கண்ணால் (எரித்து) மாண்டு வீழுமாறும் செய்த சிவ சொரூபனான மகேஸ்வரனின் பெருமை மிக்க மகனே, கோபத்துடன் வந்த அசுரர்கள் வேர் அறும்படியும், அமரரும், விண்ணோர்களும், வாட்டம் உற்று இருந்த தேவர்களும்* சிறையினின்று மீளும்படியும் கூரிய வேலைச் செலுத்திய முருகோனே, அன்பு கொண்டு தாமரைக் கோயிலில் வாழ்கின்ற லக்ஷ்மியின் மார்பைத் தழுவுகின்றவராகிய திருமால், பாவங்களைப் போக்கும் நாராயணர், பழமை வாய்ந்த, மாயையில் வல்லவரும், பெரிய தவத்துக்கு உரியவரும் ஆகிய திருமாலின் அழகிய மருகனே. பாம்பாகிய அணிகலத்தை உடைய தேவியும், கருணைக்கு உறைவிடம் ஆனவளும் ஆகிய பார்வதி அம்மையின் குமாரனே, பதினான்கு உலகத்தில் உள்ளவர்கள் அனைவரும் போற்றும் பழனி மலை மேல் வீற்றிருக்கும் பெருமாளே.
* அமரர் = அமுதம் உண்டு சாவா நிலை பெற்றவர். வானவர் = புண்ணிய மிகுதியால் வான் உலகில் வாழ்பவர். தேவர் = எட்டு வசுக்கள், பன்னிரு ஆதித்தர்கள், பதினொரு ருத்திரர்கள், இரு அச்வனிகள் என்ற முப்பத்தி முத்தேவர்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 130 - பழநி - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - தானன, திருமால், பொன், அழகிய, மேல், ஆகிய, வந்த, உள்ளவர்கள், தாமரை, அருமையான, அமரர், மீதினி, அரிய, வானவர், முருகோனே, நிறமான, பெருமாளே, சிறந்த