பாடல் 1114 - பொதுப்பாடல்கள் - திருப்புகழ்

ராகம் -
..... ; தாளம் -
தத்தனத் தத்ததன தத்தனத் தத்ததன தத்தனத் தத்ததன ...... தனதான |
தத்துவத் துச்செயலொ டொட்டில்பட் டக்குருகு சத்துவிட் டப்படிபொ ...... லடியேனுஞ் சச்சிலுற் றுப்படியில் விட்டுவிட் டுக்குளறி சத்துவத் தைப்பிரிய ...... விடும்வேளை சுத்தமத் தப்பதவி பெற்றநற் பத்தரொடு தொக்குசற் றுக்கடையன் ...... மிடிதீரத் துப்புமுத் துச்சரண பச்சைவெற் றிப்புரவி சுற்றவிட் டுக்கடுகி ...... வரவேணும் வித்தகத் திப்பவள தொப்பையப் பற்கிளைய வெற்றிசத் திக்கரக ...... முருகோனே வெற்புமெட் டுத்திசையும் வட்டமிட் டுச்சுழல விட்டபச் சைச்சரண ...... மயில்வீரா கத்தர்நெட் டுச்சடையர் முக்கணக் கக்கடவுள் கச்சியப் பர்க்கருள்செய் ...... குருநாதா கற்பதத் தைக்குருகி யுற்பதத் துக்குறவர் கற்பினுக் குற்றுபுணர் ...... பெருமாளே. |
கண்ணியில் அகப்பட்ட பறவை தன் சக்தியை இழந்து விட்டது போல், தத்துவச் செயல்களால் அடியேனாகிய நானும் ஒடுங்கி, இந்தப் பூமியில் பதர் போல் பயனற்றவனாக ஆகி தடுமாற்றம் உள்ள பேச்சுக்களைப் பேசி, உண்மைப் பொருளை விட்டு விலகிப் போகும் போதெல்லாம், பரிசுத்தமான வீட்டுப் பேற்றை அடைந்துள்ள சிறந்த பக்தர்களோடு (என்னை) ஒன்று கூட்டிச் சேர்த்து, தயை செய்து கடையவனாகிய எனது வறுமை தொலைய, பவளம், முத்து இவைகளின் நிறம் கொண்ட பாதங்களை உடைய, பச்சை நிறமானதும், வெற்றியே கொண்டதுமான குதிரையாகிய மயிலை, சுழல்வது போல வேகமாகச் செலுத்தி வந்தருள வேண்டும். ஞானம் பொருந்திய யானை, பவள நிறம் கொண்ட பெரு வயிற்றை உடைய அண்ணல் கணபதிக்குத் தம்பியே, வெற்றி பொருந்திய வேலாயுதத்தைக் கையில் ஏந்திய முருகனே, கிரெளஞ்ச மலையும் எட்டு திக்குகளும் வட்டமாகச் சுற்றிச் சுற்றிச் சுழலும்படிச் செய்த பச்சை நிறமுள்ள தோகையைக் கொண்ட மயில் வீரனே, தலைவர், நீண்ட சடையை உடையவர், (சூரியன், சந்திரன், அக்னி என்ற) முன்று கண்களை உடையவர், (வானமே ஆடையாக உடுத்திய) திகம்பரராகிய கடவுள் காஞ்சியில் வீற்றிருக்கும் சிவபெருமானுக்கு உபதேசம் செய்த குருநாதனே, கற்பக மரமுள்ள தேவநாட்டுக் கிளியாகிய தேவயானைக்கு மனம் உருகியவனே, உன் பதத்தில் ஈடுபட்டு குறவர்கள் வளர்த்த கற்புடைய வள்ளியை அடைந்து, அவளை அணைந்த பெருமாளே.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 1114 - பொதுப்பாடல்கள் - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - தத்தனத், கொண்ட, தத்ததன, சுற்றிச், செய்த, உடையவர், பொருந்திய, உடைய, போல், நிறம், பெருமாளே, பச்சை