பாடல் 114 - பழநி - திருப்புகழ்

ராகம் - மோகனம் /
நாட்டைகுறிஞ்சி; தாளம் - கண்டசாபு - 2 1/2
தானதன தானதன தானதன தானதன தானதன தானதன ...... தந்ததான |
ஆறுமுகம் ஆறுமுகம் ஆறுமுகம் ஆறுமுகம் ஆறுமுகம் ஆறுமுகம் ...... என்றுபூதி ஆகமணி மாதவர்கள் பாதமலர் சூடுமடி யார்கள்பத மேதுணைய ...... தென்றுநாளும் ஏறுமயில் வாகனகு காசரவ ணாஎனது ஈசஎன மானமுன ...... தென்றுமோதும் ஏழைகள்வி யாகுலமி தேதெனவி னாவிலுனை யேவர்புகழ் வார்மறையு ...... மென்சொலாதோ நீறுபடு மாழைபொரு மேனியவ வேலஅணி நீலமயில் வாகவுமை ...... தந்தவேளே நீசர்கட மோடெனது தீவினையெ லாமடிய நீடுதனி வேல்விடும ...... டங்கல்வேலா சீறிவரு மாறவுண னாவியுணு மானைமுக தேவர்துணை வாசிகரி ...... அண்டகூடஞ் சேருமழ கார்பழநி வாழ்குமர னேபிரம தேவர்வர தாமுருக ...... தம்பிரானே. |
'ஆறுமுகம் .. ஆறுமுகம்' என்று ஆறுமுறை சொல்லி திருநீற்றை உடலிலே பூசி அணியும் பெரும் தவசிகள்தம் பாதமலர்களைச் சூடும் அடியவர்களின் திருவடியே துணையென்று கடைப்பிடித்தும், தினந்தோறும், 'ஏறுதற்கு அமைந்த மயில் வாகனனே', 'குகனே', 'சரவணனே', 'என்னுடைய ஈசனே', 'என் பெருமை உனது பெருமை' என்று கூறியும் ஏழையடியார்களின் மனத்துயர் ஏன் எப்படி வந்தது என்று முறையிட்டுக் கேட்டும் (நீ கேளாதிருந்தால் பின்பு) உன்னை யார்தாம் புகழ்வார்கள்? வேதம்தான் பின்பு உன்னை என்ன சொல்லாதோ? திருநீறு துலங்கும் பொன்னார் மேனியுடையாய் வேலனே அழகிய நீலமயில் வாகனனே உமையாள் பெற்ற முருகவேளே அசுரர்கள் அனைவருடனும் என்னுடைய தீவினையாவும் மடிந்தொழிய நீண்ட ஒப்பற்ற வேலாயுதத்தைச் செலுத்திய வடவாக்கினி போன்ற உக்கிரமான வேலனே கோபித்து வந்த பெரும் அசுரன் (கஜமுகாசுரன்) உயிரை உண்ட ஆனைமுகத் தேவரின் தம்பியே மலைச்சிகரம் வான்முகட்டைத் தொடும் அழகு நிறைந்த பழநிவாழும் குமரனே பிரம்ம தேவருக்கு வரம் தந்தவனே முருகனே, தம்பிரானே.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 114 - பழநி - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - ஆறுமுகம், தானதன, பின்பு, வேலனே, பெருமை, உன்னை, வாகனனே, நீலமயில், தம்பிரானே, பெரும், என்னுடைய