பாடல் 1154 - பொதுப்பாடல்கள் - திருப்புகழ்

ராகம் -
..... ; தாளம் -
தனதன தனனத் தனனத், தனதன தனனத் தனனத் தனதன தனனத் தனனத் ...... தனதான |
கொலைவிழி சுழலச் சுழலச் சிலைநுதல் குவியக் குவியக் கொடியிடை துவளத் துவளத் ...... தனபாரக் குறியணி சிதறச் சிதறக் கரவளை கதறக் கதறக் குயில்மொழி பதறப் பதறப் ...... ப்ரியமோகக் கலவியி லொருமித் தொருமித் திலவிதழ் பருகிப் பருகிக் கரமொடு தழுவித் தழுவிச் ...... சிலநாளிற் கையிலுள பொருள்கெட் டருள்கெட் டனைவரும் விடுசிச் சியெனக் கடியொரு செயலுற் றுலகிற் ...... றிரிவேனோ சலநிதி சுவறச் சுவறத் திசைநிலை பெயரப் பெயரத் தடவரை பிதிரப் பிதிரத் ...... திடமேருத் தமனிய நெடுவெற் பதிரப் பணிமணி சிரம்விட் டகலச் சமனுடல் கிழியக் கிழியப் ...... பொருசூரன் பெலமது குறையக் குறையக் கருவிகள் பறையப் பறையப் பிறநரி தொடரத் தொடரத் ...... திரள்கூகை பெடையொடு குழறக் குழறச் சுரபதி பரவப் பரவப் ப்ரபையயில் தொடுநற் குமரப் ...... பெருமாளே. |
கொலை செய்வது போன்ற கொடுமையைக் காட்டும் கண் மேலும் மேலும் சுழல, வில்லைப் போல் வளைந்த புருவம் மேலும் மேலும் குவிந்து நெருங்க, கொடி போன்ற இடுப்பு மேலும் மேலும் துவண்டு போக, மார்பக பாரங்களாகக் குறிக்கப்பட்ட இடத்தில் உள்ள ஆபரணங்கள் மேலும் மேலும் சிதற, கைகளில் அணிந்துள்ள வளையல்கள் மேலும் மேலும் ஒலிக்க, குயில் போன்ற பேச்சு மேலும் மேலும் கலக்கம் உற, ஆசை மோகத்தால் ஏற்பட்ட புணர்ச்சியில் மேலும் மேலும் ஒன்று பட்டு, இலவம் பூவைப் போல் சிவந்த வாயிதழ் ஊறல்களை மேலும் மேலும் பருகி, கைகளால் மேலும் மேலும் தழுவி அணைத்து, சில நாட்களில் கையில் உள்ள பொருள்கள் அழிந்து போய், நல்ல அருள் குணமும் கெட்டுப் போய், யாவரும் சீ சீ விலகு என்று அதட்டுகின்ற நிலைமையை அடைந்து இந்த உலகத்தில் திரிவேனோ? கடலடி மேலும் மேலும் வற்றிட, திக்குகளின் நிலையும் மேலும் மேலும் அலைய, பெரிய கிரெளஞ்ச மலை மேலும் மேலும் சிதறுண்டு விழ, வலிமை பொருந்திய மேரு என்னும் பொன் மலையாகிய நீண்ட மலை அதிர்ச்சி அடைய, பாம்பு (ஆதிசேஷனின்) சிரத்தில் உள்ள மணி அதனுடைய தலையை விட்டுச் சிதறி விழ, யமனுடைய உடல் (பல உயிர்களைக் கவர்வதால்) அலுப்புண்டு குலைய, சண்டை செய்யும் சூரனுடய உடல் வலிமை மேலும் மேலும் குறைய, (பகைவர்களின்) ஆயுதங்கள் மேலும் மேலும் அழிபட்டு ஒழிய, நரிகளும் கழுகுகள் முதலிய பிறவும் மேலும் மேலும் (பிணங்களைத் தின்னத்) தொடர்ந்து நெருங்க, கூட்டமான கோட்டான்கள் பெண் கோட்டான்களோடு மேலும் மேலும் கூவ, தேவேந்திரன் தொழுது கொண்டே இருக்க, ஒளி வீசும் வேலாயுதத்தைச் செலுத்திய நல்ல குமரப் பெருமாளே.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 1154 - பொதுப்பாடல்கள் - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - மேலும், தனனத், தனதன, உள்ள, நெருங்க, போல், போய், உடல், வலிமை, நல்ல, பெருமாளே, பரவப், துவளத், குவியக், சுழலச், கதறக், பதறப், தொடரத், பறையப், குறையக், குமரப்