பாடல் 1100 - பொதுப்பாடல்கள் - திருப்புகழ்

ராகம் -
...; தாளம் -
தனதன தாத்த தாத்த தனதன தாத்த தாத்த தனதன தாத்த தாத்த ...... தனதான |
வளைகர மாட்டி வேட்டி னிடைதுயில் வாட்டி யீட்டி வரிவிழி தீட்டி யேட்டின் ...... மணம்வீசும் மழைகுழல் காட்டி வேட்கை வளர்முலை காட்டி நோக்கின் மயில்நடை காட்டி மூட்டி ...... மயலாகப் புளகித வார்த்தை யேற்றி வரிகலை வாழ்த்தி யீழ்த்து புணர்முலை சேர்த்து வீக்கி ...... விளையாடும் பொதுமட வார்க்கு ஏற்ற வழியுறு வாழ்க்கை வேட்கை புலைகுண மோட்டி மாற்றி ...... யருள்வாயே தொளையொழு கேற்ற நோக்கி பலவகை வாச்சி தூர்த்து சுடரடி நீத்த லேத்து ...... மடியார்கள் துணைவன்மை நோக்கி நோக்கி னிடைமுறை யாய்ச்சி மார்ச்சொல் சொலியமு தூட்டி யாட்டு ...... முருகோனே இளநகை யோட்டி மூட்டர் குலம்விழ வாட்டி யேட்டை யிமையவர் பாட்டை மீட்ட ...... குருநாதா இயல்புவி வாழ்த்தி யேத்த எனதிடர் நோக்கி நோக்க மிருவினை காட்டி மீட்ட ...... பெருமாளே. |
வளையல்களைக் கையில் மாட்டிக் கொண்டு, காம வேட்கையின் இடையே தூக்கத்தைக் கெடுத்து, ஈட்டி போல் கூரியதும் ரேகைகளை உடையதும் ஆகிய கண்களுக்கு மையை இட்டு, மலர் இதழ்களின் நறு மணம் வீசுகின்ற, கருமேகம் போன்ற கூந்தலைக் காட்டி, காமத்தை வளர்க்கும் மார்பினைக் காட்டி, மயில் போன்ற தமது நடை அழகைக் காட்டி, காமப் பற்று உண்டாகும்படி செய்து புளகிதம் கொள்ளும்படியான வார்த்தைகளை (வந்தவர்களின்) காதில் ஏற வைத்து, கட்டியுள்ள ஆடையைப் புகழ்ந்து பேசிக்கொண்டே இழுத்து, நெருங்கிப் பொருந்திய மார்பில் அணைத்துக் கட்டி விளையாடுகின்ற விலைமாதர்களுக்கு உகந்ததான வழியில் செல்லும் வாழ்க்கையில் விருப்பம் கொள்ளும் இழிவான என் குணத்தை ஓட்டி நீக்கி, எனக்கு அருள் புரிவாயாக. (குழல் போன்ற) தொளைக் கருவிகளில் (பரந்து வரும் இசையின்) மேன்மையைக் கேட்டு, பல விதமான வாத்திய வகைகளை பெருக்க ஒலித்து, உனது ஒளி வீசும் திருவடிகளை தினந்தோறும் போற்றி வணங்கும் அடியவர்களின் துணைவனே, உனது வலிமையைக் கண்டு, தங்கள் விருப்பத்தினிடையே ஒருவர் பின் ஒருவராக முறைப்படி (கார்த்திகை மாதர்களாகிய) தாய்மார்கள் அன்பு வார்த்தைகளைக் கூறி, பாலை ஊட்டி, உன்னைத் தாலாட்டித் துங்கச் செய்த முருகனே, புன்சிரிப்பைச் சிரித்து*, மூடர்களாகிய அசுரர்களின் குலம் அழிய அவர்களை வாட்டி, சோர்வுற்றிருந்த தேவர்களின் துன்பத்தை நீக்கிய குரு நாதனே, தகுதியுள்ள உலகப் பெரியோர்கள் வாழ்த்திப் போற்ற, எனது வருத்தங்களைக் கண்டு, உனது அருட் பார்வையால், என் இரு வினைகளின் நிலையை எனக்குப் புலப்படுத்தி, என்னை இழிந்த குணத்தினின்றும் மீள்வித்த பெருமாளே.
* சூரனுடைய சேனைகள் முருகனைச் சூழ்ந்த போது அந்தச் சேனைகளைப் புன்சிரிப்பால் முருக வேள் எரித்தார்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 1100 - பொதுப்பாடல்கள் - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - காட்டி, தாத்த, நோக்கி, தனதன, உனது, வாட்டி, கண்டு, பெருமாளே, வாழ்த்தி, வேட்கை, மீட்ட