பாடல் 120 - பழநி - திருப்புகழ்

ராகம் - ....; தாளம் -
தனதனன தந்த தனதனன தந்த தனதனன தந்த ...... தனதான |
இலகுகனி மிஞ்சு மொழியிரவு துஞ்சு மிருவிழியெ னஞ்சு ...... முகமீதே இசைமுரல்சு ரும்பு மிளமுலைய ரும்பு மிலகியக ரும்பு ...... மயலாலே நிலவிலுடல் வெந்து கரியஅல மந்து நெகிழுமுயிர் நொந்து ...... மதவேளால் நிலையழியு நெஞ்சி லவர்குடிபு குந்த நினைவொடுமி றந்து ...... படலாமோ புலவினைய ளைந்து படுமணிக லந்து புதுமலர ணிந்த ...... கதிர்வேலா புழுகெழம ணந்த குறமகள்கு ரும்பை பொரமுகையு டைந்த ...... தொடைமார்பா பலநிறமி டைந்த விழுசிறைய லர்ந்த பருமயில டைந்த ...... குகவீரா பணைபணிசி றந்த தரளமணி சிந்து பழநிமலை வந்த ...... பெருமாளே. |
கனிந்த பழத்தின் சுவைக்கும் மேம்பட்ட பேச்சும், இரவில் தூங்கும் இரண்டு கண்கள் என்னும் விஷமும், முகத்தின் மேல் (முகத்தை மலரென்று நினைத்து) இசை ஒலிக்கும் வண்டும், இளம் மார்பகங்களாகிய மொட்டுக்களும், கரும்பைப் போல் விளங்கும் தோளும் (கொண்ட என் மகள்) காம மயக்கம் கொண்டு, நிலவின் குளிர்ச்சியும் சூடாக எரிக்க, கரு நிறம் அடைந்து, வேதனைப்பட்டு, நெகிழ்ச்சியுறும் உயிர் நொந்தும், மன்மதன் காரணமாக, தனது நிலை அழிந்து போகும் மனதில், அவளது தலைவர் குடி புகுந்த நினைவு ஒன்றையே கொண்டு இவள் இறந்து படுதல் நீதியாகுமோ? புலாலை மிகவும் குதறிக் கலந்ததும், ஒலிக்கின்ற மணியுடனே புதிய மலர்களைத் தரித்ததுமான, ஒளி வீசும் வேலை ஏந்தியவனே. புனுகு நறு மணம் வீச குற மகள் வள்ளியின் குரும்பை போன்ற மார்பகங்கள் தாக்குதலால் மொட்டு விரிந்த மலர் மாலை அணிந்த மார்பனே, பல நிறங்கள் நெருங்கியதாய், சிறப்பான சிறகுகள் பரந்து ஒளிரும் பருத்த மயிலை வாகனமாக அடைந்துள்ள குக வீரனே, வேலைப்பாட்டுக்கு ஏற்ற சிறந்த முத்து மணிகளை மூங்கில்கள் உதிர்க்கும் பழநி மலையில் வந்து அமர்ந்துள்ள பெருமாளே.
இப்பாடல் அகத்துறையில் 'நாயக நாயகி' பாவத்தில் நாயகியின் நற்றாய் கூறுவதுபோல அமைந்தது.நிலவு, மன்மதன் முதலியவை தலைவனின் பிரிவை மிகவும் அதிகமாக்கும் பொருட்கள்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 120 - பழநி - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - தனதனன, டைந்த, ரும்பு, தந்த, மிகவும், மன்மதன், பெருமாளே, மகள், கொண்டு