பாடல் 112 - பழநி - திருப்புகழ்

ராகம் - ....; தாளம் -
தானா தனதன தானா தனதன தானா தனதன ...... தனதான |
ஆதா ளிகள்புரி கோலா கலவிழி யாலே யமுதெனு ...... மொழியாலே ஆழ்சீ ரிளநகை யாலே துடியிடை யாலே மணமலி ...... குழலாலே சூதா ரிளமுலை யாலே யழகிய தோடா ரிருகுழை ...... யதனாலே சோரா மயல்தரு மானா ருறவிடர் சூழா வகையருள் ...... புரிவாயே போதா ரிருகழல் சூழா ததுதொழில் பூணா தெதிருற ...... மதியாதே போரா டியஅதி சூரா பொறுபொறு போகா தெனஅடு ...... திறலோனே வேதா வுடனெடு மாலா னவனறி யாதா ரருளிய ...... குமரேசா வீரா புரிவரு கோவே பழநியுள் வேலா இமையவர் ...... பெருமாளே. |
தற்பெருமைப் பேச்சு பேசும் பொது மகளிர் காட்டும் ஆடம்பரக் கண்களாலும், அமுதைப் போன்ற இனிய பேச்சாலும், ஆழ்ந்த அழகிய சிரிப்பாலும், உடுக்கை போன்ற இடுப்பாலும், வாசனை மிகுந்த கூந்தலாலும், சூதாடும் கருவி போன்ற இளமையான மார்பகத்தாலும், அழகிய தோடுகள் அணிந்த இரண்டு செவிகளாலும், தளராத மயக்கம் தருகின்ற விலைமாதர்களின் உறவால் வரும் துன்பங்கள் என்னைச் சூழாத வண்ணம் அருள் புரிவாயாக. மலர் நிறைந்த திருவடிகளைச் சிந்தியாமலும், பணியும் தொழிலை மேற்கொள்ளாமலும், எதிரே வந்து மோதுவதைப் பற்றி நினைக்காமலும் போர் செய்ய வந்த அதி சூரனை பொறு பொறு (தீய வழியில்) போகாதே என்று கூறி அவனை அழித்த வல்லமை வாய்ந்தவனே, பிரமனுடன், நீண்ட திருமாலாலும் அறியாதவாரகிய சிவபெருமான் பெற்றருளிய குமரேசனே, வீரைநகரில்* எழுந்தருளியிருக்கும் தலைவனே, பழனியில் இருக்கும் வேலனே, தேவர்கள் பெருமாளே.
* வீரைநகர் திருப்பெருந்துறைக்கு மேற்கே உள்ள ஒரு சிவத் தலம்.இப்பாடல் திருவாவினன்குடியின் கீழும் தரப்பட்டுள்ளது.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 112 - பழநி - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - யாலே, தானா, தனதன, பொறு, அழகிய, சூழா, பெருமாளே