பாடல் 1258 - பொதுப்பாடல்கள் - திருப்புகழ்

ராகம் -
...; தாளம் -
தானாந்த தானந் தாத்த தானாந்த தானந் தாத்த தானாந்த தானந் தாத்த ...... தனதான |
நாகாங்க ரோமங் காட்டி வாரேந்து நாகங் காட்டி நாமேந்து பாலங் காட்டி ...... யபிராம நானாங்க ராகங் காட்டி நாகேந்த்ர நீலங் காட்டி நாயேன்ப்ர காசங் காட்டி ...... மடலூர மேகாங்க கேசங் காட்டி வாயாம்பல் வாசங் காட்டி மீதூர்ந்த போகங் காட்டி ...... யுயி¡£ர்வார் மேல்வீழ்ந்து தோயுந் தூர்த்தன் மோகாந்த காரந் தீர்க்க வேதாந்த தீபங் காட்டி ...... யருள்வாயே ஏகாந்த வீரம் போற்றி நீலாங்க யானம் போற்றி யேடார்ந்த நீபம் போற்றி ...... முகில்தாவி ஏறோங்க லேழுஞ் சாய்த்த நான்மூன்று தோளும் போற்றி யார்வேண்டி னாலுங் கேட்ட ...... பொருளீயும் த்யாகாங்க சீலம் போற்றி வாயோய்ந்தி டாதன் றார்த்து தேசாங்க சூரன் தோற்க ...... மயிலேறிச் சேவேந்தி தேசம் பார்க்க வேலேந்தி மீனம் பூத்த தேவேந்த்ர லோகங் காத்த ...... பெருமாளே. |
பாம்பு போன்ற அங்கமாகிய பெண்குறியின் ரோமத்தைக் காட்டி, கச்சு அணிந்த மலை போன்ற மார்பகங்களைக் காட்டி, புகழத் தக்க நெற்றியைக் காட்டி, அழகிய பலவிதமான வாசனை மிக்க திரவியங்களைக் காட்டி, தேவலோகத்திலிருந்து கொண்டு வரப்பட்ட நீலோற்பல மலர் போன்ற கண்களைக் காட்டி, அடியேன் என் மோகத்தை வெளிப் படுத்தி மடல் ஏறும்படி* மேகம் போல் கருமையான கூந்தலைக் காட்டி, ஆம்பல் போன்ற வாயின் நறுமணத்தைக் காட்டி, மேலே படுத்து அனுபவிக்கும் போக சுகத்தைக் காட்டி, உயிரை வாங்குபவர்களான விலைமாதர்களின் மேலே விழுந்து புணரும் துஷ்டனாகிய என்னுடைய காம மயக்கம் என்னும் இருளை ஒழிக்க, வேதத்தின் முடிவாகிய உண்மைப் பொருளைக் காட்டி எனக்கு அருள் புரிவாயாக. இணை இல்லாத உனது வீரத்தை போற்றுகின்றேன். நீல நிற அங்கத்தை உடைய (உனது) விமானமாகிய மயிலைப் போற்றுகின்றேன். மலர்கள் நிறைந்த கடப்ப மாலையைப் போற்றுகின்றேன். மேகங்கள் தாவி மேலேறிப் படியும் (சூரனது) ஏழு மலைகளையும் தொலைத்த உனது பன்னிரு புயங்களையும் போற்றுகின்றேன். யார் வேண்டிக் கொண்டாலும் கேட்ட வரத்தைக் கொடுத்தருளும் கொடைப் பெருமை கொண்ட உனது அலங்கார குணத்தைப் போற்றுகின்றேன். வாய் ஓயாமல் முன்பு கூச்சலிட்டவனும், பத்து உறுப்புக்களை உடையவனுமாகிய சூரன் தோற்றுப்போக, மயிலின் மீது ஏறி சேவற் கொடியைக் கையில் ஏந்தி, நாட்டில் உள்ளவர்கள் காணும்படி வேலாயுதத்தைத் தாங்கி, நட்சத்திரங்கள் விளங்கி நின்ற தேவர்களின் விண்ணுலகத்தைக் காப்பாற்றிய பெருமாளே.
* மடல் எழுதுதல் .. தலைவன் தலைவியின் அழகை வர்ணித்து ஓர் ஏட்டில் மடலாக எழுதி அவளது ஊருக்குச் சென்று நாற்சந்தியில் ஒன்றும் பேசாமல் ஒருவரது வசைக்கும் கூசாமல் படத்தில் எழுதிய உருவத்தைப் பார்த்தவாறு பகலும் இரவுமாக நிற்பான். அவனது உறுதிகண்டு தலைவியின் வீட்டார் தலைவனுக்கு அவளை மணம் செய்து வைப்பர். முருகன் வள்ளியை ஊரறிய மடல் எழுதி மணம் செய்துகொண்ட காட்சி கந்த புராணத்தில் வருகிறது.
** தேசாங்க சூரன் = தசாங்க சூரன். அவனுடைய பத்து அங்கங்களாவன .. நாமம், நாடு, ஊர், ஆறு, மலை, ஊர்தி, படை, முரசு, தார், கொடி.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 1258 - பொதுப்பாடல்கள் - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - காட்டி, போற்றுகின்றேன், போற்றி, சூரன், உனது, தானாந்த, தானந், தாத்த, மடல், தலைவியின், எழுதி, மணம், பத்து, பெருமாளே, கேட்ட, தேசாங்க, மேலே